திறந்திடு சீஸேம் 25: லோபெங்குலா புதையல்!

By முகில்

தென் ஆப்பிரிக்க நாடான மெட்டாபெலிலேண்ட் என்றால் புரிவது கடினம். கிரிக்கெட் விளையாடும் தேசங்களில் ஒன்றான ஜிம்பாப்வே என்றால் எளிதாகப் புரியும். அதனை கி.பி. 1868 முதல் 1894வரை ஆட்சி செய்த மன்னர் லோபெங்குலா. ஸூலு என்ற ஆப்பிரிக்க இனக்குழுவைச் சேர்ந்தவர். உயரம் ஆறடிக்கும் மேல்.

எடை 120 கிலோவுக்கும் மேல். மாபெரும் வீரர் எல்லாம் இல்லை. தனது மக்களை மிரட்டி, கொடுமைப்படுத்தி, தன்னைக் கடவுள்போல வணங்கச் செய்தவர். கையில் நீண்ட கம்புடன் லோபெங்குலா ஓர் உயரமான பாறைமேல் ஏறி நின்றால், ‘மாமன்னர் லோபெங்குலா! கறுப்புச் சிங்கம்! மகா யானை! வாழ்க வாழ்க!’ என்று மக்கள் காடு அதிர குரல் எழுப்பி வாழ்த்தியே ஆக வேண்டும்.

தன்னை மதிக்காமல், எதிர்க்குரல் எழுப்பும் மக்களுக்குக் கொடூரமான தண்டனைகள் கொடுப்பார் என்பதால், பயந்து எல்லோரும் அவரை வணங்கவே செய்தனர். வீரர்களும் தளபதிகளும் மந்திரிகளும், மன்னர் பேச்சுக்கு மறுபேச்சின்றி சொன்னதைச் செய்தனர். இப்படி மக்களை நேரடியாக அடிமைப்படுத்தியிருந்த லோபெங்குலாவை மறைமுகமாக அடிமைப்படுத்த பிரிட்டிஷார் அங்கே வந்து சேர்ந்தனர்.

ceciljpgசிசெல் ஜான் ரோட்ஸ்

இந்தியாவை ‘கிழக்கு இந்திய கம்பெனி’ மூலம் தங்கள் காலனியாதிக்க நாடாக மாற்றிய பிரிட்டிஷார், தென் ஆப்பிரிக்காவின் வளங்களைச் சுரண்டுவதற்காகவே ‘பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்க கம்பெனி’யைத் தொடங்கினர். தலைமையேற்று அதனை உருவாக்கியவர் டி பியர்ஸ் நிறுவனத்தின் சிசெல் ஜான் ரோட்ஸ். சுரங்கத் தொழிலில் பெரிய ஆள்.

ரோட்ஸ் தலைமையிலான குழுவினர், லோபெங்குலாவுடன் தந்திரமாகப் பேசினர். ‘நாங்கள் இங்கே சின்ன சுரங்கம் அமைத்து, கொஞ்சம் தாதுக்களை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். பதிலாக, உங்கள் மக்களுக்கு நல்ல கூலியுடன் வேலை தருகிறோம். டச்சுக்காரர்களோ, போர்ச்சுக்கீசியர்களோ உங்களைத் தேடி வந்தால் அனுமதி கொடுக்காதீர்கள். பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்க கம்பெனி என்றும் உங்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும்’ என்றார்.

லோபெங்குலா வுக்கு அதிலுள்ள அபாயங்கள் புரியவில்லை. அலட்டிக் கொள்ளாமல் சம்மதித்தார். பிற ஐரோப்பியர்கள் பேசுவதை இவருக்குப் புரியும் படி எடுத்துச் சொல்வதற்காக, ஆப்பிரிக்க மொழிகள் சிலவற்றில் பரிச்சயம் பெற்ற ஜான் ஜேக்கப்ஸ் என்ற ஐரோப்பியரைத் தனது வெளியுறவு காரியதரிசியாகவும் நியமித்துக்கொண்டார். இப்படியாக அங்கே பிரிட்டிஷ் காலனியாதிக்கம் நிறுவப்பட்டது.

பிரிட்டிஷார் தம் மண்ணின் வளங்களைச் சுரண்டுவது அறியாமல், அந்தப் பழங்குடி மக்கள் சுரங்கத்தில் கூலி வேலைக்குச் சென்றுகொண்டிருந்தனர். மன்னர் லோபெங்குலா, தம் மக்களுக்கு ரகசியமாக நிபந்தனை விதித்திருந்தார். அதாவது, சுரங்கத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் ஒருவர், அங்கிருந்து கொஞ்சம் தங்கமோ, சிறு வைரமோ திருடிக்கொண்டு வர வேண்டும்.

அதை மன்னருக்குக் கப்பமாகக் கட்ட வேண்டும். தவறினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இப்படியாக லோபெங்குலாவிடம் பெட்டி பெட்டியாகத் தங்கமும் வைரமும் சேர்ந்தன. இரவில் படுக்கையில் தன்மேல் தங்கத்தையும் வைரத்தையும் கொட்டிக்கொண்டு சிரித்தபடியே படுத்துக் கிடந்தார்.

தாங்கள் பிரிட்டிஷாரால் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணம் மிக மெதுவாகத்தான் மன்னருக்கு வந்தது. அதற்குள் அங்கே பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்க கம்பெனி வலுவாகக் காலூன்றி இருந்தது. வெகுண்டெழுந்த மன்னரது ஸூலு படைக்கும் -  பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்க கம்பெனி படைக்கும் இடையே முதல் மெட்டாபெல்லா போர் (1893) நடந்தது. பிரிட்டிஷார் எளிதில் வென்றனர்.

மன்னர் லோபெங்குலா மாயமானார். சும்மா அல்ல, தாம் சேர்த்து வைத்த செல்வங்களை எல்லாம் வண்டிகளில் அள்ளிக்கொண்டு. பதினான்கு வேலையாட்கள், நான்கு தளபதிகள், ஜான் ஜேக்கப்ஸையும் அழைத்துச் சென்றார். லோபெங்குலா உடனான தனது பயணம் குறித்து எழுதியிருக்கிறார், ஜான் ஜேக்கப்ஸ்.

‘காட்டுக்குள் வடக்கிலும் பின் வேறு திசைகளிலும் பல நாட்கள் பயணம். குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன், புதர்கள் நிரம்பிய ஒரு பகுதியில், யாருமே எளிதில் அண்ட முடியாதபடி இரண்டு பெரிய குழிகள் வெட்டப்பட்டன.

ஆழமான இரண்டு குழிகளிலும் தங்கமும் வைரமும் பிரிக்கப்பட்டு கனமான மரப்பெட்டிகளில் வைக்கப்பட்டுப் புதைக்கப்பட்டன. அவற்றின் மேல் கல்சுவர் கட்டப்பட்டது. பின் அந்தச் சுவரும் வெளியே தெரியாதபடி மண்ணால் மூடப்பட்டது. வேறு யாருமே எதையுமே கண்டுபிடிக்க இயலாதவாறு அந்த இடம் இயல்பாக, இயற்கையாக மாற்றப்பட்டது.

’அங்கிருந்து கிளம்பினோம். வரும் வழியில் ஒருநாள் இரவில் லோபெங்குலா தன் தளபதிகள் நால்வருக்கும் ரகசிய உத்தரவு  பிறப்பித்தார். ‘வேலையாட்களைக் கொன்று விடுங்கள்.’ அதன்படி எல்லோரும் கொல்லப்பட்டனர். பயணம் தொடர்ந்தது. வழியில் மூன்று தளபதிகள், மன்னரால் கொல்லப்பட்டனர். இறுதியில் மன்னரும் நானும் அறுபது வயது தளபதி ஒருவர் மட்டும்  பாதுகாப்பான இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.’

இது ஜான் ஜேக்கப்ஸ் வெளியில் சொன்னது. அவர் சொல்லாததுதான் நிறைய. 1894-லேயே லோபெங்குலா இறந்து போனதாக நம்பப்படுகிறது. ஆனால் எங்கு? எப்படி? ஜேக்கப்ஸ் பல விஷயங்களை வெளியில் விடவில்லை. லோபெங்குலாவின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பதுகூட இதுவரை மர்மமே. சரி, லோபெங்குலாவின் புதையல்?

அந்த ரகசியம் அறிந்த ஜான் ஜேக்கப்ஸ், அதற்குப் பின் பலமுறை அதைத் தேடி காட்டுக்குள் பயணம் மேற்கொண்டார். அவராலேயே அதைக் கண்டடைய முடியவில்லை. ‘லோபெங்குலா சிறந்த மனிதர். என் கண் முன்தான் அந்தச் செல்வங்கள் புதைத்து வைக்கப்பட்டன. அதன் மதிப்பு இருபது லட்சம் ஐரோப்பிய பவுண்ட் இருக்கும்’ -இது 1923-ல் ஜான் ஜேக்கப்ஸ் ஏமாற்றத்துடன் கொடுத்த பேட்டி. அவர் இறுதிவரை அந்தப் புதையலைக் கண்டடையவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லோபெங்குலாவின் புதையலைத் தேடி ஆயிரக்கணக்கானோர் கிளம்பினர். ஜோஹன்ஸ்பெர்கைச் சேர்ந்த லாய்ஸ் எல்லிஸும் அதில் ஒருவர். புதையல் ரகசியம் அறிந்த, லோபெங்குலாவின் மூத்த தளபதியைப் பிடித்தால் காரியம் நடக்கலாம் என அவரைத் தேடி அலைந்தார். 1929-ல் எல்லிஸ் ஒருவழியாக அந்தத் தளபதியைக் கண்டுபிடித்தார்.

தளபதி அப்போது தொன்னூறு வயதுக் கிழவர். படுக்கையில் கிடந்தார். எதைக் கேட்டாலும் வெறும் புன்னகை மட்டுமே அவரிடமிருந்து பதிலாக வந்தது. ‘அவருக்கு எதுவுமே நினைவில் இல்லை’ என்றார்கள்.

அன்று எல்லிஸ் அடைந்த ஏமாற்றம்தான், இன்றுவரை எல்லோருக்கும். லோபெங்குலா புதையல் மர்மம் விலகவே இல்லை. மன்னர் லோபெங்குலா, காட்டு யானையாக மறுபிறவி எடுத்து தனது புதையலைக் காவல் காத்துக்கொண்டிருப்பதாக இப்போதும் ஸூலு மக்கள் நம்புகிறார்கள்.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

16 mins ago

சிறப்புப் பக்கம்

20 mins ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்