கதை: பூனையிடம் கதை கேட்ட எலிகள்!

By கன்னிக்கோவில் ராஜா

அழுதபடியே வந்தது மியா பூனைக்குட்டி. மிக அழகாக இருக்கும். அது  அழுவதைப் பார்த்தால் உங்களுக்கும் அழுகை வந்துவிடும்.

பாட்டி பூனை, “ஏன் அழறே? கீழ விழுந்துட்டியா?” என்று கேட்டது.

“இல்லை” என்று அழுதபடியே தலை ஆட்டியது மியா.

“யாராவது அடிச்சாங்களா?”

“இல்லை” என்று தலை ஆட்டியது.

“அப்புறம் என்ன ஆச்சு? நீ அழுவதற்குக் காரணம் தெரிந்தால் தானே நான் உனக்கு உதவ முடியும்?” என்று மியாவை அணைத்துக்கொண்டது பாட்டி பூனை.

“நான் எலி வேட்டைக்குப் போனேனா...”

“ம்...”

“நிறைய எலிகளைப் பார்த்தேனா...”

“ம்...”

“ஆனா, என்னால ஒரு எலியைக்கூடப் பிடிக்க முடியல” என்று சொல்லி வருத்தப்பட்டது மியா.

“உன்னால ஏன் எலியைப் பிடிக்க முடியல?”

“எலிங்க என்னைவிட வேகமாக ஓடி, சின்னப் பொந்துல நுழைஞ்சிடுதுங்க.”

“சரி. அதுக்காக யாராவது அழுவாங்களா? இல்ல... அழுதால் மட்டும் எலி கிடைச்சுடுமா?” என்று மியாவின் முதுகைத் தடவிக் கொடுத்தது பாட்டி பூனை.

”நான் எலிகளை வேட்டையாடணும்.”

‘மியா, அழாதே. நம் வீட்டுக்கே எலிகள் வரும்படிச் செய்கிறேன்” என்றது பாட்டி பூனை.

“பாட்டி, அந்த எலிகளை நம்ம வீட்டுக்கு வரவழைக்க முடியுமா?” என்று உற்சாகமாகக் கேட்டது மியா.

“முயற்சி பண்றேன்.”

பாட்டியின் நம்பிக்கை மியாவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

அன்று மாலையே மியா வீட்டு வாசலில், ’இங்கு எலிகளுக்கு நல்லொழுக்கக் கதைகள் கூறப்படும். கேட்கலாம்... விளையாடலாம்... வாருங்கள்’ என்ற அறிவிப்புப் பலகை தொங்கியது.

பெரும்பாலான எலிகள் படித்துவிட்டுப் பயந்தன. ஒரு சில எலிகள் பயந்து பயந்து தங்களது எலிக்குஞ்சுகளை அழைத்து வந்தன.

எலிகளைக் கண்டதும் பாட்டி பூனை, “பயப்படாம வாங்க. உங்க குழந்தைகளுக்கு நன்னெறிக் கதைகள், நல்லொழுக்கக் கதைகள், சுற்றுச்சூழல் கதைகள், அறிவியல் கதைகள் எல்லாம் சொல்லப் போறேன். அதோடு உற்சாகமான விளையாட்டுகளையும் சொல்லித் தருவேன்” என்று அன்பாக அழைத்தது.

பூனையின் பேச்சில் நம்பிக்கை ஏற்பட்ட எலிகள், தைரியமாகத்  தங்களது எலிக்குஞ்சுகளைக் கதை கேட்க விட்டுவிட்டுச் சென்றன.

அன்று மூன்று எலிக்குஞ்சுகள்தான் வந்திருந்தன. அவற்றுக்குப் பாட்டி பூனை அழகான கதை ஒன்று சொன்னது. அந்தக் கதை எலிக்குஞ்சுகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. கொஞ்சம் விளையாட்டு, ஒரு பாட்டு என அந்த ஒரு மணிநேரம் சென்றதே தெரியவில்லை. மகிழ்ச்சியோடு எலிகள் தங்களின் வீட்டுக்குச் சென்றன.

மியா உள் அறையில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தது.

“மியா... மியா...”

“என்ன பாட்டி?”

“இன்று வந்த எலிக்குஞ்சுகளைப் பார்த்துட்டியா? இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வேட்டையாடிடு. உடனே வேட்டையைத் தொடங்கினால் மீதி எலிகள் வராமல் போய்விடும்” என்றது பாட்டி பூனை.

மியா மகிழ்ச்சியாகத் தலை ஆட்டியது.

எலிகள் தங்களது நண்பர்களையும் அழைத்து வந்தன. இப்போது பூனையின் வீட்டில் எலிகள் அதிகம் இருந்தன. இத்தனை நாளும் எலிக்குஞ்சுகளுக்குப் பாட்டி சொன்ன நன்னெறிக் கதைகளையும், நல்லொழுக்கக் கதைகளையும் உள் அறையில் இருந்து கேட்ட மியாவுக்கு அருகில் இருந்து கேட்க ஆசை வந்தது. அதுவும் எலிகளோடு சேர்ந்து கதை கேட்டது. விளையாடியது.

ஒரு வாரம் சென்றது.

“மியா, இன்னிக்கும் கதை கேட்க எலிகள் வரும். நான் கதை சொல்லி முடித்தவுடன் நீ வேட்டையை ஆரம்பித்துவிடு” என்றது பாட்டி பூனை.

தலையை ஆட்டியது மியா.

மாலை எலிகள் கதை கேட்க வந்தன.

’நம்மை நம்பி வந்தவர்களை ஒருபோதும் ஏமாற்றக் கூடாது’ என்ற அழகான கருத்தைச் சொன்னது அன்றைய கதை. விளையாட்டு ஆரம்பமானது. பாட்டி பூனை கதவைத் தாழிட்டது.

“மியா, இது உன்னோட நேரம். நீ எலிகளை வேட்டையாடலாம். நான் கதவையும் ஜன்னல்களையும் மூடிவிட்டேன்” என்று சத்தமாகச் சொன்னது பாட்டி பூனை.

பாட்டியின் பேச்சைக் கேட்ட எலிகள் நடுங்கின.

“ம்.. மியா ஆரம்பமாகட்டும்

உன் வேட்டை” என்றது பாட்டி

பூனை.

“பாட்டி, என்னை மன்னிச்சிடு. நீ சொன்ன கதைகளால் என் மனதை மாற்றிக்கொண்டேன். இன்று நீ சொன்ன கதையில் நம்மை நம்பி வந்தவர்களை ஒருபோதும் ஏமாற்றக் கூடாது என்ற பொருள் இருந்தது. அதன்படி பார்த்தால் இந்த எலிகள் நம்மை நம்பி இங்கு பயமில்லாமல் வருகின்றன. நானும் அவர்களுக்கு நல்ல நண்பனாகி விட்டேன். என் நண்பர்களை என்னால் வேட்டையாட முடியாது” என்றது மியா.

அப்போதுதான் எலிகளுக்குப் பயம் குறைந்தது.

மியாவின் பேச்சால் அதிர்ச்சியடைந்த பாட்டி பூனை சற்று யோசித்துவிட்டு, “மியா, நீ வயசுல சின்னவனா இருந்தாலும், நான் சொன்ன கதைகளை உன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுத் திருந்திட்டே. ஆனால், கதைகளைச் சொன்ன நான் திருந்தாமல் இருந்துட்டேன். அது மிகப் பெரிய தவறுதான். எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க. இன்று முதல் மியாவைப்போல, நீங்களும் எனக்குப் பேரக்குழந்தைகள்தான்” என்றது பாட்டி பூனை.

இப்போது அதிக அளவில் பாட்டியிடம் கதைகளைக் கேட்க ஆர்வமாக வந்துகொண்டிருக்கின்றன எலிகள்.கதை

ஓவியம்: கிரிஜா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்