அந்தப் பவுத்த மடாலயத்தில் மூத்த ஆசிரியர் ஒருவர் வசித்துவந்தார். அவரது அறையில் பெரிய பழைய மேஜை ஒன்று இருந்தது. காலையில் தூங்கி எழுந்ததும் தலையைக் குனிந்து அந்த மேஜையை வணங்குவார். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு மீண்டும் ஒரு வணக்கம். சில நேரம், தன் நடுங்கும் கையால் அந்த மேஜையை இதமாக வருடிக் கொடுப்பார். ஒரு பூனையை அல்லது நாய்க்குட்டியை வருடிக் கொடுப்பதுபோல!
இவர் உண்மையில் என்னதான் செய்கிறார்? இவரைப் பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள் திரண்டுவருவது வழக்கம். ஆனால், இவரிடம் ஏன் இப்படி ஒரு குழந்தைத்தனம்?
போயும் போயும் ஒரு மேஜைக்கு ஏன் இவர் செல்லம் கொடுக்கிறார்? ஏன் இப்படி விநோதமாக நடந்துகொள்கிறார்?
ஒரு நாள் ஆசிரியர் வகுப்பெடுத்து முடித்துக் கிளம்பும்போது, இளம் மாணவர் ஒருவர் எழுந்து நின்றார். ‘‘ஐயா, உங்களுடைய மேஜை பற்றி எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?’’
‘‘ஓ தாராளமாகக் கேளேன்” என்றார் ஆசிரியர்.
‘‘உங்கள் மேஜையில் தேவதையோ வேதாளமோ புகுந்துகொண்டிருக்கிறதா?” ஆசிரியர் சத்தமாகச் சிரித்தார். ‘‘அதெல்லாம் ஒன்றுமில்லையே.
அது ஒரு பழைய மேஜை.அவ்வளவுதான்.”
‘‘பிறகு ஏன் நீங்கள் மேஜையைத் தினமும் வணங்குகிறீர்கள்?”
‘‘ஓ, அதுவா? இந்த மேஜைதான் என்னுடைய ஆசிரியர். இந்த உலகை நான் புரிந்துகொண்டதற்குக் காரணமே இந்த மேஜைதான்.”
கேள்வி கேட்ட மாணவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வகுப்பறையும் விழிப்பதைக் கண்டு ஆசிரியர் புன்னகை செய்தார்.
‘பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் இது. என்னை அறிவில் வெல்ல இந்த உலகில் யாருமே இல்லை என்று நான் நினைத்துக்கொண்டிருந்த நேரம் அது. ஒருநாள் என் கனவில் இந்த மேஜை வந்தது. ‘ஏ, மானிடனே! உனக்கு எல்லாம் தெரியும் என்று அகந்தையோடு இருக்கிறாயே. முதலில் என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் சொல்’ என்று கேட்டது. ‘நீ ஒரு மேஜை, அவ்வளவுதானே. இதில் என்ன இருக்கிறது’ என்று நான் கேட்டேன்.
உடனே அந்த மேஜை சிரித்தது. ‘நான் ஒரு மேஜை என்பது மட்டும்தான் உனக்குத் தெரியுமா? சரி, நான் எந்த மரத்தில் இருந்து வந்தேன்? அந்த மரம் எந்தக் காட்டில் வளர்ந்திருந்தது? அந்தக் காட்டில் வேறு என்னென்ன மரங்கள் இருந்தன? நான் முழுக்க ஒரே மரத்தில் செய்யப்பட்டவன் என்று உறுதியாக உன்னால் சொல்ல முடியுமா? உன் அறைக்கு என்னை யார் சுமந்து வந்தார்கள்? அவர்களை உனக்குத் தெரியுமா? எந்த வண்டி என்னைச் சுமந்து வந்தது? அந்த வண்டியை யார் ஓட்டியது? யார் அதை வண்டியில் ஏற்றியது?’’
idam-2jpgஆசிரியர் தொடர்ந்தார். ‘‘அதற்கு முன்பு, மரத்தை வெட்டியவர்கள் யார்? சுமந்தவர்கள் யார்? பல்வேறு கருவிகளைக்கொண்டு என்னை உருவாக்கியவர்கள் யார்? அதற்கும் முன்பு போவோம். நான் ஒரு விதையாக இருந்தபோது எந்தப் பறவை என்னைச் சுமந்து சென்றது? அந்தப் பறவை எந்தக் கூட்டில் வசித்தது? எப்போது பெய்த மழையில் நான் வளர ஆரம்பித்தேன்?
எந்த மண்ணைத் துளைத்துக்கொண்டு என் வேர் சென்றது? என் இலைகளின் நிறம் என்ன? என் பூக்களைப் பார்த்திருக்கிறாயா? என் கனிகளை எந்தெந்தப் பறவைகள் உண்டன என்று தெரியுமா? அவை மகிழ்ச்சியாக என்னென்ன பாடல்களைப் பாடின என்று தெரியுமா? அந்தப் பாடலின் மொழி தெரியுமா?’’
சற்று மூச்சுவிட்டுக்கொண்டார். ‘‘என் மூதாதையர்களை உனக்குத் தெரியுமா? வெள்ளத்திலும் வெப்பத்திலும் வறட்சியிலும் நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று தெரியுமா? சூரியனுக்கும் எனக்கும் உள்ள உறவு உனக்குத் தெரியுமா? நான் எப்படிப்பட்ட இரவுகளைக் கண்டிருக்கிறேன் என்று தெரியுமா? ஒரு சாதாரண மேஜையான என்னை நீ தெரிந்துகொள்ள வேண்டுமானால்கூட ஒட்டுமொத்த உலகையும் நீ ஆழ்ந்து கற்க வேண்டும். நான் எங்கிருந்து
வந்தேன் என்பதை அறிந்துகொள்ள இந்த உலகம் எங்கிருந்து வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். நான் எப்படி உருவாக்கப்பட்டேன் என்னும் ரகசியம் தெரிய வேண்டுமானால் நீ அறிவியலும் சூழலியலும் தொழில்நுட்பமும் வரலாறும் கணக்கும் இசையும் உயிரியலும் இன்னும் எத்தனை எத்தனையோ துறைகளையும் கற்றாக வேண்டும். சாதாரண மேஜையான என்னைக் கற்கவே இவ்வளவு விஷயங்கள் தேவைப்படும்போது, உலகைத் தெரிந்துகொள்ள நீ எவ்வளவு கற்க வேண்டும் என்று நினைத்துப் பார்.’’
சற்று நிறுத்திவிட்டு மாணவர்களைக் கூர்ந்து கவனித்தார் ஆசிரியர். ‘‘எனக்கு எல்லாம் தெரியும் என்னும் நினைப்பு அன்றோடு அழிந்தது. என்னுடைய கண்களைத் திறந்து உலகைக் காட்டியது இந்த மேஜைதான். அதனால்தான் நான் அதை மதிக்கிறேன். இந்த மேஜையை முழுக்கப் புரிந்துகொள்ளும்வரை நான் கற்றுக்கொண்டே இருப்பேன், உங்களுக்கெல்லாம் கற்றுக் கொடுத்துக்கொண்டும் இருப்பேன்.’’
ஆசிரியர் வெளியேறியதும் மாணவர்கள் பெருமூச்சு விட்டனர். ‘‘இந்த மேஜைக்கே இவ்வளவு கதையா? அப்படி என்றால் பானை, பாய், பலகை, கூரை, பல்லி என்று இந்த அறையில் இருக்கும் ஒவ்வொன்றையும் நாம் எப்போது படித்து முடிப்பது?’’
கிளம்பிவிட்டார் என்று நினைத்த ஆசிரியரின் குரல் தொலைவில் இருந்து ஒலித்தது. ‘‘எதையும் யாராலும் படித்து முடிக்க முடியாது. முடியும்போது எல்லலாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.’’
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியம்: லலிதா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago