வீட்டில் கழிவறை கட்டித் தராத தன் அப்பா மீது காவல்துறையில் புகார் கொடுத்ததன் மூலம் எல்லோராலும் அறியப்பட்டவர் ஹனிஃபா ஜாரா. புகார் கொடுத்த இரண்டே நாட்களில் அரசாங்கத்தின் மூலம் இவரது வீட்டில் கழிவறை கட்டித்தரப்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வசித்துவரும் ஹனிஃபாவிடம், இந்த யோசனை எப்படி வந்தது என்று கேட்டபோது, “எங்க வீட்ல கழிவறை கிடையாது. நானும் என் அம்மாவும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, டார்ச் விளக்கு எடுத்துட்டு வெளியே போய் காலைக்கடன்களை முடிப்போம். நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்ச பிறகுதான் கழிவறையைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்.
வெளியில் மலம் கழிப்பது சுகாதாரக்கேடுன்னு டீச்சர் பாடம் நடத்தினாங்க. உடனே அம்மா, அப்பாகிட்ட கழிவறை கட்டித் தரச் சொன்னேன். எங்க வீட்டில் அப்ப பணக்கஷ்டம். அதை என்னிடம் சொல்லாமல், நீ முதல் ரேங்க் வாங்கினால் கழிவறை கட்டித் தரேன்னு சொன்னார் அப்பா. ஏற்கெனவே நான் நல்லா படிப்பேன். கழிவறைக்காக இன்னும் நல்லா படிக்க ஆரம்பிச்சேன்” என்று நிறுத்தினார் ஹனிஃபா.
முதல் ரேங்க் வாங்கவில்லையா என்று கேட்டால், “அப்பா சொன்னதில் இருந்து இப்ப இரண்டாம் வகுப்புவரை நான்தான் முதல் ரேங்க். அப்படியும் அப்பா கழிவறை கட்டித் தரலை. கேட்டுக்கிட்டே இருந்தேன். கட்டுவோம்னு சொல்லிக்கிட்டே இருந்தார். அப்பா சொன்னதை நான் செஞ்சிட்டேன். ஆனா, நான் சொன்னதை அப்பா செய்ய மாட்டேங்கிறாரேன்னு வருத்தமா இருந்தது.
என் அம்மாவும் அப்பாவும் இந்தப் பகுதியில் இருக்கிறவங்களுக்கு மனுவும் புகாரும் எழுதிக் கொடுப்பதைக் கவனிச்சேன். நானும் ஒரு புகார் எழுதி, காவல்துறையில கொடுத்தால் அப்பாவைக் கேள்வி கேட்பாங்க. கழிவறையைக் கட்டித் தரச் சொல்வாங்கன்னு நினைச்சேன். நானே ஒரு புகார் எழுதினேன். எங்க அம்மாவை மகளிர் காவல்நிலையத்துக்குக் கூப்பிட்டேன். நான் விளையாட்டுக்காகச் சொல்றேன்னு அம்மா நினைச்சாங்க.
என்னோட கொஞ்ச தூரம் வந்துட்டு, வா வீட்டுக்குப் போகலாம்னு சொன்னாங்க. நான் விடலை. அடம்பிடிச்சு அழைச்சிட்டுப் போயிட்டேன். காவல்நிலையைத்தில் என் புகாரைப் பார்த்து ஆச்சரியமாயிட்டாங்க. தைரியத்தைப் பாராட்டினாங்க. ஆனாலும் அப்பா மேல புகார் கொடுக்கலாமான்னு கேட்டாங்க.
அவர் சொன்ன மாதிரி கட்டித் தரலை, அதான் புகார் கொடுத்தேன்னு சொன்னேன். அப்பாவுக்குத் தகவல் கொடுத்து எங்களை அழைச்சிட்டுப் போகச் சொன்னாங்க” என்று தெளிவாகப் பேசுகிறார் ஹனிஃபா.
இவரது மனு வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனின் கவனத்துக்குச் சென்றது. புகார் கொடுத்த இரண்டாவது நாளே ஹனிஃபா வீட்டுக்கு வந்துவிட்டார் அவர். உடனே அரசு சார்பில் கழிவறை கட்டிக் கொடுத்துவிட்டனர். அந்தப் பகுதியில் கழிவறை வசதி இல்லாத 100 வீடுகளுக்கும் ஹனிஃபாவின் புகார் மூலம் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டால், “வகுப்பில் பாடம் எடுத்தப்ப எங்க வீட்ல மட்டும்தான் கழிவறை இல்லை. இது எனக்குச் சங்கடமா இருந்தது. மூணு மாசமா கழிவறை பயன்படுத்தறேன். இப்ப நானும் அம்மாவும் 4 மணிக்கு எழ வேண்டிய அவசியம் இல்லை. ரொம்ப நிம்மதியா இருக்கேன்.
பள்ளிக்கூடத்தில் என்னை மேடையில் நிக்க வச்சு, தலைமை ஆசிரியர் பாராட்டினாங்க. என்னை மாதிரி ஒவ்வொருத்தரும் நியாயமான காரணத்துக்காகத் தைரியமா போராடணும்னு சொன்னாங்க. சந்தோஷமா இருந்தது. நான் இந்த வயசுலேயே தைரியமாவும் தெளிவாவும் பேசுறதா எல்லோரும் சொல்றாங்க. ஆனா, இந்தத் தைரியத்தையும் தெளிவையும் எங்க அப்பா, அம்மாதான் கத்துக் கொடுத்திருக்காங்க.
வெளியில் போகும்போதெல்லாம் ரயில் நிலையம், நீதிமன்றம், காவல் நிலையம், பேருந்து நிலையம் என எல்லாத்தைப் பத்தியும் எனக்குப் புரியற மாதிரி சொல்லிக் கொடுப்பார் அப்பா. மகளே புகார் கொடுத்துட்டாளேன்னு நினைக்காமல், நியாயத்துக்காக அப்பா மேலயே புகார் கொடுத்துட்டியேன்னு பாராட்டியவர்தான் எங்க அப்பா” என்று சிரிக்கிறார் ஹனிஃபா ஜாரா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago