அன்றாட வாழ்வில் வேதியியல் 21: தகரம் என்றால் தாழ்வு இல்லை

By ஆதி வள்ளியப்பன்

பிப்பெட்: ஆமா பியூ, இந்தத் தங்கமெல்லாம் உலோகம் தானே. அதைப் பத்தியெல்லாம் நீ சொல்லவே இல்லையே.

பியூரெட்: தங்கமும் ஒரு உலோகம்தான் பிப். ஆனா, அதைப் பத்தியெல்லாம் நமக்கு நிறையத் தெரியுமே. அதிகம் தெரியாத உலோகங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுதானே நல்லா இருக்கும்.

பிப்.: நீ சொல்றது உண்மைதான்.

பியூ.: அடிக்கடி தங்கத்தோட ஒப்பிடப்பட்டு தாழ்வா பேசப்படுறது தகரம் (Tin). ஆனா, அன்றாடப் பயன்பாட்டுல தகரத்தோட பங்கு அதிகம்.

பிப்.: தங்கத்துல தட்டோ, டம்ளரோ வாங்கறதுக்கு யார்கிட்ட காசு இருக்கு?

பியூ.: ம், உலக விளையாட்டுப் போட்டிகள்ல தங்கம், வெள்ளிக்கு அடுத்தபடியா கொடுக்குறாங்களே வெண்கலப் பதக்கம், அது எப்படிச் செய்யப்படுது தெரியுமா?

பிப்.: எப்படி, எப்படி?

பியூ.: செம்பும் தகரமும் சேர்ந்தா வெண்கலம். வரலாற்றில் ‘வெண்கலக் காலம்’னு ஒரு காலமே இருந்திருக்கு. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி உருவாக்கப்பட்ட வெண்கலம், மனித நாகரிக வளர்ச்சியில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.

பிப்.: அவ்ளோ பழமையானதா?

பியூ.: வெண்கலம் மட்டுமில்ல, மனிதன் அறிந்த பழமையான உலோகங்கள்ல தகரமும் ஒண்ணு. 2,600 ஆண்டுகளுக்கு முன்னதாவே இதையும் தனியா பயன்படுத்தியிருக்காங்க.

பிப்.: அருமை, அப்பவே தகரம் பரவலாயிடுச்சா?

chemistryjpg

பியூ.: இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடிதான் தகரத்தோட பயன்பாடு அதிகமாச்சு. உலோக நிலையிலுள்ள தகரம் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடையுறதில்லை. அதனால உணவை அடைப்பதற்கான தகரப்பூச்சு கொண்ட எஃகு டப்பா, லண்டனில் 1812-ல் முதன்முதலா தயாரிக்கப்பட்டது. அது எஃகு துருப்பிடிக்கிறதை தடுத்துச்சு.

பிப்.: இதுதான் தகர டப்பாவோட தொழில் ரகசியமா?

பியூ.: அந்த டப்பாவை ஆங்கிலேயர்கள் ‘டின்’ன்னு அழைச்சாங்க. இதுவே தகரத்துக்கான ஆங்கிலப் பெயராயிடுச்சு.

பிப்.: பயன்பாடு தந்த பெயர்.

பியூ.: முன்னாடியெல்லாம் வெளிநாட்டுக்குப் போயிட்டு வர்றவங்க வாங்கிட்டு வரும் சத்துப் பானங்கள், பிஸ்கட்டுகள் தகர டப்பாக்கள்லயே அடைக்கப்பட்டு வந்தன.

பிப்.: ஆமா, தகர டப்பால அடைச்சு வரும் சாக்லேட், பிஸ்கெட்டை நானும் சாப்பிட்டிருக்கேன். ஆனா, இப்பவும் அதேபோல தகர டப்பாக்கள் வருதா?

பியூ.: இன்னைக்கு அதுக்குப் பதிலா அலுமினிய டப்பாக்கள் அதிகமாகிடுச்சு.

பிப்.: அப்படியா, அப்புறம் இன்னைக்குத் தகரத்த எதுக்கு அதிகமா பயன்படுத்துறாங்க?

பியூ.: தகரம்-காரீயக் கலவை பற்றவைப்பதற்குப் பயன்படுத்தப்படுது. தொழிற்புரட்சி, மின்னணுப் புரட்சிக்குப் பின்னாடி பற்றவைப்பு முக்கியமான வேலை, இல்லையா. குழாய்கள், மின்சுற்றுகளை இந்தப் பற்ற வைப்புதான் இணைக்குது.

பிப்.: பத்தவைக்கிறது அவ்வளவு பெரிய விஷயமா?

பியூ.: ஆமா, சமீபக் காலம்வரை உலகத்துல உற்பத்தியாகும் தகரத்துல பாதி, பற்றவைக்கிறதுக்கு மட்டுமே பயன்பட்டுச்சு. மீதிய தகரப் பூச்சு கொடுக்க, பித்தளை-வெண்கல கலப்பு உலோகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்துறாங்க.

பிப்.: தகரம் தனியா இல்லேன்னாலும், கலப்பு உலோகமா நமக்கு ரொம்பவே பயன்படுது, இல்லையா?

பியூ.: ஆமா, தகரம், இண்டியத்தின் ஆக்சைடு மின்சாரத்தைக் கடத்தும். இதில் ஒளி ஊடுருவுங்கிறதால, ‘லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே’ எனப்படும் கணினித் திரையை உருவாக்கப் பயன்படும்.

பிப்.: ஆஹா, கணினியிலும் தகரமா?

பியூ.: இன்னும் நிறைய இருக்கு. ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லி முடிச்சிடுறேன். ‘ஆர்கனோடின்’ எனப்படும் கரிமத் தகரம் இல்லேன்னா பிவிசி இல்ல. பிவிசி பிளாஸ்டிக் பொருட்களை நிலைப்படுத்த இந்த ஆர்கனோடின் பயன்படுது. இது இல்லேன்னா வெப்பம், ஒளி, வளிமண்டல ஆக்சிஜன் காரணமாக பிவிசி அதிவேகமாகச் சீர்கெட்டு நிறமிழந்து, எளிதா உடைஞ்சு போயிடும்.

பிப்.: தகரத்துக்கு ஒரு கிரீடம் சூட்டிடுவோம்!

chemistry-2jpg

இந்த வாரத் தனிமம்: தகரம்

குறியீடு: Sn

அணு எண்: 50

இதன் லத்தீன் பெயர் ஸ்டன்னம். பூமியின் மேலோட்டில் அதிகம் கிடைக்கும் 49-வது தனிமம். அறை வெப்பநிலையில் வெள்ளி நிறத்தில் இருக்கும் இந்த உலோகம் நெகிழும்தன்மை கொண்டது. கேசிடெரைட் என்ற கனிமத்தில் இருந்தே தகரம் அதிகம் பிரித்தெடுக்கப்படுகிறது.

கலப்பு உலோகத் தயாரிப்பில் தகரத்தின் பங்கு அதிகம். காரீயம் வெள்ளீயம் கலந்த Pewter என்ற உலோகக் கலவை, மணிகளைத் தயாரிக்கும் உலோகக் கலவை, பால் பேரிங் தயாரிப்பதற்குப் பயன்படும் பாபிட் உலோகம் போன்றவற்றில் தகரம் பயன்படுகிறது. லித்தியம் அயனி மின்கலங்களில் எதிர்மின் எலெக்ட்ரோடாகத் தகரம் பயன்படுத்தப்படுகிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்