பிப்பெட்: பரீட்சைக் காலம் நெருங்கிடுச்சு பியூ.
பியூரெட்: எல்லோரும் தீவிரமா படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆமா, உன் கையில என்ன, புதுசா கடிகாரம் கட்டியிருக்கியே?
பிப்.: ஆமா, பரீட்சை நேரத்துல ஒழுங்கா மணியைப் பார்த்துப் படின்னு இந்த எலெக்ட்ரானிக் கடிகாரத்தை எங்க அம்மா வாங்கிக் கொடுத்தாங்க.
பியூ.: நல்லா இருக்கு. ஆமா, இந்தக் கடிகாரம் எப்படி ஓடுதுன்னு உனக்குத் தெரியுமா?
பிப்.: இது முள்ளு வெச்சு ஓடுற கடிகாரம் இல்ல.
பியூ.: முள்ளு கடிகாரம், எலெக்ட்ரானிக் கடிகாரம் எதுவா இருந்தாலும் அதுக்கு மின்சாரம் வேணும்.
பிப்.: மின்விளக்குல ஆரம்பிச்சு, ரயிலை இழுத்துப் போற இன்ஜின்வரை மின் இணைப்பு இல்லாம இயங்காதுன்னு எனக்குத் தெரியும். எல்லா மின்கருவிகளுக்கும் மின்னணுக் கருவிகளுக்கும் கம்பி மூலமா மின்சாரம் போறத பார்த்திருக்கேன்.
பியூ.: நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்க. சரி, சின்ன மின்னணுக் கருவிகளோட மின்கம்பிகள் இணைக்கப்படாத நிலைல, அவற்றுக்கு எங்கேயிருந்து மின்சாரம் கிடைக்குது?
பிப்.: பேட்டரி வைச்சிருப்பாங்களோ?
பியூ.: சரியா யூகிச்சுட்ட, கடிகாரத்துக்குள்ள குட்டியூண்டு மின்கலம் இருக்கும்.
பிப்.: ஆனா, அந்த மின்கலங்களுக்கு எப்படி மின்சாரம் கிடைக்குது?
பியூ.: அவற்றின் உள்ளே வைக்கப்பட்டுள்ள லித்தியம் தனிமத்தில் இருந்துதான் மின்சாரம் கிடைக்குது. தரப்படுத்தப்பட்ட நிலையில் மிக லேசான உலோகம் லித்தியம். லேசா இருக்கிறது மட்டுமில்லாம, சின்ன இடத்திலும் அதை அடைச்சு வெக்க முடியுங்கிறதால, சிறிய மின்கலங்கள்ல லித்தியம் பயன்படுது.
chemistry-2jpgrightபிப்.: ஆனா, இந்தக் குட்டிக் குட்டி பேட்டரி எல்லாம் இப்போதான் அதிகமாகியிருக்கு, இல்லையா?
பியூ.: ஆமா, 20-ம் நூற்றாண்டோட பின்பாதிலதான் மின்கலங்கள்ல இடம்பெறும் முக்கியப் பொருளா லித்தியம் மாறுச்சு. அணு எடை குறைவா இருக்கிறதால, இது அதிக மின்சாரத்தை ஏத்திக்குது. அதோட எடை-மின்சாரம் இடையிலான விகிதமும் லித்தியத்துல அதிகம்.
பிப்.: கைக்கடிகாரம் தவிர, வேற எதுல எல்லாம் இந்தக் குட்டி மின்கலங்கள் பயன்படுது?
பியூ.: சின்ன கால்குலேட்டர், பொம்மைகள், ஏன் இதயத்துக்கான பேஸ்மேக்கர் கருவிகள்லகூட லித்தியம் மின்கலம் பயன்படுதே.
பிப்.: நல்லது. மின்கலம் தவிர?
பியூ.: லித்தியம் ரொம்ப லேசா இருக்கிறதால, விமான உதிரி பாகங்கள் உருவாக்கத்திலும் பங்கு வகிக்குது.
பிப்.: குட்டியூண்டு மின்கலத்திலிருந்து உயரப் பறக்கும் விமானம்வரையிலுமா?
பியூ.: அதோட கண்ணாடி, பீங்கான், மட்பாண்டம் மாதிரியான பொருட்களை உருவாக்கும்போது சிலிக்காவை உருக்குறதுக்கு லித்தியம் ஆக்சைடைப் பயன்படுத்துறாங்க. இதன்மூலம் மெருகூட்டப்படும் இந்தப் பொருட்கள், வெப்பத்தைத் தாங்கி விரிவடையாத தன்மையையும் பெறுகின்றன.
பிப்.: ‘உடையாமல் காக்கும் லித்தியம்’னு ஒரு பட்டத்தைக் கொடுத்திடுவோம்.
பண்டைத் தனிமம்
பெருவெடிப்பின்போது (BigBang) சூரியன், கோள்கள் உருவான காலத்தில் லித்தியமும் உருவாகியிருக்க வேண்டும். பெருவெடிப்பின்போது மூன்று தனிமங்கள் உருவாகின. அவற்றில் இடம்பெற்றுள்ள லித்தியம், மிகவும் பண்டைய தனிமங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெறுகிறது. மற்ற இரண்டு தனிமங்கள் ஹைட்ரஜனும் ஹீலியமும். இவை இரண்டுமே இன்னமும் சூரியனில் எரிந்துகொண்டு இருக்கின்றன.
இந்த வாரத் தனிமம் - லித்தியம்
குறியீடு: Li
அணு எண்: 3
கிரேக்கச் சொல்லான லித்தோஸில் இருந்து லித்தியம் என்ற பெயர் வந்தது. ‘லித்’ என்றால் கல் என்று அர்த்தம். தரப்படுத்தப்பட்ட நிலையில் இதுவே மிகவும் எடை குறைந்த உலோகம், எடை குறைந்த திடத் தனிமம். மற்ற கார உலோகங்களைப் போலவே லித்தியமும் எளிதில் வினைபுரியக்கூடியது.
எரியக்கூடியது. இயற்கையில் அயனிச் சேர்மங்களாகவே அதிகம் காணப்படுகிறது. அயனியாக இருக்கும்போது எளிதில் கரைந்துவிடுவதால் கடல் நீரிலும், உவர்நீரிலும் இது அதிகம் இருக்கிறது.
லித்தியம் மிகவும் மிருதுவான உலோகமும்கூட. சிறிய கத்தியைக் கொண்டு இதை வெட்டிவிடலாம். அதேபோல கொஞ்சம் லித்தியத்தை எடுத்துத் தண்ணீரில் போட்டால், அது முழுகாமல் அப்படியே மிதக்க ஆரம்பித்துவிடும். அவ்வளவு அடர்த்தி குறைவானது.
தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago