நம் முதல் சந்திப்பு இப்போதும் நன்றாக நினைவில் இருக்கிறது. எனக்கு அப்போது நான்கு வயது. என்னுடைய ஒரே பொழுதுபோக்கு ஒவ்வொரு நாளும் அப்பா சொல்லும் விதவிதமான கதைகள்தான். ’முன்பொரு காலத்தில் என்னாச்சு தெரியுமா’ என்றுதான் எல்லோரையும்போல் தொடங்குவார். ஆனால், அவர் சொல்லி முடிக்கும்போது ஒரு காடு அல்லது பூ அல்லது மின்னல் அல்லது ஒரேயொரு குட்டி நட்சத்திரமாவது எனக்கு நெருக்கமானதாக மாறியிருக்கும்.
அப்பா, அப்பா அந்த நட்சத்திரம் ஏன் இப்படி இரவெல்லாம் மின்னிக்கொண்டிருக்கிறது என்று கேட்டால், அது தெரியாதா உனக்கு என்று இன்னொரு கதைக்குள் என்னை மூழ்கடிப்பார். கதையிலிருந்து ஒரு கேள்வி.
கேள்வியிலிருந்து ஒரு கதை. இப்படியே இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமா அப்பா என்றால் கன்னத்தைத் தட்டி, நீயென்ன நட்சத்திரமா, தூங்கு என்பார்.
அப்பாவின் அறைக்குள் ஒரு பெரிய அலமாரி இருந்தது. கண்ணாடிக் கதவு போட்டு மூடியிருப்பார். அந்தக் கண்ணாடியின்மீது என் கன்னத்தைச் சாய்த்துக்கொண்டு உள்ளே இருக்கும் ஒவ்வொன்றையும் மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருப்பேன்.
இதென்ன குடுவை? கூம்பு வடிவில் இருக்கும் இந்த விநோதமான பொருளின் பெயர் என்ன? என் இடுப்பளவு இருக்கும் அந்தக் கருவியை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? அந்தக் கண்ணாடி சீசாவுக்குள் கையை விட்டால் என்னாகும்?
இப்படி எல்லாம் உனக்குத் தோன்றும் என்பதால்தான் கண்ணாடி போட்டு மூடியிருக்கிறேன் என்று அப்பா வந்து காதைப் பிடித்துத் திருகுவார். இதை எல்லாம் நான் எப்போது கையில் தொட்டுப் பார்ப்பது என்று ஏக்கத்தோடு கேட்டால், அதற்கான நேரம் வரும்வரை காத்திரு என்பார். சரி காத்திருக்கும்வரை இங்குள்ள ஒவ்வொன்றின் கதையையும் சொல்லுங்கள் என்று போட்டு நச்சரிப்பேன். அறிவியல் என்னும் உன் பெயர் எனக்கு அறிமுகமானது அப்போதுதான்.
பாடமாகவோ சூத்திரமாகவோ அல்ல. ஒரு கதையாகதான் நீ என்னிடம் வந்து சேர்ந்தாய். அதனால்தானோ என்னவோ முதல் பார்வையிலேயே உன்னோடு நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. அந்தப் பூ, இந்தப் பூ என்று மாறி மாறி பறக்கும் பட்டாம்பூச்சிபோல் இயற்பியல், கணிதம், வேதியியல் என்று தேடித் தேடி சுவைத்தேன்.
நீயோ என் ஆர்வத்தைத் தணிக்காமல், மேலும் மேலும் என்னைத் தூண்டிவிட்டு, போக்கு காட்டிக்கொண்டிருந்தாய். நட்சத்திரத்தைப்போல் கைக்கு எட்டாமல் நின்றுகொண்டு கண் சிமிட்டிக்கொண்டிருந்தாய். அப்பா இந்த அறிவியல் என்னைப் பாடாய்ப்படுத்துகிறது. எனக்கு நிறைய தெரிய வேண்டுமே என்று சிணுங்கினேன். கவலைப்படாதே, கல்லூரிக்குப் போனால் வேண்டும் அளவுக்குப் படிக்கலாம் என்றார் அப்பா.
எப்போது பள்ளிப் படிப்பு முடியும் என்று நகம் கடித்தபடி காத்துக்கிடந்தேன். படுத்து உறங்கினால் கனவெல்லாம் நீயே நிறைந்திருந்தாய். மீண்டும் மீண்டும் வந்த ஒரு கனவில் எனக்கென்று ஒரு பெரிய நூலகம் இருந்தது. எடுக்க, எடுக்க முடிவில்லாமல் அதில் புத்தகங்கள் வளர்ந்துகொண்டிருக்கும். இன்னோர் அறைக்குள் நுழைந்தால் ஒரு பெரிய பரிசோதனைக்கூடம் இருக்கும்.
