திறந்திடு சீஸேம் 24: துட்டன்காமனின் கத்தி!

By முகில்

ஹோவர்ட் கார்டெர், பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர். அவரது வாழ்நாளில் பெரும்பாலான ஆராய்ச்சிகளை எகிப்தில் மேற்கொண்டவர். 1922-ல் எகிப்தின் நைல் நதியோரம் இருக்கும் தீப்ஸ் பகுதியில் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார் ஹோவர்ட்.

சில வாரங்கள் தேடியும் எதையும் கண்டறிய இயலவில்லை. அங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவெடுத்தார்கள். தங்குவதற்காகப் போடப்பட்டிருந்த கூடாரங்களை எல்லாம் கலைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே தண்ணீர் சுமந்து வந்த எகிப்தியச் சிறுவன் ஒருவன், கல்  தடுக்கிக் கீழே விழுந்தான்.

என்ன கல் இது என்று குழுவினர் அந்தப் பகுதியைக் கொஞ்சம் தோண்டினர். அது வெறும் கல் அல்ல. கீழே இறங்கிச் செல்லும் படிக்கட்டின் ஒரு பகுதி என்பதைக் கண்டுகொண்டனர். அந்தப் படிக்கட்டுகளை மேலும் தோண்டியபோது, பழமையான எகிப்திய ஓவிய எழுத்துகள்கொண்ட கல்வெட்டு ஒன்றைக் கண்டார் ஹோவர்ட். நிச்சயம் இது ஓர் அரசரின் கல்லறையாகத்தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்தவர், லார்ட் கார்னர்வோனுக்கு இது குறித்துத் தகவல் அனுப்பினார்.

கார்னர்வோன் பிரிட்டனின் பெரும் பணக்காரர். ஹோவர்டின் ஆராய்ச்சிக்கு நிதி உதவி செய்துகொண்டிருந்தார். அவர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அங்கே வந்துசேர்ந்தார். ஹோவர்ட், கார்னர்வோன் தலைமையில் அவர்களது குழுவினர் அந்தப் பகுதியைத் தோண்ட ஆரம்பித்தனர். கதவு ஒன்று புலப்பட்டது. அதைத் திறந்து உள்ளே செல்லப் பயந்தார்கள்.

காரணம், ‘இந்தக் கல்லறையைத் திறந்து செல்பவர்கள், சிங்கம், குதிரை, நைல் நதியில் வாழும் முதலையால் மரணமடைவார்கள்’ என்று அங்கே மிரட்டலான ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. எகிப்தியச் சிறுவன் ஒருவனை உள்ளே அனுப்பினார்கள். அவன் உள்ளே சென்று, உயிரோடு திரும்பி வந்தான். பின்பு, ஹோவர்ட், கார்னர்வோன் குழுவினர் உள்ளே சென்றார்கள். அது ஏராளமான புதையல்களைக் கொண்டிருந்த ஓர் எகிப்திய அரசரின் கல்லறை. அந்த அரசரின் பெயர், துட்டன்காமன்.

sesame-3jpgநாற்காலி

கி.மு. 1333 முதல் 1324வரை ஆட்சி செய்த எகிப்தின் பதினெட்டாவது வம்ச அரசர், துட்டன்காமன். தனது ஒன்பதாவது வயதிலேயே பதவியேற்ற அவர், 19-வது வயதில் இறந்து போனார். மோசமான எலும்பு முறிவு, கடுமையான மலேரியா என்று இறப்புக்குச் சில காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. எகிப்திய மக்கள், தங்கள் அரசர்களைக் கடவுளாக வழிபடும் நம்பிக்கைகொண்டவர்கள்.

இறப்புக்குப் பிறகு அந்த அரசர்கள் தங்களது ‘மறுவாழ்வில்’ சகல வசதிகளுடனும் வாழ வேண்டும் என்பதற்காக ஏராளமான நகைகளையும் பொருட்களையும் கல்லறைக்குள் வைத்துப் புதைக்கும் வழக்கம் வைத்திருந்தார்கள். அப்படித்தான் துட்டன்காமனின் உடலும் நீண்ட காலம் கெட்டுப் போகாதபடி ‘மம்மி’ ஆக்கப்பட்டது. ஏராளமான செல்வங்களுடன் அவரது உடல் புதைக்கப்பட்டு, பிரமிடு உருவாக்கப்பட்டது.

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் எகிப்தில் ஏராளமான தொல்பொருள் ஆய்வாளர்களும், புதையல் வேட்டைக்காரர்களும் பிரமிடுகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஏனென்றால் கிடைக்கும் செல்வத்தில் பாதியை, அதைக் கண்டெடுப்பவர்களே வைத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இன்னொரு பக்கம், கொள்ளையர்களும் பிரமிடுகளைக் கண்டறிந்து சூறையாடிக்கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் சுமார் 3,200 வருடப் பழமையான, துட்டன்காமனின் கல்லறை, ஹோவர்டால் கண்டுபிடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. எகிப்தில் கண்டறியப்பட்டதிலேயே முழுமையான, முக்கியமான கல்லறை இது.

சரி, துட்டன்காமனின் கல்லறையில் கண்டெடுக்கப்பட செல்வம் என்னென்ன?

துட்டன்காமனின் கல்லறை முகமூடி. அதாவது புதைக்கப்படும் எகிப்து அரசர்களின் முகங்களை உலோகத்தில் அழகான முகமூடியாகச் செதுக்கி, மம்மியின் மீது வைத்துப் பொருத்தி, சவப்பெட்டியை மூடிவிடுவார்கள். துட்டன்காமனின் முகமூடி முழுவதும் தங்கத்தால் ஆனது.

குள்ளநரியின் முகம் கொண்ட அனுபிஸ் என்ற கடவுள் சிலை. கல்லறைகளை இந்தக் கடவுளே பாதுகாப்பார் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. துட்டன்காமனின் முக வடிவம் கொண்ட நான்கு ஜாடிகள். இவை ஒவ்வொன்றிலும் அரசரது உள்ளுறுப்புகள் பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. மறுபிறவியில் அரசர் அந்த உறுப்புகளைப் பொருத்திக்கொள்வார் என்பது அவர்களது நம்பிக்கை.

எகிப்து வெப்பம் நிறைந்த தேசம் அல்லவா? கல்லறைக்கு உள்ளும் வியர்க்கும் அல்லவா? எனவே தங்கத்தாலான, கலைநயமிக்க விசிறி ஒன்றும் அங்கே வைக்கப்பட்டிருந்தது. செனட் என்ற சதுரங்கம் போன்ற விளையாட்டுப் பலகையும், அதற்கான காய்களும் வைக்கப்பட்டிருந்தன.

எகிப்தியர்கள் வலிமையின் அடையாளமாகக் கருதியதும், எகிப்திய அரசர்கள் விரும்பி வளர்த்த செல்லப்பிராணியும் சிறுத்தைதான். துட்டன்காமனின் கல்லறையில் தங்கத்தாலான சிறுத்தையின் தலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

எகிப்தியர்கள் பூமராங் போன்ற வளைந்த கம்புகளை வைத்து பறவைகளை வேட்டையாடி வந்தார்கள். அவையும் கல்லறையில் இருந்தன. இந்தப் பிரபஞ்சத்தை, இந்த உலகத்தை, உயிர்களை, மனித இனத்தை எல்லாம் படைத்ததாக எகிப்தியர்கள் வழிபடும் நீலத்தொப்பி அணிந்த ’ப்டா’ என்ற கடவுளின் சிலை அங்கே இருந்தது. வேறு சில கடவுள்களின் சிலைகளும் இருந்தன. அரசர் அமர்வதற்குத் தங்கத்தாலான அரியணை ஒன்றும், நகர்வலம் செல்ல தங்கத்தாலான ரதம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தன.

பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட அலங்கார வேலைப்பாடுகள் அமைந்த நறுமணத் திரவியம் நிரப்பும் ஜாடி ஒன்றும் இருந்தது. துட்டன்காமனின் தங்கத்தாலான காலணி அங்கே வைக்கப்பட்டிருந்தது. தவிர, அவரது கால் விரல்கள் ஒவ்வொன்றின் மீதும் தங்கத்தாலான அச்சுகள் பொருத்தப்பட்டிருந்தன.

இவை தவிர ஓவியங்கள், கலைப்பொருட்கள், நகைகள், ஆயுதங்கள் போன்றவை கல்லறையில் கண்டெடுக்கப்பட்டன. ஆயுதங்களில் அலங்கார வேலைப்பாடுகள் அமைந்த இரண்டு கத்திகள் இருந்தன. அதில் துட்டன்காமனின் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கத்தி தனித்துவமாகத் தெரிந்தது. 35 செ.மீ. நீளமாக இருந்த அந்தக் கத்தி நிக்கல், கோபால்ட் போன்ற உலோகங்களால் செய்யப்பட்டிருந்தது.

விண்கல்லின் துண்டிலிருந்து அந்தக் கத்தி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்துள்ளனர். இதை நிரூபிக்கும்விதமாக ‘வானத்திலிருந்து உலோகம் வந்தது’ என்று எகிப்தியர்களின் பண்டைய நூல் ஒன்றில் குறிப்பும் காணப்படுகிறது.

இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் துட்டன்காமனின் விண்கல் கத்தி துருப்பிடிக்கவில்லை. அப்போதே உலோகத்தை வார்க்கும் தொழில்நுட்பத்தில் எகிப்தியர்கள் சிறந்து விளங்கியதை இந்தக் கத்தி உறுதிசெய்கிறது.

துட்டன்காமன் கல்லறையில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் பலவும் கெய்ரோ நகர அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சரி, உங்களுக்கு ஏலியன்கள் பிடிக்கும் என்றால் இறுதியாக ஒரு தகவல். நிரூபிக்கப்படாத தகவல்தான்.

எகிப்தியர்களுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு இருந்தது. வேற்றுகிரகத்திலிருந்து எகிப்துக்கு வந்த ஏலியன்களே, அரசர் துட்டன்காமனுக்கு அந்தக் கத்தியைப் பரிசாக வழங்கினார்கள்.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்