இடம் பொருள் மனிதர் விலங்கு: வரலாறு என்ன நினைக்கும்?

By மருதன்

என்ன செய்வது, எல்லாம் நம் தலைவிதி. இவரிடம் வந்து மாட்டிக்கொண்டுவிட்டோம். ஒரு மன்னர் என்றால் எப்படி இருக்க வேண்டும் எனும் அடிப்படைக்கூடத் தெரியாமல் எப்படிதான் இவரெல்லாம் இன்னமும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறாரோ! பாவம் நம் மக்கள், இவர் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கப் போகிறார்களோ!

இவருக்கெல்லாம் எதுக்குத் தலையில் அநாவசியமாக ஒரு மகுடம்? கழற்றி வைத்துவிட்டு விவசாயியைப்போல துண்டுத் துணியைத் தலையில் சுற்றிக்கொள்ளலாமே? எதுக்கு அரண்மனை? பேசாமல் வாடகைக்கு விட்டுவிட்டு எங்காவது ஆற்றங்கரை ஓரத்தில் ஓலைக் குடிசை போட்டுக்கொண்டு வாழலாமே! கையோடு கையாக நம்மையும் வேலையைவிட்டு அனுப்பிவிட்டால் ஏதாவது நல்ல ஊராகப் பார்த்து, குடியேறி பிழைத்துக்கொள்ளலாம்.

பவுத்தத்தைத் தழுவிவிட்டேன் என்று எப்போது அறிவித்தாரோ அந்தக் கணமே இந்த அரண்மனை களை இழந்துவிட்டது. அநாவசியமாகப் போரிட மாட்டாராம். பக்கத்து நாட்டு அரசர்களை வம்பிழுக்க மாட்டாராம்.

வெட்டு, குத்து கிடையாதாம். மீசையைக்கூட முறுக்கிக்கொள்ள மாட்டாராம். ஒரு காலத்தில் புயல்போல் வாளைச் சுழற்றி வீசிய சாம்ராட் சக்கரவர்த்தி இப்படி ஒரே நாளில் பயந்தாங்கொள்ளியாக மாறுவார் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

அமைச்சர் ஒருவர் மன்னரிடம் பேசிப் பார்த்தார். ‘‘மன்னா, குறைந்தது பவுத்தத்தை அரசு மதமாக அறிவிக்கலாமே? புத்தரைத் தவிர, வேறு யாரையாவது வணங்கினால் உங்கள் தலை துண்டிக்கப்படும் என்றோ ஆயிரம் கசையடிகள் தரப்படும் என்றோ அறிவிக்கலாமா?” இந்த நியாயமான கோரிக்கைக்கு மன்னர் அளித்த பதில் என்ன தெரியுமா? ‘‘பவுத்தம் எனக்குப் பிடித்திருக்கிறது.

நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்திருப்பது மக்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? அவர்களுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவரை வணங்கிக்கொள்ளட்டும். இதற்கு எதுக்குக் கொடூரமான தண்டனைகள்?’’

அதோடு நிறுத்தினாரா என்றால் இல்லை. மனிதர்களிடம் மட்டுமல்ல, இனி விலங்குகளிடமும் அன்போடு நடந்துகொள்ளப் போகிறேன். இனி அரண்மனையில் விலங்குகளையும் பறவைகளையும் சமைக்கக் கூடாது. காய்கறி உணவு போதும் என்று சொல்லிவிட்டார். அமைச்சர் மீண்டும் நம்பிக்கையோடு மன்னரிடம் ஓடினார்.

‘‘மன்னா, இதையே ஊர் ஊராகத் தண்டோரா போட்டு அறிவித்தால் என்ன? மன்னர் ரொம்ப சாதுவாகிவிட்டார். அவர் இப்போதெல்லாம் கட்டளைகளே இடுவதில்லை என்று மக்கள் நொந்துபோய் இருக்கிறார்கள். இனி விலங்குகளை நீங்கள் நேசிக்க வேண்டும். எந்த உயிரையும் கொல்லக் கூடாது. மீறினால்... சிறை என்றாவது அறிவிக்கலாமா?”

ஒரு முழம் உபதேசம்தான் பதிலாக வந்தது. ‘‘மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய நான் யார்? எனக்குப் பிடித்ததை நான் சாப்பிடுவதைப்போல் அவர்களுக்குப் பிடித்தமானதை அவர்கள் சாப்பிட்டுக்கொள்ளட்டும். மேலும் இதில் இன்னொரு அறம் சார்ந்த சிக்கலும் இருக்கிறது.

நான் இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டுதான் இருக்கிறேனே தவிர, முற்றாக இன்னமும் கைவிடவில்லை. நானே முழுக்க மாறவில்லை எனும்போது மற்றவர்கள் மாற வேண்டும் என்று கட்டளையிடுவது நீதியா? தர்மமா? பவுத்தம் இதனை ஏற்குமா?’’

ஆயிற்றா? இது நடந்த சில வாரங்களில் கல்வெட்டுகள் அமைக்கும் வேலையைத் தொடங்கி வைத்தார் மன்னர். மக்கள் கூடும் பொது இடங்களில் இந்தக் கல்வெட்டுகள் நிறுவப்பட்டன. சரி, அதில் என்னதான் எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்தால் ஒவ்வொன்றும் கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது. ’சக மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள். போர் தீங்கானது. எல்லா உயிரும் ஒன்றுதான். விலங்குகளை நேசியுங்கள்.

பறவைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள். மரம், செடி, கொடிகளை நேசியுங்கள். நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். பவுத்தம் ஓர் எளிமையான மதம். அது என்னைத் திருத்தியிருக்கிறது.

823b8a6eP2167112mrjpg

நீங்களும் வேண்டுமானால் முயன்று பாருங்கள். மற்றபடி, எந்தக் கட்டாயமும் இல்லை. மன்னர் சொல்கிறேன் என்பதற்காக இவற்றை எல்லாம் கட்டளைகள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். இவை ஆலோசனைகள் மட்டுமே. பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.’

எங்கள் வேதனை இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? இல்லை என்றால் இதையும் கேட்டுவிடுங்கள். சற்றும் மனம் தளராத அந்த அமைச்சர் கல்வெட்டுகளைப் படித்துப் பார்த்துவிட்டு, கட்டக் கடைசியாக ஒருமுறை மன்னரிடம் சென்று கண்ணீர் மல்க விண்ணப்பித்துக்கொண்டார்.

‘‘மன்னா, கல்வெட்டுகளில் ஒரே ஒரு சிறிய மாற்றமாவது செய்யலாமா? மொட்டையாக உங்கள் பெயரை மட்டும் பார்ப்பதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ‘பற்பலப் பராக்கிரமங்களைப் புரிந்த, வீர தீர அசகாய சூரராகிய, நூறு யானைகளைச் சுமக்கும் தோள்களைக் கொண்டவரான, மேலுலகமும் கீழுலகமும் வியந்து வணங்கும் கடவுளாகிய, மன்னருக்கெல்லாம் மன்னர் மாமன்னர் அசோகர் சக்கரவர்த்தி செதுக்கிய கல்வெட்டு இது’ என்றாவது அடியில் சுருக்கமாகப் பொறிக்கலாமா?”

உடனே சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ‘‘யானை, பூனை, மாமன்னர், கடவுள் எல்லாம் எதுக்கு? நானும் உங்கள் எல்லோரையும் போன்ற சாதாரண மனிதன்தானே? என் பெயர் மட்டும் இருந்தால் போதும்.’’

எங்கள் கவலை எல்லாம் இதுதான். இப்படி எல்லாம் அநியாயத்துக்கு அடாவடி செய்தால் நாளை வரலாறு இவரை எப்படி நினைவில் வைத்திருக்கும்? இவருடன் பணிபுரிந்த எங்களை எல்லாம் எப்படி மதிக்கும்? மாபெரும் படைத் தளபதியான நான் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறேன்?

சமையலறையில் அமர்ந்து என்னுடைய பளபளக்கும் வாளைக் கொண்டு வெங்காயத் தோலைச் சீவிக்கொண்டிருக்கிறேன். இதைப் பார்த்தும் அந்த அசோகரின் கல் மனம் மாறவில்லை. நீங்களாவது என்னைப் பார்த்துப் பாவப்பட்டு, என்னோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவீர்களா, நண்பர்களே?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்