இடம் பொருள் மனிதர் விலங்கு: நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்?

By மருதன்

கை கால், முகம், தலை, வயிறு, பாதம், உள்ளங்கை என்று எங்கு பார்த்தாலும் அழுக்கு. ஆடை அழுக்கு, சாலை அழுக்கு. கண்களுக்குப் புலப்படவில்லை என்றாலும்கூட இங்கே காற்றும் அழுக்காகத்தான் இருந்தாக வேண்டும். என்னைத் தீண்டிச் செல்லும்போது அது மட்டும் எப்படிச் சுத்தமாக இருக்க முடியும்? நான் மட்டும் அழுக்கா அல்லது என்னைச் சுற்றிலும் உள்ள அனைத்தும் அழுக்காக இருக்கிறதா? ஒருவேளை ஒட்டுமொத்த ரஷ்யாவும் இப்படித்தான் இருக்கிறதோ?

வோல்கா ஆற்றங்கரையில் அமர்ந்து வானத்தில் பறக்கும் பறவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே யோசித்துக்கொண்டிருந்தார் மாக்சிம் கார்க்கி. மற்ற குழந்தைகளைப்போல் என்னையும் அம்மா, அப்பா ஒழுங்காகப் படிக்க வைத்திருந்தால் நான் இப்படி இருந்திருக்க மாட்டேனோ என்னவோ! முதன்முறையாகப் பள்ளிக்கூடத்துக்குள் காலடி எடுத்து வைக்கும்போது கிட்டத்தட்ட ஒன்பது வயது. கூச்சமாகதான் இருந்தது.

சரி, இப்போதாவது தொடங்கினோமே என்று ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். குளித்து, சாப்பிட்டு, புத்தகங்களைச் சுமந்துகொண்டு, ‘அம்மா நான் பள்ளிக்கூடம் போகிறேன்’ என்று கையசைத்துவிட்டு வெளியில் ஓடும்போது இதோ இந்தப் பறவைகளைப்போலதான் உணர்ந்தேன்.

இந்தப் பறவைகளைப்போலவே அப்போது நான் சுத்தமாகவே இருந்தேன். பிறகு என்ன ஆனதோ ஏது ஆனதோ தெரியவில்லை! தச்சராக இருந்த அப்பாவுக்கு வேலைகள் வருவது நின்று போனது. மேஜைக்கு வந்து சேரும் உணவு வகைகள் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தன. பிறகு மேஜையையே காணோம்! பயப்படாதே, சரியாகிவிடும் என்றார் அம்மா. அங்கும் இங்கும் ஓடி ஏதேதோ சின்னச் சின்ன வேலைகள் செய்தார். பசி போவேனா என்றது.

பிறகு காலரா நோய் தாக்கி அப்பா இறந்து போனார். அதே நோய் என்னையும் ஒருநாள் பிடித்துக்கொண்டது. அதற்காகவே காத்திருந்ததுபோல் என் பள்ளிப் படிப்பும் முடிவுக்கு வந்தது. சொல்ல முடியாத வேதனையோடு தவித்த அம்மா, அம்மாபோலவே இல்லை. ஒருநாள் அவரும் இறந்துதான் போனார். அப்போது என்னைப் பிடித்துக்கொண்ட அழுக்கு இது. இன்றுவரை அகலவில்லை. அப்போது ஆரம்பித்த பெரும்பசி. இன்னும் அடங்கியபாடில்லை. அப்போது ஆரம்பித்த வறுமையும் வெறுமையும் இன்னமும் விட்டுப் பிரிவதாயில்லை.

எஞ்சியிருந்த ஒரே உறவு, நிஷ்னி நோவோகிராடில் இருந்த தாத்தா வீடுதான். பாவம் குழந்தை என்று அன்போடு அணைத்துக்கொள்ளும் தாத்தா அல்ல இவர். ஏற்கெனவே வீட்டில் தலைகள் அதிகம், இதில் நீ வேறயா என்று கடுகடுத்தார். ”உட்கார்ந்து நன்றாகச் சாப்பிடலாம், சுற்றித் திரியலாம் என்று கனவுக்கோட்டை கட்டாதே. ஏதாவது சம்பாதித்து வா” என்று கையைப் பிடித்து வெளியில் தள்ளினார். எப்படிச் சம்பாதிப்பது என்று நான் திக்கித்திணறிக் கேட்டபோது, அவர் முகம் சிவந்தது. ’போய் குப்பை பொறுக்கு!’

முதலில் தயக்கமாக இருந்தது. பிறகு பழகிவிட்டது. காலையிலேயே ஒரு கோணியைக் கொண்டுபோய்விடுவேன். சாலை ஓரங்களைப் பார்த்துக்கொண்டே போவேன். காகிதங்கள், அட்டைகள், பெட்டிகள், உடைந்த பொருட்கள், கண்ணாடிகள், கிழிந்த துணிகள் என்று அனைத்தையும் அள்ளுவேன். கடைக்காரர் சில நாணயங்களை என்னை நோக்கி வீசி எறிவார். பாதி கடித்துத் தூக்கிப் போட்ட உணவுப் பண்டங்கள் கிடைக்கும். சில நேரம் நல்ல சுவையாகவும் இருக்கும்.

காகிதங்களைவிட இரும்புத் துண்டுகளுக்கு, ஆணிகளுக்குக் கூடுதல் பணம் கிடைத்தது. குதிரை லாடங்களை விழுந்து விழுந்து சேகரித்தேன். பக்கத்தில் இருந்த பேக்கரியில் சென்று சேர்ந்தேன். என் உயரமுள்ள அடுப்பு தகித்துக்கொண்டிருக்கும். தலைமுடி சுட்டுப் பொசுங்கும் அளவுக்கு வெப்பம் பரவும். நான் ரொட்டியை வெளியில் எடுப்பேன், உலர்த்துவேன், காகிதத்தில் சுற்றுவேன். இரவில், நடுங்கும் குளிரில் மீண்டும் குப்பைகளைக் கிளறுவேன்.

ஒரே ஆறுதல் அகுலினா பாட்டி மட்டும்தான். என் பரட்டைத் தலையைத் தடவியபடி, அழுக்கு படிந்த என் விரல்களை ஒவ்வொன்றாக வருடியபடி இரவு முழுக்க அவர் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பார். அந்தக் கதைகளில் மந்திரவாதிகளும் சிறகு முளைத்த வெள்ளை தேவதைகளும் அற்புத ஆற்றல் கொண்ட குழந்தைகளும் நிறைந்திருப்பார்கள். ஓர் எழுத்துகூடப் படிக்கத் தெரியாத பாட்டி, என்னை மாய உலகுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அந்த உலகில் அழுக்கு இருக்காது, குப்பைகள் இருக்காது, பசி இருக்காது, அழுகை இருக்காது. ஒரு கதை என்னவெல்லாம் செய்யும் என்பதை அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். ஒருவருக்கும் தெரியாமல் பைரன், சார்லஸ் டிக்கன்ஸ் என்று தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.

எழுதவும் விரும்பினேன். ஆனால் என்ன எழுதுவது? என்னைத் துன்பப்படுத்தும் நிஜக் கதைகளையா அல்லது அளவிலா மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் மாயக் கதைகளையா? பேனாவை எடுத்து காகிதத்தில் வைத்தபோது கார்க்கியின் கையிலிருந்த அழுக்கு காகிதத்தில் ஒட்டிக்கொண்டது. அந்த நொடியில் அவர் சந்தேகம் மறைந்தது. அழுக்கு என்னைவிட்டுப் பிரியப் போவதில்லை. அழுக்குதான் என் சுவாசம். அழுக்குதான் என் பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறது. அதுதான் என் பசியை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது. என்னை வாழ வைப்பது அதுதான். என்னைத் தின்றுகொண்டிருப்பதும் அதுதான்.

மாக்சிம் கார்க்கி எழுத ஆரம்பித்தார். நோயாளிகளின் கதை. உணவை யாசிப்பவர்களின் கதை. சாலையில் வசிப்பவர்களின் கதை. செருப்பு தைப்பவர்களின் கதை. பசியால் திருடுபவர்களின் கதை. நீங்கள் வெளியில் செல்லும்போது யாரைக் கண்டால் முகத்தைச் சுளிப்பீர்களோ அவர்களுடைய கதை. யாருடைய கைகளால் உணவை வாங்கி உண்ண மாட்டீர்களோ, அவர்களுடைய கதை.

யாருடன் கைகுலுக்க மாட்டீர்களோ அவர்களுடைய கதை. உடைந்த வீடுகளின் கதை. இருளின் கதை. எலும்பும் தோலுமாக அலையும் நாய்களின் கதை. இனிப்பை மொய்க்கும் ஈக்களின் கதை. படித்துப் பார்த்த உலகம் வியப்போடு என்ன சொன்னது தெரியுமா? ‘கார்க்கி, நீங்கள் எழுதியதுதான் நிஜமான ரஷ்யாவின் கதை. நிஜமான மனிதர்களின் கதை. உங்களைவிட நேர்மையாக, உங்களைவிட உணர்வுபூர்வமாக, உங்களைவிடத் தூய்மையாக வேறு ஒருவராலும் எழுத முடியாது.’

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்