ஒரே நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘தி வேர்ல்டு பெஸ்ட்’ நிகழ்ச்சியில் இவரது இசை முதல் பரிசை வென்றது. இதன் மூலம் ‘தி வேர்ல்டு பெஸ்ட்’ என்ற பட்டத்துடன் பத்து கோடி ரூபாய் பரிசையும் பெற்றுள்ளார் லிடியன் நாதஸ்வரம்!
சாலிக்கிராமத்தில் இவரது வீட்டுக்குள் நுழைந்தால் பூங்கொத்துகள், பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், இசைக் கருவிகள் என்று கொட்டிக் கிடக்கின்றன. அடுத்த நிகழ்ச்சிக்காக வெளிநாட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த லிடியனிடம், பெயர்க் காரணத்தைக் கேட்டோம், ”என் அப்பா வர்ஷன் சதீஷ் இசைக் கலைஞர். அவர் ‘லிடியன்’ ராகத்தை பியானோவில் வாசித்துக்கொண்டிருந்தபோது நான் பிறந்தேன்.
அதனால் லிடியன் என்று வைத்துவிட்டார். கர்நாடக இசையில் லிடியன் என்றால் கல்யாணி ராகம். நாதமும் ஸ்வரமும் இருக்கும் இசைக் கருவி நாதஸ்வரம் என்பதால் அதையும் சேர்த்துவிட்டார். எல்லோருக்கும் என் பெயர் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்” என்று சிரிக்கிறார் லிடியன்.
எந்த வயதில் இருந்து பியானோ வாசிக்கிறீர்கள் என்று கேட்டபோது, “என் அப்பாவும் அக்காவும் இசைக் கலைஞர்கள் என்பதால் இயல்பாகவே எனக்கும் இசையில் ஆர்வம் வந்துவிட்டது. இரண்டு வயதில் எனக்குப் பரிசாக ஸைலோபோன் இசைக் கருவி கிடைத்தது. அதை யாரும் கற்றுக்கொடுக்காமல் நானே வாசிக்க ஆரம்பித்துவிட்டேனாம். அப்பாவுக்கு ஆச்சரியமாகிவிட்டது. உடனே எனக்கு டிரம்ஸ் வாங்கிக் கொடுத்தார். தபேலா, மிருதங்கம், வயலின் போன்றவற்றையும் கற்றுக்கொண்டேன்.”
இவ்வளவு விஷயங்களை 12 வயதுக்குள் எப்படிக் கற்றுக்கொள்ள முடிந்தது என்று கேட்டால், “நான் இரண்டாம் வகுப்புவரைதான் பள்ளிக்குச் சென்று படித்தேன். பிறகு முழுமையாக இசைத்துறைக்கு வந்துவிட்டேன். அதனால் நிறைய இசைக் கருவிகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அக்கா பியானோ வாசிப்பார். நானும் கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தேன். சீனச் சிறுவன் ஒருவன் பிரமாதமாக பியானோ வாசிப்பதைப் பார்த்தேன். என்னையும் பியானோ முழுமையாக ஈர்த்துக்கொண்டது.
8 வயதில் முறையாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். 2 வருடங்கள் ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பள்ளியில் பியானோ கற்றுக்கொண்டேன். எங்கள் வீட்டில் டிவி கிடையாது. எனக்குப் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு எல்லாமே இசைதான். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பியானோ வாசிப்பேன். சில நேரம் விரல்கள் வலிக்க ஆரம்பித்துவிடும்” என்கிறார்.
‘தி வேர்ல்டு பெஸ்ட்’ பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா என்றால், “நான் ஒவ்வொரு முறை நிகழ்ச்சிக்குச் செல்லும்போதும் அப்பா உற்சாகப்படுத்துவார். ‘ஒருநாள் அமெரிக்காவில் ஆயிரம் பேர் முன்னால் நீ பியானோ வாசிப்பாய். எல்லோரும் எழுந்து நின்று கைதட்டுவார்கள். நீதான் வேர்ல்ட் பெஸ்ட் என்று பாராட்டுவார்கள்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
அதனால் எந்த நிகழ்ச்சியையும் நான் சாதாரணமாக நினைத்ததில்லை. அதேநேரம் என்னுடைய வயதுக்கு அந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றெல்லாம் யோசித்ததும் இல்லை. எனக்கு பியானோ வாசிக்கத் தெரியும். நூறு சதவீதம் அர்ப்பணிப்போடு வாசிப்பேன்.
அப்பா உற்சாகப்படுத்த சொன்ன வார்த்தைகள் இன்று நிஜமாகிவிட்டன. ஆனாலும் போட்டியில் நான் வெற்றி பெற்றதை அறிவிக்கும்போது, அந்த வாய்ப்பை இழந்த சகப் போட்டியாளர்களை நினைத்து வருத்தமாக இருந்தது” என்று ஆச்சரியப்படுத்துகிறார் லிடியன்.
பியானோ போன்ற இசைக் கருவிகளைப் பெரியவர்கள் வாசிப்பதே எளிதல்ல. ‘தி வேர்ல்டு பெஸ்ட்’ நிகழ்ச்சியில் கண்களைக் கட்டிக்கொண்டு வாசித்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களில் இரண்டு விதமான ராகங்களை இசைத்து, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
‘குழந்தை இசை மேதை’ என உலக இசைக் கலைஞர்களால் அழைக்கப்படும் லிடியனுக்கு, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் ஆதர்ச நாயகர்கள். 12 வயதில் உலக சாதனை நிகழ்த்திவிட்டாலும், வேறு ஏதாவது லட்சியம் இருக்கிறதா என்று
கேட்டதற்கு, “உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பீத்தோவன் உருவாக்கிய ‘Moonlight Sonata’ இசையை நிலவுக்குச் சென்று வாசிக்க ஆசை. ’ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற நிறுவனம் எதிர்காலத்தில் நிலவுக்கு இருபது கலைஞர்களை அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது. என்னையும் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்பது இப்போதைய விருப்பம்” என்று கூறும் லிடியனுக்கு லட்சியம் அனைத்தும் நிறைவேறட்டும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago