மக்களவைத் தேர்தல் என்றால் என்ன, அதன் நடைமுறைகள் என்ன, அது எப்படி நடத்தப்படுகிறது?
இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவின் குடிமக்களான நமக்கு வாக்களிப்பதில் சாதி, மதம், நிறம், இனம், பாலின வேறுபாடுகள் கிடையாது. அனைத்து தரப்பினரும் வாக்களிக்கலாம். 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசனம் இதை உறுதிப்படுத்துகிறது.
மக்கள் ஆட்சி
ஜனநாயக ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டின் குடிமக்கள், நாடாளுமன்றம் வழியாகத் தங்களை ஆள்வதற்கான பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதே மக்களவைத் தேர்தல். அப்படி அமையும் ஆட்சி, ‘பெரும்பான்மை பெற்றவர்களின் ஆட்சி' எனப்படுகிறது.
தேர்தலில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் போட்டியிடுவார்கள், இவர்களே வேட்பாளர்கள். இவர்களில் தங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பார்கள். அதிகபட்ச வாக்குகளைப் பெறுபவரே வெற்றிபெற்றவர். ஒரு தொகுதியில் அதிகபட்ச வாக்குகளைப் பெறும் வேட்பாளர், இரண்டாவதாக வருபவரைவிட ஒரு வாக்கு அதிகம் பெற்றிருந்தாலும் போதும், அவரே வெற்றி பெறுவார். இதற்கு ‘First-past-the-post (FPTP)' முறை என்று பெயர்.
யாரெல்லாம் வாக்களிக்கலாம்?
# 18 வயது நிறைந்த இந்திய குடிமக்கள் அனைவரும்.
# நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒருவரது வசிப்பிடம் எந்தத் தொகுதிக்குள் வருகிறதோ, அங்குதான் வாக்களிக்க முடியும்.
# இந்தியத் தேர்தல் ஆணையம் விநியோகித்த வாக்காளர் அடையாள அட்டை அல்லது அங்கீகிக்கப்பட்ட மற்ற அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
தேர்தல் எப்படி நடக்கிறது?
ஒரு தொகுதியில் ஒரு கட்சி ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்த முடியும். அதேநேரம், ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியும்.
ஒருவர் ஒரு முறைதான் வாக்களிக்க முடியும். வாக்களிப்பதற்கு முன் வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் அழிக்க முடியாத மையால் தேர்தல் அதிகாரி குறியிடுவார். ஒரு வாக்காளர் இரண்டாவது முறை வாக்களிப்பதைத் தடுக்க இப்படிச் செய்யப்படுகிறது.
வாக்காளர்கள் வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தங்களுக்குப் பிடித்த வாக்காளரைத் தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள். முன்பு வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், 2004 முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக நடைபெறுகிறது. இதில் செல்லாத வாக்கு அளிக்க முடியாது. அதேநேரம், வாக்குப்பதிவு இயந்திரங்களை அடுத்த தேர்தலுக்கும் பயன்படுத்த முடியும்.
தங்களுக்குப் பிடித்த வேட்பாளரின் பெயருக்கு எதிரே உள்ள நீல நிறப் பொத்தானை வாக்காளர் அழுத்த வேண்டும். அப்போது வாக்காளர் யாரைத் தேர்ந்தெடுத்தாரோ அவரது பெயர், சின்னத்துக்கு அருகே உள்ள சிறு சிவப்பு விளக்கு எரியும். ‘பீப்' என்ற ஒலியும் கேட்கும். இதெல்லாம் நடந்தால் வாக்கு பதிவாகிவிட்டது என்று அர்த்தம். அத்துடன், இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதைச் சொல்லும் அச்சிடப்பட்ட காகிதமும் வாக்காளரின் பார்வைக்கு 6 விநாடிகளுக்குத் தோன்றும்.
நாடாளுமன்றம் என்றால் என்ன?
இந்தியாவை ஆட்சி செய்யும் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் உண்டு. ஒன்று மக்களவை, இன்னொன்று மாநிலங்களவை. மக்களவை அல்லது கீழவைக்கு 545 உறுப்பினர்கள். இவர்களில் 543 பேர் நேரடியாகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். மக்களவைக்கு ஆங்கிலோ இந்திய சமூகத்தின் இரண்டு உறுப்பினர்கள் நியமன எம்.பி.களாக நியமிக்கப்பட வழி உண்டு. மக்களவையை அவைத் தலைவர் வழிநடத்துவார். மாநிலங்களவை அல்லது மேலவை 245 உறுப்பினர்களைக் கொண்டது. சமூகத்தில் மதிப்பைப் பெற்ற 12 எம்.பி.க்கள் நேரடியாக இதற்கு நியமிக்கப்படலாம். குடியரசு துணைத் தலைவர் அவையை வழிநடத்துவார்.
அதிக அதிகாரம் யாருக்கு?
குடியரசுத் தலைவர் இந்திய அரசின் அடையாளத் தலைவர். அரசியல் சாசனப்படி குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை நேரடியாகவோ அல்லது துணை அதிகார மையம் மூலமோ நடைமுறைப்படுத்தலாம். இருந்தாலும் விதிவிலக்கான சில நேரம் தவிர்த்து நிர்வாக அதிகாரத்தை பிரதமரே செயல்படுத்தி
வருகிறார். மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சி அல்லது கூட்டணி தங்களுக்குள் தேர்ந்தெடுக்கும் தலைவரே, பிரதமர். இரண்டில் ஏதாவது ஓர் அவையில் அவர் உறுப்பினராக இருக்க வேண்டும். அவருக்கு அமைச்சரவை உதவும். பிரதமர், கேபினட் அமைச்சரவை வழங்கும் அறிவுரையின் அடிப்படையில்தான் குடியரசுத் தலைவர் செயல்படுவார். அதேநேரம், அவர்களுடைய அறிவுரை அரசியல் சாசனத்தை மீறாமல் இருக்க வேண்டும்.
2019 முக்கியப் புள்ளிவிவரம்
# 2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 81.40 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியுடன் இருந்தார்கள். இந்த முறை 90 கோடி பேர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதுவே உலகின் மிகப் பெரிய தேர்தல்.
# வாக்களிப்பதற்காக எந்த ஒரு வாக்காளரும் இரண்டு கி.மீ.க்கு மேல் பயணிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. அத்துடன் ஒரு வாக்குச்சாவடி அதிகபட்சமாக 1,500 வாக்காளர்களையே கையாள முடியும். அதன்படி, 10.35 லட்சம் வாக்குச்சாவடிகள், 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த முறை பயன்படுத்தப்பட உள்ளன. பார்வையற்றோர் எளிதாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த முறை முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.
# இந்தத் தேர்தலின் மொத்தச் செலவு ரூ. 30,000 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 150 சதவீதம் அதிகம்.
# தெலங்கானாவில் உள்ள நிஸாமாபாத் மக்களவைத் தொகுதிக்கு இந்த முறை அதிகபட்சமாக 185 பேர் போட்டியிடுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இணைக்கப்பட்ட 12 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் பலரும் உழவர்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago