கதை: இரண்டு தலை நாகமுத்து

By ஜி.சுந்தர்ராஜன்

தர்மசீலபுரியில் நாகமுத்து நெசவு தொழில் செய்துவந்தார். அவர் நெய்யும் புடவைகளும் வேட்டிகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. ஓரளவு பணமும் கிடைத்தது.

அன்று நாகமுத்து தறியில் அமர்ந்து நெசவு செய்யும்போது, ஒரு பலகை உடைந்து விழுந்தது. அவரால் நெசவு செய்ய முடியவில்லை. புதுப் பலகையைச் செய்வதற்கு மரம் வேண்டும் என்பதற்காகக் காட்டுக்குச் சென்றார்.

ஒரு மரத்தை தேர்வு செய்து, வெட்டப் போனார்.

“வெட்டாதே… வெட்டாதே...” என்று மரம் கத்தியது.

பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்த நாகமுத்து, “அட, மரம் கூடப் பேசுமா?” என்று வியந்தார்.

“என் தறி உடைந்துவிட்டது. எனக்கு இப்போது மாற்றுப் பலகை தேவை. அதுக்காகத்தான் மரம் வெட்ட வந்தேன். எனக்கு வேறு வழி இல்லை” என்றார்.

“இவ்வளவுதானா உன் பிரச்சினை? உனக்கு என்ன  வேண்டும் கேள். என்னை வெட்டும் எண்ணத்தைக் கைவிடு” என்றது மரம்.

நாகமுத்து யோசித்தார். மரத்திடம் என்ன வரம் கேட்பது?

நான் ஏதாவது கேட்டு அது மங்காவுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? “மரமே, வரம் கொடுக்கும் முன் என் மனைவியிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு வருகிறேன்” என்றார்.

“நல்ல யோசனை, சென்று வா” என்றது மரம்.

நாகமுத்து வீட்டுக்கு வந்தார். மங்காவிடம் நடந்ததைக் கூறினார்.

“இவ்வளவு தானா விஷயம்? ரொம்ப நாளா என் மனசுல

இன்னும் ஒரு தறி இருந்தால், அதிக வருமானம் கிடைக்கும்னு தோணுது. அதுக்கு நேரம் வந்துருச்சு.”

“என்ன இன்னொரு தறியா? உனக்கு நெசவு வேலை தெரியுமா?”

“எனக்கு இல்லை. அதுவும் உங்களுக்குத்தான்!”

“எனக்கா? ரெண்டு தறியில் ஒரே நேரத்தில் எப்படி வேலை செய்றது? எனக்கு என்ன நாலு கையா  இருக்கு?

நீ சொல்றது வேடிக்கையாக இருக்கு” என்றார் நாகமுத்து.

“மரத்திடம் சென்று நாலு கையும் ரெண்டு தலையும் கேளுங்க. அந்த வரம் கிடைத்தால் ரெண்டு தறியிலும் நெசவு செய்யலாமே?” என்றார் மங்கா.

“நல்ல யோசனை. நான் அப்படியே வரம் கேட்டு வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, மரத்தைத் தேடி காட்டுக்குச் சென்றார் நாகமுத்து.

“மரமே, எனக்கு ரெண்டு தலையும் நாலு கையும் ஒரு தறியும் வேணும்” என்று நாகமுத்து சொன்ன உடன், மற்றொரு தலையும் இரண்டு கைகளும் உருவாகின. தன் முதுகைத் தானே பார்த்து அதிசயப்பட்டார் நாகமுத்து. தறியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

ஊர் மக்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். குழந்தைகள்  பயந்து ஓடினார்கள்.

அன்று இரவு முழுவதும் நாகமுத்துவால் நிம்மதியாகவே தூங்க முடியவில்லை. தலையை ஒருபுறம் வைத்தால் மறுபுறம் அழுத்தியது. நிம்மதி போனது. அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொண்டு  இரண்டு  தறிகளிலும் அமர்ந்து நெசவு நெய்தார். மங்கா சொன்னதுபோல் இரு மடங்காக நெசவு செய்ய முடிந்தது. ஆனால், முன்புபோல் அவரிடம் யாரும் துணிகளை வாங்குவதற்கு  வரவில்லை. நாகமுத்துவைப் பார்க்கவே அஞ்சி நடுங்கினர்.

நெசவு நெய்த வேட்டிகளும் புடவைகளும் மூட்டை மூட்டையாகத் தேங்க ஆரம்பித்தன. வருத்தப்பட்டார் நாகமுத்து.

“மங்கா, உன் பேச்சைக் கேட்டு நான் இப்படி ஆயிட்டேன்.  சாப்பாட்டுக்குக்கூடப் பணம் இல்லை. மக்கள் என்னைக் கண்டால் பயந்து ஓடுறாங்க. என் நிம்மதியே போயிருச்சு. உன் தவறான யோசனையால்தான் இந்த நிலை.”

“சிந்திக்காமல் யோசனை சொல்லிட்டேன். தவறுதான். நீங்க பழைய நிலையை அடையணும். அதுக்கு ஒரே வழி  அந்த மரத்திடம் போய் வரம் கேட்பதுதான்" என்றார் மங்கா.

மறுநாளே நாகமுத்து மரத்திடம் சென்றார். கோடாரியால் மரத்தை வெட்டப் போனார்.

“என்னை வெட்டாதே. நீ கேட்ட வரத்தை நான்தான் கொடுத்துவிட்டேனே?” என்றது மரம்.

“மரமே என் நிலையைப் பார். என் நிம்மதி போயிருச்சு. ரெண்டு தலை, நாலு கை இருந்தும் என்னால் மகிழ்ச்சியா இருக்க முடியலை. என் மனைவியின் தவறான யோசனையால் தொழிலும் முடங்கிருச்சு. மக்கள்  என்னைக் கண்டாலே ஓடறாங்க” என்றார் நாகமுத்து.

“சரி, உனக்கு என்ன வேண்டும்?”

“எனக்கு எதுவும் தேவையில்லை. நான் மறுபடியும் பழைய நிலைக்குப் போகணும். என் தொழில் மீது நம்பிக்கை இருக்கு. அதை வைத்துப் பிழைச்சுக்குவேன்” என்றார் நாகமுத்து.

“உன் விருப்பப்படியே ஆகட்டும்” என்றது மரம்.

அடுத்த நொடி நாகமுத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார். மரத்துக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

ஊர் மக்கள் மீண்டும் அவரிடம்  நட்புடன் பழகினார்கள். புடவை, வேட்டி வாங்க ஆரம்பித்தனர். ஒரு தறியை மட்டும் வைத்து உழைத்து வாழத் தொடங்கினார். சந்தோஷமும் நிம்மதியும் கிடைத்தன.

- டி .பி. சென்குப்தா, தமிழில்: சு.கி. ஜெயகரன்
கதைச் சுருக்கம்: நேயா | நன்றி: சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை-1

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்