அந்தப் புத்தரின் சிலை பல ஆண்டுகளாகக் கவனிப்பாரற்றுதான் கிடந்தது. சாதாரணமாகக் கூரை வேயப்பட்ட கட்டிடம் ஒன்றில், அழுக்கும் தூசியும் படிந்து, அமைதியாக அரைக்கண் மூடிய நிலையில், சம்மணமிட்டுத் தியானத்தில் கிடந்தார் புத்தர். ஒரு வகை மணலும், அதைப் பிணைக்கும் திரவமும் நீரும் கலந்து உருவாக்கப்பட்ட சாந்து கொண்டு திறமையாக அந்தச் சிலையை வடிவமைத்திருந்தார்கள்.
தாய்லாந்தில் ஏகப்பட்ட புத்தர் ஆலயங்கள் உண்டு. இப்படிக் கவனிப்பே இல்லாமல் கிடக்கும் புத்தர் சிலைகளும் உண்டு. இந்தச் சிலை சுமார் பத்து அடி உயரத்தில் இருந்ததால், அதை வைக்கும் அளவுக்குப் ஆலயங்களில் அப்போது இடம் இல்லாததால், வாட் டிரைமிட் என்ற இடத்தில் போட்டு வைத்திருந்தார்கள். 1950-களில் அங்கே புதிய ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டது. அந்த ஆலயத்தின் ஓரிடத்தில் இந்தப் புத்தர் சிலையை வைக்க முடிவு செய்தார்கள்.
புத்தர் சிலை தூசி தட்டப்பட்டது. பெரிய கயிறுகள் கொண்டு சிலையைக் கட்டித் தூக்கினார்கள். அவர்கள் நினைத்ததைவிட, சிலை அதிக எடையுடன் இருந்தது. கோயிலின் வாயிலை நோக்கிச் சிலையைத் தூக்கிச் சென்றார்கள். கயிறு அறுந்தது. சிலை பெரும் சத்தத்துடன் தரையில் விழுந்தது. அதிர்ச்சியுடன் பார்த்தனர். பெரிய அளவில் சேதாரமின்றிக் கீழே கிடந்தார் புத்தர். சிலையின் ஒரு பகுதியில் மட்டும் சேதாரம். அந்தப் பகுதியை உற்றுநோக்கியபோது, உள்ளே ஏதோ பொன்மஞ்சள் நிறத்தில் பளபளப்பாகத் தெரிந்தது. அனைவரது கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன. தங்கம்போலத் தெரிகிறதே? ஆராய்ந்து பார்த்தார்கள். ஆம், தங்கமேதான்.
புத்தர் சிலைக்குள் தங்கம் பதுக்கப்பட்டிருக்கிறதா? சிலையின் மேற்பூச்சு மேலும் கொஞ்சம் உடைத்து எடுக்கப்பட்டது. உள்ளே இன்னும் அதிகமாகக் கெட்டித் தங்கம் தென்பட்டது. மேலும் மேலும் கவனமாக உடைத்தார்கள். அப்போதுதான் புரிந்தது. உள்ளே தங்கத்தாலான புத்தர் ஒருவர் இருக்கிறார் என்று.
அந்த மேற்பூச்சை முற்றிலும் உடைத்தார்கள். பளபளவென தங்கத்தாலான புத்தர், ’ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்று சொல்லாமல் சொல்லியபடி வெளிப்பட்டார். முட்டை வடிவத் தலை. சுருள் சுருளாக முடியும் கொண்டையும். பாதி மூடியிருந்தாலும் கருணையும் சாந்தமும் நிறைந்து ததும்பும் கண்கள். தொங்கும் காதுகள். எடுப்பான நாடி. கூரிய நாசி. அமைதியான உதடுகள். 5.5 டன் எடையுடன், 9.8 அடி உயரத்தில் தங்க புத்தர், தாய்லாந்து தேசத்தையே சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
சரி, எங்கிருந்து வந்தார் இந்தத் தங்க புத்தர்? யார் இந்தச் சிலையைச் செய்தார்கள்? சிலையின் வயது என்ன? தங்க புத்தர் மேல் சாந்து கொண்டு பூசி, அவரைச் சாதாரண புத்தராக ஏன் பதுக்கி வைத்திருந்தார்கள்?
இந்தக் கேள்விகளுக்கான துல்லியமான பதில்கள் தெரியாது. ஏதோ கொஞ்சம் வரலாறு கிடைத்திருக்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் தாய்லாந்தின் ஒரு பகுதியில் சுகோத்தாய் என்ற ராஜ்யம் அமைந்திருந்தது. அதனை ஆண்ட மன்னர்களே, இதுபோன்ற முட்டை வடிவத்தில் தலை கொண்ட புத்தர் சிலைகளை உருவாக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.
எனவே சுகோத்தாய் ராஜ்யத்தில்தான் இந்தச் சிலையும் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுவரை தாய்லாந்தில் வலிமையாக விளங்கிய இன்னொரு ராஜ்யம், அயூத்தயா. சுகோத்தாய் ராஜ்யத்திலிருந்து 1400-க்குப் பிறகு, இந்தத் தங்க புத்தர் சிலை அயூத்தயா ராஜ்யத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
1767-ல் பர்மியர்கள், அயூத்தயா மீது படையெடுத்தார்கள். அப்போது அந்த ராஜ்யம் வீழ்ந்தது. பர்மியர்கள், தங்க புத்தர் சிலையைக் கொள்ளையடித்துவிடக் கூடாது என்பதற்காகவே அதன் மீது சாந்து கொண்டு பூசி, அதனைச் சாதாரண புத்தர் சிலைபோல மாற்றினார்கள். எனவே பர்மியர்கள் அந்தச் சிலையைக் கண்டுகொள்ளவில்லை. சிதைந்து போன அயூத்தயா ராஜ்யத்தில் புத்தர் சிலையும் கேட்பாரின்றிக் கிடந்தது.
1782-ல் தாய்லாந்தில் முதலாம் ராமாவின் ஆட்சி வந்தது. பாங்காக்கைத் தனது தலைநகராக அறிவித்த ராமா, அங்கே பல புதிய புத்த ஆலயங்களைக் கட்டச் சொன்னார். அயூத்தயா ராஜ்யத்துப் பழைய புத்தர் சிலைகள் பலவற்றையும் அந்தக் ஆலயங்களில் வைக்கச் சொன்னார். அப்படி, ஓர் ஆலயத்தில் இந்தப் புத்தர் சிலையும் வைக்கப்பட்டது. அதற்குப் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ராமா என்ற அரசர், பாங்காக்கின் வாட் சோட்டாநரம் என்ற புத்தர் ஆலயத்தில் இந்தப் புத்தர் சிலையை நிறுவினார். அங்கே சாதாரண புத்தருக்குள் தங்க புத்தர் இருக்கிறார் என்ற ரகசியம் தெரியாமலேயே மக்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் வாட் சோட்டாநரம் ஆலயம் கைவிடப்பட்டது. யாரும் அதைப் பழுது பார்க்கவில்லை. பாழடைந்த ஆலயத்துக்குள் அழுக்கடைந்த புத்தர் அமைதியாகக் கிடந்தார். 1935-ல் இந்தப் புத்தர் சிலை, வாட் டிரைமிட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. தகரக் கொட்டகைக்குள் போடப்பட்டது. பின்புதான் மேலே சொன்னபடி, சாதாரண புத்தர் தங்க புத்தராக வெளிவந்தார்.
Phra Phuttha Maha Suwana Patimakon என்பது தங்க புத்தருக்கு வைக்கப்பட்டுள்ள பெயர். 2010-ல் வாட் டிரைமிட்டில் இந்தப் புத்தர் சிலைக்கென அழகான பெரிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. புத்தர் சிலையின் உண்மையான வயதைக் கண்டறிய முடியவில்லை. சிலையை 18 காரட் தங்கத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். புத்தரின் உடலில் 40% சுத்தத் தங்கம் கலந்திருக்கிறது. முகத்தில் 80%, முடியும் கொண்டையும் 99% சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தச் சிலையின் இன்றைய உத்தேச மதிப்பு 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
உலகில் இருக்கும் மிகப்பெரிய தங்க புத்தர், இந்தத் தாய்லாந்து புத்தர்தான்!
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago