இடம் பொருள் மனிதர் விலங்கு: புத்தரின் புன்னகை

By மருதன்

நான் என்ன செய்தாலும் புத்தருக்குக் கோபமே வராது, அவரைப் போன்ற ஒரு பரம சாதுவைப் பார்க்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் அது உண்மையல்ல. புத்தருக்கும் கோபம் வரும். உதாரணத்துக்கு, ‘ஹாஹாஹா’ என்று நீங்கள் சத்தமாகச் சிரித்தால் புத்தருக்குப் பிடிக்காது.

“இப்போது என்ன ஆகிவிட்டது என்று இப்படி ஊரே பயந்து ஓடும் அளவுக்குச் சிரிக்கிறீர்கள்?” என்று ஓர் அதட்டல் போடுவார். சிரிப்பு என்பது அமைதியாக நிகழ வேண்டும். உடல் அதிரக் கூடாது. நிலம் அதிரக் கூடாது. வாய் நடுங்கக் கூடாது. ஒரு புழு, பூச்சிகூட உங்கள் சிரிப்பைப் பார்த்து அஞ்சக் கூடாது. என் முகத்தைக் கவனமாகப் பாருங்கள். இதுதான் சிரிப்பு.”

அந்தச் சிரிப்பு எப்படி இருக்கும் என்றுதான் நமக்குத் தெரியுமே! ஓர் அங்குலம் அதிகம் விரிந்தாலும் உதடுக்குச் சுளுக்கிவிடும் என்பதுபோல் பார்த்துப் பார்த்து கவனமாக உதிர்த்த சிரிப்பு அது. சிரிப்புகூட இல்லை அது, வெறும் புன்னகை மட்டும்தான். உண்மையைச் சொல்வதானால் புன்னகைக்கு இன்னும்கூட உதடு கொஞ்சமே கொஞ்சம் விரிந்தாக வேண்டும். புத்தரின் உதட்டில் இருப்பது புன்னகையை விடவும் ஒரு சுற்று குறைவானது. இதுக்கு இனிமேல்தான் யாராவது பெயர் வைக்க வேண்டும்.

பொது இடங்களில் சத்தமாகச் சிரிக்கக் கூடாது என்கிறார் புத்தர். சரி, வீட்டில் தனியே சிரித்துக்கொள்ளலாமா என்றால் அதற்கும் முறைக்கிறார். கூடாதாம். சரி, வீட்டில் வேண்டாம். ஓர் அறைக்குள் சென்று கதவை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு வாய்விட்டுச் சிரிக்கலாமா என்றால் தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டி மறுக்கிறார். எங்கும் எப்போதும் சிரிப்பே கூடாதாம்.

ரொம்பவும் தேவைப்பட்டால், வேறு வழியில்லை என்றால், மிக மிக அவசியம் என்றால் போனால் போகட்டும் என்று மின்னல்போல் ஒருமுறை புன்னகை செய்யலாம். அதுவே அதிகம்.

”சிரிப்பதற்குக் கூடவா இப்படி எல்லாம் கணக்குப் பார்க்க வேண்டும்? இது உங்களுக்கே அநியாயமாக இல்லையா சித்தார்த்தரே?” என்று கேட்டால், ”அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அடுத்து பல முக்கியமான தத்துவ விவாதங்களை எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது, பிறகு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு, கண்களை மூடிக்கொண்டு கைகளையும் கட்டிக்கொண்டு மரத்தடியில் சென்று அமர்ந்துவிடுகிறார் புத்தர்.

பவுத்த மடாலயங்களில் சிரிப்புக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அனுமதிக்கப்பட்ட அளவு போக கொஞ்சம் அதிகமாக நீங்கள் வாயைத் திறந்தால் போதும், அச்சச்சோ என்ன செய்யப் போகிறீர்கள் என்று விழுந்தடித்துக்கொண்டு ஒரு துறவி ஓடிவருவார். ”ஒன்றுமில்லை பிட்சு, வாய்க்குள் ஒரு கொசு போய்விட்டது. வெளியில் செல்லும் வழி எங்கே என்று அதுக்குத் தெரியவில்லை. பாவமில்லையா, அதான் உதவிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்.

புத்தர் சிரித்ததில்லை. எனவே நாமும் சிரிக்கக் கூடாது. புத்தர் சிரிப்புக்கு எதிரானவர். எனவே, நாமும் சிரிப்புக்கு எதிராக இருக்க வேண்டும். இதுதான் பிட்சுகள் அளிக்கும் விளக்கம். சந்தேகம் இருந்தால் புத்தரின் சிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள். புத்தரின் ஓவியங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

புத்தர் பற்றிய புத்தகங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு படித்துப் பாருங்கள். எங்காவது ’ஹாஹா’ என்று சத்தம் வருகிறதா? அவ்வளவு பெரிய தத்துவ ஞானியே சிரிக்காதபோது, நாம் சிரிக்கலாமா? அவர் தடை செய்திருக்கும் ஒன்றை நாம் செய்யலாமா?

சரி, புத்தர் சிரிப்பைத் தடை செய்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டால், இதோ பாருங்கள் என்று ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்து தருகிறார் பிட்சு. இதை புத்தரே எழுதினாரா? இல்லை அவர் சொன்னதை வைத்து எழுதியிருக்கிறார்கள்.

ஓ, அப்படியானால் புத்தர் சொன்னதை யார் அருகிலிருந்து கேட்டது? யார் அதை எழுதியது? அதை புத்தர் படித்துப் பார்த்து அங்கீகரித்தாரா என்று கேட்டால் பிட்சுவின் முகம் தக்காளிப் பழம்போல் மாறுகிறது.

இங்கேதான் நமக்கான விடை ஒளிந்துகொண்டிருக்கிறது. சந்தேகமில்லாமல், புத்தர் ஒரு மாபெரும் தத்துவ ஞானி. ஆனால் அவர் இப்போது நாம் காணும் சிலைகளில் இருப்பதைப் போல்தான் இருந்தாரா என்பது ஒருவருக்கும் தெரியாது. நிச்சயம் இருபத்து நான்கு மணி நேரமும் மரத்தடியில் கண்களை மூடிக்கொண்டு அவர் அமர்ந்திருந்தார் என்று சொல்ல முடியாது.

இருபத்து நான்கு மணி நேரமும் தத்துவம் பற்றிதான் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றும் சொல்ல முடியாது. அவரும் மனிதர்தானே? நாள் கணக்கில், மாதக்கணக்கில் காலை மடக்கி உட்கார்ந்திருக்க முடியுமா? அவருக்குத் தாகம் எடுக்காதா? பசிக்காதா? சிரிப்பு வராதா? கொசு வந்தால், ‘உஸ் போ அங்கே’ என்று விரட்டியிருக்க மாட்டாரா?

ஆக, பிரச்சினை புத்தரல்ல. அவரை அப்படி மாற்றி வைத்திருக்கும் மற்றவர்கள்தான். புத்தர் பெரிய சிந்தனையாளர் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக அவர் முகத்தை உம்மென்று மாற்றி வைத்திருக்கிறார்கள். சிந்தனையாளர் வாய்விட்டுச் சிரிக்க முடியுமா? எனவே புத்தர் சிலை சிரிக்கவில்லை. எனவே, புத்தரின் ஓவியத்தில் சிரிப்பில்லை. புத்தரின் நூல்களில் உலகத் தத்துவங்கள் எல்லாம் இருந்தாலும் ‘ஹா’ என்று ஒரு சின்ன ஒலிகூட இல்லை.

சீனர்களும் ஜப்பானியர்களும் பார்த்தார்கள். இதெல்லாம் எங்களுக்குச் சரிப்பட்டு வராது என்று, ஒரு நாள் சிரிக்கும் புத்தரை உருவாக்கிவிட்டார்கள். எங்கள் புத்தரும் சிந்தனையாளர்தான். மாபெரும் அறிவாளிதான். அமைதியானவர்தான், சாதுவானவர்தான். ஆனால் அவர் சிரிப்பைத் தடை செய்யவில்லை என்பதோடு எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பவர்.

உங்கள் புத்தரைப்போல் அளந்து அளந்து சிரிப்பவர் அல்ல. புத்த மடாலயமே அதிரும்படி சிரிக்கக்கூடியவர். ஏன், இந்தத் தெருவே, ஊரே, நாடே, உலகமே அதிரும்படி சிரிக்கக்கூடியவர். மற்றவர்களின் துன்பங்களைக் கண்டு சிரிக்கக் கூடாது என்று மட்டும்தான் எங்கள் புத்தர் சொல்கிறார். மற்றபடி அனைவரும் ஒன்றாக, மகிழ்ச்சியாக வாய்விட்டுச் சத்தமாகச் சிரிக்கலாம். தவறே இல்லை.

ஆம், என்கிறார் இந்திய புத்தரும். நானும் உங்களைப்போல் சிரிக்க விரும்புகிறேன். உங்களுடன் இணைந்து சிரிக்க விரும்புகிறேன்!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியம்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்