இடம் பொருள் மனிதர் விலங்கு: புத்தகத்தின் பிடியிலிருந்து தப்புவது எப்படி?

By மருதன்

‘‘ஆ, இவ்வளவு புத்தகங்களா? உங்களை ஏன் உலகமே தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறது என்று இப்போதுதான் தெரிகிறது. எப்படிதான் இதையெல்லாம் படித்தீர்களோ தெரியவில்லை. அந்த ரகசியத்தை எங்களுக்கும் கற்றுக்கொடுங்களேன்.’’

இத்தாலிய எழுத்தாளரான உம்பர்த்தோ ஈக்கோவின் வீட்டுக்குச் செல்பவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் மறுப்பார். ‘‘நீங்கள் என்னைத் தவறாக நினைத்துவிட்டீர்கள். நான் ஒன்றும் மந்திரவாதி கிடையாது. இங்குள்ளவை நான் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்கள்தான். கரைத்துக் குடித்த புத்தகங்கள் கிடையாது.’’

‘‘உண்மையாகவா சொல்கிறீர்கள்?’’

‘‘பிறகு? ஒரு கணக்கு சொல்கிறேன், கேளுங்கள். ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். ஒரு நாள் விடாமல் தொடர்ந்து படித்தால் ஒருவர் தன் வாழ்நாளில் எத்தனை புத்தகங்களைப் படிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? பத்து வயது முதல் எண்பது வயதுவரை ஒரு நாள் பாக்கியில்லாமல் தினமும் ஒரு புத்தகம் படித்தால் ஒருவரால் 25,200 புத்தகங்களைப் படித்து முடிக்க முடியும். ஒரு நூலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.

வாழ்நாள் முழுக்க ஒவ்வொன்றாக எடுத்துப் படித்தாலும் ஒருவரால் அந்த நூலகத்தைப் படித்து முடிக்க முடியாது. இதுபோக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான புதிய புத்தகங்கள் எழுதப்படுகின்றன, அச்சிடப்படுகின்றன. நான் சொல்வது இத்தாலி மொழியில் மட்டும். இது போக ஆங்கிலம், பிரெஞ்சு, சீன மொழி, ரஷ்ய மொழி, உருது என்று உலகம் முழுக்கப் பல மொழிகளில் பல லட்சக்கக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன.

அவற்றை எல்லாம் ஒப்பிட்டால் என் சிறிய வீட்டில் இருக்கும் நூல்கள் ரொம்ப ரொம்பக் குறைவு. இதிலேயே ஒரு பகுதியை மட்டும்தான் என்னால் படித்து முடிக்க முடியும்.’’

‘‘ஓ, அப்படியானால் நீங்கள் இனி புத்தகமே வாங்க வேண்டியிருக்காது, இல்லையா?’’

‘‘யார் சொன்னது? நேற்றுகூட ஒரு பை வாங்கி வந்தேன். நாளையும் வாங்குவேன்.’’

‘’புரியவில்லையே! ஏற்கெனவே வாங்கி வைத்ததையே படிக்க முடியாதபோது ஏன் புதிதாக வாங்குகிறீர்கள்?’’

ஈக்கோ புன்னகை செய்தார். ‘‘வேறு  என்ன செய்ய முடியும்? புத்தகம் என்ன லேசுபட்ட பொருள் என்றா நினைத்தீர்கள்? நான் எவ்ளோ ஒல்லி தெரியுமா? உங்களுடைய அத்தனை பெரிய வீட்டில் எனக்கு இடம் கிடையாதா? ஒரு ஓரமாக அலமாரியில் கொண்டுபோய் வைத்துதான் பாருங்களேன் என்று பார்வையாலேயே கெஞ்சும். ஐயோ பாவம் என்று ஒன்றை மட்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வீர்கள். சில தினங்களில் அந்த ஒன்று இரண்டாகும்.

இரண்டு மூன்றாகும். பிறகு ஐந்தாகும், பத்தாகும். அந்தப் பத்தும் சும்மா இருக்கும் என்றா நினைக்கிறீர்களா? ஆளுக்கொன்றாக ஆக்டோபஸ்போல் கையைக் காலை நீட்டி மேலும் பத்தை இழுத்துக்கொண்டு வந்து நிற்கும்.’’

‘நண்பரே, நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? ஒரு கவிதை படித்து காட்டட்டுமா? ஒரு ஊரில் ஒரு ராஜா என்ன செய்தார் தெரியுமா? உங்களுக்கு அறிவியல் கற்க வேண்டுமா? அசோகரையும் அங்குலி

மாலாவையும் நீங்கள் பார்க்க வேண்டுமா? உங்கள் நாற்காலியில் அமர்ந்துகொண்டே ஆப்பிரிக்காவை வலம் வரும் வித்தையைக் காட்டட்டுமா? இந்த உலகமும் அதிலுள்ள உயிர்களும் எப்படித் தோன்றின என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கணிதம் கற்க வேண்டுமா? சீன மொழி கற்க வேண்டுமா? பாரதியார் பாடல்களைப் படிக்கிறீர்களா? டிராகன் கதைகள் வேண்டுமா?’

idam-porul-2jpgright

இப்படி எதையாவது சொல்லி பசைபோல் வந்து ஒட்டிக்கொண்டுவிடும். புதிய புதிய ஆடைகளை உடுத்தி வந்து உங்களை மயக்கும். நடைபாதையில் இருந்தபடி உங்களை அழைக்கும். கடைக்குள்ளிலிருந்து உங்கள் பெயரைச் சத்தம் போட்டு அழைக்கும். எனக்கு இந்த உலகில் யாருமே இல்லையா? எத்தனை காலம் தனிமையில் கிடந்து தவிப்பதாம் என்று பக்கம் பக்கமாக வசனம் பேசி, கண்ணீர் சிந்தும். நீங்கள் இளகிய மனம் கொண்டவராக இருந்து கையில் எடுத்துவிட்டால், பிறகு அவற்றை கீழே வைக்க முடியாது.

உம்பர்த்தோ ஈக்கோ முதலில் ஒரு புத்தகத்தைத்தான் வாங்கி வந்து வீட்டில் வைத்திருப்பார். பிறகு இன்னொன்று வந்திருக்கும். மேலுமொன்று வந்திருக்கும். பிறகு ரயில் வண்டி மாதிரி ஒன்றையொன்று பிடித்துக்கொண்டு பத்து, இருபது ஒன்றாக வந்து சேர்ந்திருக்கும். அப்புறம் என்ன? ஒட்டகம், கூடாரம் கதைதான்.

அலமாரி, தரை, சுவர், படுக்கை (மேல், கீழ்), நாற்காலி, சமையல் மேடை, அண்டா, குண்டா என்று எல்லா இடங்களிலும் புத்தகங்கள் நிறைந்துவிட்டன. பாவம், அந்த மனிதருக்குக் கிடைத்தது என்னவோ ஒரு நாற்காலியும் மேஜையும்தான். மேஜையிலும் புத்தகம்தான் காலை மேலே போட்டுக்கொண்டு ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தது.

படிக்கிறோமோ இல்லையோ வீடு முழுக்கப் புத்தகங்களை இப்படி வாங்கிக் குவிக்கும் வழக்கத்தை ஜப்பானியர்கள் ‘சுண்டோக்கு’ என்று அழைக்கிறார்கள். இதன் அர்த்தம் மேலே மேலே அடுக்கிக்கொண்டே போவது. அட இதற்குக்கூடவா பெயர் வைப்பார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால் எலிக்குஞ்சுபோல் ஒரு புத்தகம் ஓடிவருகிறது. தொண்டையைக் கனைத்துக்கொண்டு சொற்பொழிவும் நிகழ்த்துகிறது.

‘சுண்டோக்கு பற்றி உங்களுக்கு மேற்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ, ‘புத்தகத்தின் பிடியிலிருந்து தப்புவது எப்படி?’ எனும் தலைப்பில் இப்போதுதான் ஒரு புதிய புத்தகம் வந்திருக்கிறது. இதைப் படித்தால் சுண்டோக்கு உங்களைத் தீண்டாது. அட, பயப்படாமல் கையில் எடுத்துப் பாருங்கள். நான் என்ன கடிக்கவா போகிறேன்?’

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்