அப்பாவின் அலமாரியில் இருந்ததைவிட, ஆயிரம் மடங்கு அதிகமான கருவிகள் அதில் நிறைந்திருக்கும். அப்பாவின் கதையில் வரும் இளவரசனையும் இளவரசியையும்போல் நீயும் நானும் கைகோத்துக்கொண்டு மகிழ்ச்சியாக அங்கே வாழ்ந்துகொண்டிருப்போம்.
ஆனால், கதைபோல் எளிதானதாக இல்லை வாழ்க்கை. அப்பா வாக்களித்தபடி அலமாரியைத் திறந்துவிட்டார் என்றாலும் என்னைக் கல்லூரியில் சேர்க்க அவரிடம் பணமில்லாமல் போய்விட்டது. பரவாயில்லை அப்பா, எங்காவது குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தோ வீட்டு வேலை செய்தோ பணம் சம்பாதித்துக்கொள்கிறேன் என்று தேற்றிக்கொண்டால் அடுத்த சிக்கல் முளைத்தது.
போலந்தில் அறிவியல் கற்க பெண்களுக்கு அனுமதி இல்லையாம்! ஏ, பெண்ணே உனக்குக் கல்லூரியே தேவைப்படாது எனும்போது எதற்கு அறிவியல் எல்லாம் என்று கேட்டார்கள். எல்லாப் பாடங்களிலும் முதல் மதிப்பெண்ணும் கூடவே ஒரு தங்கப் பதக்கமும் வாங்கி வந்தாலுமா என்று கலங்கிய கண்களோடு கேட்டேன். ஆமாம் என்று திருப்பி அனுப்பினார்கள்.
மேரி, பிரான்ஸ் வந்துவிடு. இங்குள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம் என்று கடிதம் எழுதினார் அக்கா. போதுமான அளவு பணம் சேர்த்துக்கொண்டு பெட்டி, படுக்கையோடு ஒரு சின்ன நாற்காலியையும் தூக்கிக்கொண்டு ரயில் ஏறினேன். ஹாஹா, ரயிலில் இருக்கை இருக்கும் என்று உனக்குத் தெரியாதா என்று சத்தம் போட்டுச் சிரித்த சக பயணியிடம் அமைதியாகச் சொன்னேன். ‘ரயில் ஏறுவதற்கு மட்டும்தான் என்னிடம் பணம் இருக்கிறது, இருக்கைக்கு சீட்டு வாங்கவில்லை’.
எலும்பைத் துளைத்து எடுக்கும் கடுங்குளிர். கொண்டு சென்றிருந்த துணிகளை எல்லாம் உடலில் போர்த்திக்கொண்டாலும் நடுக்கம் குறையவில்லை. மூன்று தினங்கள். என் வாழ்வை மாற்றி அமைத்த அந்தப் பயணம் முடிவுக்கு வந்தபோது நான் இன்னோர் உலகுக்குள் நுழைந்திருந்தேன்.
கண்ணாடிக் கதவுகளும் இரும்புத் திரைகளும் விலகிக்கொண்டன. நாம் கரம் கோத்துக்கொண்டோம். அப்பா விட்ட இடத்திலிருந்து நீ கதை சொல்ல ஆரம்பித்தாய். அள்ள அள்ளக் குறையாத அற்புதங்களை, வண்ணமயமான சிந்தனைகளை, புத்தம் புதிய சாத்தியங்களை நீ வழங்க ஆரம்பித்தாய்.
மனிதர்களை, தாவரங்களை, விலங்குகளை, நட்சத்திரங்களை, நிலவை, கடலை, உலகை நெருக்கமாகப் புரிந்துகொள்ள நீ உதவினாய். நம் நட்பின் பரிசாக ஒன்றல்ல, இரண்டு நோபல் பரிசுகளை எனக்கு அளித்தாய்.
உன்னைவிடச் சிறந்த பரிசு வேறில்லை. நீ இல்லாமல் போயிருந்தால் இந்த உலகம் இருளின் பிடியில் சிக்கிக் கிடந்திருக்கும். நீ கொடுத்த ஒளியில்தான் நானும் மற்றவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீ கொடுத்த அறிவில்தான் நாங்கள் மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருக்கிறோம். அதற்காக உனக்கு வாழ்நாள் எல்லாம் நன்றி சொன்னாலும் போதாது.
இப்படிக்கு,
மேரி கியூரி
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.comஓவியம்: லலிதா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago