‘‘நான் உங்கள் பத்திரிகை ஆசிரியரைப் பார்த்துப் பேச வேண்டும்!” யார் நீங்கள்?” “என் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.” ‘‘இருந்துவிட்டுப் போகட்டும். அங்கே போய் உட்காருங்கள். நேரம் இருக்கும்போது கூப்பிடுவார்கள்.” ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த பிறகு, அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு பெரிய மேஜையின் பின்னால் ஆசிரியர் அமர்ந்திருந்தார். நிமிர்ந்துகூடப் பார்க்காமல் கேட்டார். ‘‘என்ன வேண்டும்?”
‘‘ஐயா, நான் ஒரு வழக்கறிஞர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து இப்போதுதான் திரும்பியிருக்கிறேன். எதிர்கால இந்தியா குறித்து என்னிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.” அவ்வளவுதான், பச்சை மிளகாயாகவே மாறிவிட்டார் அந்த ஆசிரியர். ‘‘என்னைப் பார்த்தால் எப்படி இருக்கிறது? உங்களைப்போல் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றும் ஆள் என்று நினைத்துவிட்டீர்களா? எதிர்காலமாம், இந்தியாவாம். என் வேலையைக் கெடுப்பதற்கென்றே இப்படித் தினமும் நான்கு பேராவது வந்துவிடுகிறார்கள்.’’
காந்தி முதல்முறையாக வங்காளத்துக்கு வந்தது 1896-ம் ஆண்டில். அவருடைய முதல் சந்திப்பே இப்படிதான் இருந்தது. இல்லை, இல்லை இதற்கு முன்பு ‘அம்ரித பஜார் பத்திரிகா’ என்னும் புகழ்பெற்ற பத்திரிகைக்கு அவர் சென்றிருக்கிறார். அங்கே உள்ளேயே விடவில்லையாம். அதற்கும் முன்பு, கல்கத்தாவின் முக்கியமான தலைவர்கள் சிலரைத் தேடிச் சென்று பார்க்க முயன்றிருக்கிறார். ‘‘யார், காந்தியா? கேள்விப்பட்டதேயில்லை. நேரமில்லை என்று சொல்லிவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம்.
காந்தியைப் பற்றித் தெரியாமல் இப்படிச் செய்துவிட்டார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். காந்தி, காந்தியாக மாறிய பிறகும் வங்காளத்துடனான அவருடைய ‘உறவு’ இப்படிதான் இருந்திருக்கிறது. ‘‘என்னது காந்தி கட்டுரை எழுதி அனுப்பியிருக்கிறாரா? முதல் பக்கத்தில் பெரிய எழுத்தில் போடுங்கள்” என்றுதான் இந்தியாவில் உள்ள எந்தப் பத்திரிகையும் சொல்லும். காந்தி எதிர்த்த பிரிட்டனில்கூட காந்தியின் புகழ் நன்கு பரவியிருந்தது.
ஆனால் வங்காளம் என்ன செய்யும் தெரியுமா? ‘‘இதோ பாருங்கள். காந்தி கொடுத்தார் என்பதற்காக அவர் கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை. படித்துப் பாருங்கள். நன்றாக எழுதியிருக்கிறாரா? தவறில்லாமல் இருக்கிறதா? நம் பத்திரிகையில் போடும் அளவுக்குத் தகுதி இருக்கிறதா? ‘ஆம்’ என்றால் மட்டும் அனுமதியுங்கள்.’’
என்னது, காந்தி ஒரு பொதுக்கூட்டத்தில் பேச நம் ஊருக்கு வருகிறாரா? இந்தியாவே பயபக்தியோடு எழுந்து நின்று இரு கரம் கூப்பி வரவேற்கும். ‘‘என்னவாம்? எதைப் பற்றிப் பேசப் போகிறாராம்?’’ என்று உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திரிக்காமல் கேட்கும் வங்காளம். காந்தி தாத்தாவைத் தொலைவிலிருந்தாவது ஒருமுறை பார்த்துவிட முடியுமா என்று ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஏங்கிக்கிடந்தபோது, வங்காளம் தனது வீதிகளில் காந்தியைக் கண்டால் ஒரு மென்புன்னகையோடு அவரைக் கடந்து சென்றுவிடும்.
‘‘அவர் மகாத்மாவாக இருந்துவிட்டுப் போகட்டும், எனக்கென்ன? அவர் சொல்வது தவறு என்று நான் நினைத்தால், அதை வெளிப்படையாகச் சொல்லியே தீருவேன். காந்தி என்பதற்காக அவர் சொல்வதற்கெல்லாம் என்னால் தலையாட்ட முடியாது” என்று கறாராகவே சொல்லிவிட்டார் சுபாஷ் சந்திர போஸ். என்னது, காந்தியையே எதிர்க்கிறீர்களா என்று இந்தியா அதிர்ந்தால், ‘‘அதென்ன காந்தியையே...? அவரென்ன கடவுளா?” என்று திருப்பிக் கேட்பார்.
ரவீந்திரநாத் தாகூர் மட்டும் என்னவாம்? ‘‘காந்தி போன வாரம் ஒரு கூட்டத்தில் பேசும்போது இப்படிச் சொன்னார். அது மாபெரும் தவறு, அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சென்ற மாதம் அவர் எழுதிய கட்டுரையை என்னால் ஒரு துளிகூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காந்தியின் பார்வையில் சில தவறுகள் இருக்கின்றன. என்னது, காந்தி பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டுமா? நான் ஏன் காந்தியோடு முரண்படுகிறேன் என்று வேண்டுமானால் ஒரு கட்டுரை எழுதித் தரட்டுமா?” காந்திக்கும்கூட நேரடியாக எழுதியிருக்கிறார் தாகூர். நீங்கள் செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. இப்படியா நடந்துகொள்வது என்று சண்டைகள் எல்லாம் போட்டிருக்கிறார்.
ஏன் இந்த வங்காளம் மட்டும் இப்படி இருக்க வேண்டும்? பத்திரிகை அலுவலகம் முதல் ரவீந்திரநாத் தாகூர்வரை; சாமானிய மக்கள் முதல் பெரும் தலைவர்கள்வரை ஏன் எல்லோரும் காந்தியோடு சண்டையிடுகிறார்கள்? இந்தப் புதிருக்கு காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி கொல்கத்தாவில் சமீபத்தில் விடை அளித்திருக்கிறார்.
‘‘நீங்கள் நினைப்பதுபோல் வங்காளம் காந்தியை வெறுக்க வில்லை. ஆனால், அதற்காகக் காந்தியை அது கண்மூடித்தனமாக வழிபடவும் இல்லை. காந்தி ஒரு மனிதர். எல்லா மனிதர்களையும்போல் அவரிடம் நிறைகளும் இருந்தன, குறைகளும் இருந்தன. என்னால் காந்தியோடு இன்னின்ன விஷயங்களில் ஒத்துப்போக முடியாது என்று சொல்லும் துணிச்சல் போஸிடமும் தாகூரிடமும் இருந்தன.
காந்தி மட்டுமல்ல, ஒருவரையும் வங்காளம் விழுந்து வணங்காது. ஒருவரையும் கடவுள் நிலைக்கு உயர்த்தாது. யாராக இருந்தாலும் சரி; அவர்களைக் கேள்வி கேட்கத் தயங்காது. இது வங்காளத்தின் இயல்பு. இப்படி இருப்பதைத்தான் காந்தியும் விரும்புவார்.”
இன்னொன்று தெரியுமா? காந்தியை ‘மகாத்மா’ என்று நாம் இன்று அழைப்பதற்குக் காரணம் தாகூர். ‘தேசத் தந்தை’ என்று காந்தியை முதலில் அழைத்தவர் சுபாஷ் சந்திர போஸ். காந்தியைக் கடவுளாக வழிபட மறுத்த, அவருடைய குறைகளையும் போதாமைகளையும் அச்சமின்றிச் சுட்டிக்காட்டிய, அவரோடு மிகத் தீவிரமாக முரண்பட்ட இருவரிடமிருந்துதான் காந்திக்கு மிகப் பெரிய அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன.
நீங்கள் மதிக்கும் ஒருவரை விமர்சிப்பது சாத்தியம். நீங்கள் விமர்சிக்கும் ஒருவரை மதிப்பதும் சாத்தியம். இந்த இரண்டு பண்புகளும் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஒரு வங்காளியே!
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியம்: லலிதா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago