முயல் தன் வளைக்குள் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, ஓர் எலி பதற்றத்துடன் உள்ளே நுழைந்தது.
“இங்கே ஏன் வந்தாய்? வெளியே போ” என்று கோபத்துடன் விரட்டியது முயல்.
“முயலே, என்னை மன்னித்துவிடு. கழுகு என்னைத் துரத்தியதால் சட்டென்று உன் வளைக்குள் நுழைந்துவிட்டேன். கழுகு சென்றவுடன் நானும் கிளம்பிவிடுவேன். என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சியது எலி.
முயல் வெளியே எட்டிப் பார்த்தது. எதிரில் இருந்த மரத்தில் கழுகு அமர்ந்திருந்ததைக் கண்டது. “சரி, நீ இங்கேயே இரு. வெளியே போனால் எனக்கும் ஆபத்து” என்றது.
சிறிது நேரம் காத்திருந்துவிட்டுப் பறந்து சென்றது கழுகு. நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தது எலி.
நாட்கள் சென்றன. அன்று வேகமாக இரை தேடிக்கொண்டிருந்தது எலி. எங்கிருந்தோ பறந்துவந்த கழுகு, சட்டென்று கால்களால் எலியைப் பிடித்துவிட்டது.
“ஐயோ… என்னை விட்டுவிடு…”
“அன்று தப்பித்துவிட்டாய். இன்று வசமாகச் சிக்கிக்கொண்டாய். நல்ல பசி. உன்னை விடும் எண்ணம் இல்லை” என்றது கழுகு.
எலியின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது.
“என்னைச் சாப்பிடுவதால் உன் பசி அடங்காது. முயலைச் சாப்பிட்டால், ஒரு வாரத்துக்கு நீ இரை தேட வேண்டாம். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டது எலி.
முயல் என்றதும் கழுகுக்கு ஆசை வந்தது. “நல்ல யோசனைதான். உன்னை எப்படி நம்புவது?” என்று கேட்டது.
“உன்னிடமிருந்து தப்பிக்க முயலிடம் தஞ்சம் அடைந்தேன். அதற்காக வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லிக்கொண்டிருக்க முடியாது. எப்படியும் முயல் எந்த விலங்குக்காவது இரையாகத்தான் போகிறது. அன்று கூட நான் வளைக்குள் நுழையாவிட்டால் முயல் வெளியே வந்திருக்கும்.
உன்னிடம் மாட்டியிருக்கும். அதனால் முயலை மாட்டிவிடுவதில் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. சரி, முயலை நான் பிடித்துக் கொடுத்தால், இனி வாழ்நாள் முழுவதும் என்னை நீ இரையாக்கிக்கொள்ளக் கூடாது. என்ன சொல்கிறாய்?” என்று கேட்டது எலி.
சம்மதத்தைத் தெரிவித்த கழுகு, எலியுடன் பறந்தது. முயலின் வளைக்கு முன் நின்றது. ஆனாலும் தன் பிடியை விடாமல், எலியை இறுக்கிப் பிடித்திருந்தது.
“என்னை விட்டால்தான் உள்ளே சென்று முயலை அழைத்து வர முடியும்? இப்படிப் பிடித்துக்கொண்டால் எப்படி முயல் வெளியே வரும்? என்னை விட்டுவிட்டு நீ கொஞ்சம் மறைவாக நில்.”
கழுகு பிடியைத் தளர்த்தியது. எலி வேகமாக வளைக்குள் புகுந்துகொண்டது.
“என்ன, மீண்டும் இங்கே வந்துவிட்டாய்? கழுகு துரத்துகிறதா?” என்று கேட்டது முயல்.
“ஆமாம். எப்படிக் கண்டுபிடித்தாய்?”
“பதற்றத்துடன் ஓடி வருவதைப் பார்த்துதான் கேட்டேன். இப்படி அடிக்கடி நீ இங்கே வருவதால் எனக்கும் ஆபத்து அதிகம்” என்றது முயல்.
“என்னை மன்னித்துவிடு. உயிரைக் காப்பாற்றிய உன்னை நான் என்றென்றும் மறக்கக் கூடாது. ஆனால், இன்று கழுகிடம் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டதால், உயிர் தப்பிக்க உன்னை மாட்டிவிடுவதாகச் சொல்லியிருக்கிறேன். எனக்கு வேறு வழி தெரியலை” என்று நிறுத்தியது எலி.
“அடைக்கலம் கொடுத்த என்னையே மாட்டிவிட்டுவிட்டாயா?” என்று முயல் கோபம் அடைந்தது.
“ஐயோ, சொல்வதை முழுமையாகக் கேள். நாம் இருவரும் கழுகிடம் சிக்கக் கூடாது.”
“வாயிலில் கழுகு காத்திருக்கும்போது, எப்படிச் சிக்காமல் இருக்க முடியும்?”
“நீயும் நானும் சேர்ந்து வளையைத் தோண்டுவோம். கழுகு இந்த வாயிலில் காத்திருக்கும். நாம் சற்றுத் தூரத்தில் வெளியேறிவிடுவோம். என்ன சொல்கிறாய்? நமக்கு வேறு வழியில்லை” என்றது எலி.
முயலும் எலியும் மண்ணைக் குடைந்துகொண்டே சென்றன. ஒரு மரத்தின் வேர்ப்பகுதியில் துளையிட்டு, வெளியே சென்றன.
“என்னால் நீ வேறு இடம் பார்க்கும்படியாகிவிட்டது. இனி இந்த வளையில் வசிக்காதே. பாதுகாப்பு இல்லை” என்றது எலி.
“என் வளையை விட்டுச் செல்வதில் வருத்தம்தான். ஆனாலும் உன் நல்ல எண்ணத்தைப் புரிந்துகொண்டேன். வேறு பகுதியில் வளை தோண்டிக்கொள்கிறேன். நன்றி. வருகிறேன்” என்று துள்ளிக் குதித்து ஓடியது முயல்.
முயலையும் எலியையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று கழுகு கால் வலிக்கக் காத்துக்கொண்டிருந்தது.
-சு. அபிநயா,
11-ம் வகுப்பு, தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago