அவர் ஓர் அடிமை. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். பெயர் தெரியவில்லை. சூரியன் உதிக்கும்போதே பிரேசிலின் பாகாஜெம் என்ற சுரங்கத் துக்குச் சென்றுவிடுவார். நாள் முழுக்க அங்கேதான் வேலை. சுரங்க அதிகாரி கள் கருணை காட்டினால்தான் தண்ணீர், உணவுகூட எடுத்துக்கொள்ள முடியும். இரவில்தான் வீடு திரும்ப வேண்டும்.
அன்று அவருக்கு அற்புதமான நாள். அவர் வாழ்வையே மாற்றிய நாள். வழக்கம்போல சுரங்கத்தைத் தோண்டிக்கொண்டிருந்த அவர் கண்களில் அந்தப் பொருள் மின்னியது. கையில் எடுத்துப் பார்த்தார். சந்தேகமே இல்லை. வைரம். அதன் மதிப்பு அவருக்குத் தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், அவரால் அதைச் சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டு போய்விட முடியாது. மாட்டிக்கொண்டால் கொன்றுவிடுவார்கள்.
அந்த வைரத்தை, கண்காணிப்பாளர் கஸிமிரோவிடம் ஒப்படைத்தார். அவரின் முகம் ஒளிர்ந்தது. அதுவரை அந்தச் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் அதுவே. அந்தப் பெண்ணுக்குப் பணம், உடை, தங்குவதற்கு வீடு கிடைத்தது. கூடவே வாழ்நாள் ஓய்வூதியத் தொகை தருவ தாகவும் சொன்னார்கள். அந்த வைரம் அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தது.
வைரம் 3 ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது. அதை வாங்கிய முதல் நபர், ரியோ டி ஜெனிரோவில் இன்னொரு நபருக்கு முப்பதாயிரம் டாலருக்கு விற்றார். அது ஆம்ஸ்டர்டாமில் மற்றொரு நபரிடம் முப்பத்தைந்தாயிரம் டாலருக்குக் கைமாறியது. பின்பு அழகாக வெட்டப்பட்டு, தலையணை போன்ற வடிவத்தில் செதுக்கப்பட்டது.
பாரிஸில் புகழ்பெற்ற வைர வியாபாரிகளான ஹால்ஃபென் நிறுவனத்தார், அதை வாங்கிக் கொண்டார்கள். அதற்கு The Star of the South என்று பெயர் சூட்டினார்கள். இந்தியாவில் நடந்த ஒரு வைரக் கண்காட்சியிலும் அந்த வைரம் மின்னியது. இந்தியாவின் பெரிய சமஸ்தானங்களில் ஒன்றான பரோடோவின் மகாராஜா மல்ஹர் ராவ் அதைப் பேரம் பேசி, 80 ஆயிரம் பவுண்டுக்கு வாங்கினார். பரோடாவின் நட்சத்திரம் என்ற பெயருடன் சமஸ்தானத்தின் கஜானாவில் சேர்ந்தது.
அதே கஜானாவில் மேலும் இரண்டு வைரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. ஒன்று அக்பர் ஷா வைரம், இன்னொன்று பரோடாவின் நிலவு வைரம்.
அக்பர் ஷா - முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் ராஞ்சிக்கு அருகில் குக்ரா என்ற இடத்தி லுள்ள ஒரு சுரங்கத்திலிருந்து தோண்டியெடுக்கப் பட்டது. முகலாயப் பேரரசின் மீது படையெடுத்து வந்த பெர்சியாவின் நாதிர் ஷா, மயிலாசனம் உள்ளிட்ட பல்வேறு செல்வங்களைக் கொள்ளை யடித்துவிட்டுச் சென்றபோது, அதில் அக்பர் ஷாவும் இருந்தது. பின் நாதிர் ஷா கொல்லப்பட்டார். மயிலாசனம் சிதைக்கப்பட்டது. அவர் அபகரித்துச் சென்ற செல்வங்கள், பலராலும் கொள்ளை அடிக்கப்பட்டன. அப்போது அக்பர் ஷா வைரம் எங்கே, யாரிடம் சென்றது என்ற சரித்திரக் குறிப்புகள் எதுவும் இல்லை.
1860-களில் துருக்கியில் நடைபெற்ற வைரக் கண்காட்சி ஒன்றில் அக்பர் ஷா, கண் சிமிட்டிக்கொண்டிருந்தது. 1866 பிப்ரவரியில் கான்ஸ்டாண்டிநோபிளில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், ஜார்ஜ் ப்ளாக் என்ற லண்டனைச் சேர்ந்த வைர வியாபாரி, அக்பர் ஷாவை வாங்கினார். ஜார்ஜ் பிளாக் மூலமாக அக்பர் ஷா மீண்டும் இந்தியாவுக்கு வந்தது.
1867-ல் பரோடாவின் மகாராஜாவாக இருந்த கண்டே ராவ் (மல்ஹர் ராவின் தந்தை), அக்பர் ஷாவை வாங்கிக்கொண்டார். அது பரோடாவின் கஜானாவுக்கு இப்படியாக வந்துசேர்ந்தது.
பரோடாவின் நிலவு வைரம் எந்தச் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டது, யாரிடமிருந்து வாங்கப்பட்டது போன்ற வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. பரோடாவின் கஜானாவிலிருந்த சீனியர் வைரம் அதுவே. பல நூறு வருடப் பாரம்பரியம் கொண்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் பரோடா ராஜ குடும்பத்தினர், ஆஸ்திரிய நாட்டு மகாராணி மரிய தெரஸாவுக்குப் பரோடாவின் நிலவைப் பரிசுப் பொருளாக அனுப்பி வைத்தார்கள். ஆனால், கடல் கடந்து வந்த வைரம் ராசி இல்லாதது என்று சொல்லி அதை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
1919. முதல் உலகப் போர் முடிவடைந்த நேரம். உலகம் எங்கும் கடும் பொருளாதார நெருக்கடி. பரோடா சமஸ்தானத்தின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக அப்போதைய மகாராஜாவான சாயாஜி ராவ், கஜானாவிலிருக்கும் வைரம் ஒன்றை விற்க முடிவு செய்தார்.
மூன்று வைரங்களில் எதை விற்கலாம்? பரோடாவின் நட்சத்திரம் மிகப்பெரியது, எனவே அது இருக்கட்டும். அக்பர் ஷா வைரம் சிறியது. அதை விற்றுவரும் பணம் நெருக்கடியைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காது. எனவே பாரம்பரியப் பெருமை கொண்ட பரோடாவின் நிலவை விற்க முடிவெடுத்தார் சாயாஜி ராவ்.
அவர், பரோடாவின் நிலவை யாரிடம் விற்றார் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வைரம், லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. 1944-ல் அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் டெய்ட்சென், பரோடாவின் நிலவை வாங்கினார். அடுத்த ஆறு ஆண்டுகளில் டெட்ராய்ட் நகரத்தின் புகழ்பெற்ற மேயர் ஜுவல்லரியின் நிர்வாகியான ரோஸன்பௌமிடம் பரோடாவின் நிலவு கைமாறியது.
ரோஸன்பௌம், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரமான மர்லின் மன்றோவைச் சந்தித்தார். பரோடாவின் நிலவைக் காட்டி, ‘நீங்கள் இதை அணிந்துகொண்டு நடித்தால், இந்த வைரத்துக்குப் பெருமை. எங்களது மேயர் ஜுவல்லரிக்கும் கௌரவம்’ என்றார். மர்லின் மன்றோவும் பரோடா நிலவு வைரத்தைக் கழுத்தில் அணிந்துகொண்டு ஒரு படத்தின் பாடல் காட்சியில் நடிக்க அதன் புகழ் உலகம் எங்கும் பரவியது.
1990-ல் நியூயார்க் நகரில் பரோடா நிலவு ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுக்கப்பட்ட தொகை 2,97,000 டாலர். யார் அதை ஏலம் எடுத்தார்கள், இப்போது யாரிடம் அந்த வைரம் இருக்கிறது என்பதெல்லாம் ரகசியமாகவே இருக்கிறது. 2008 ஏப்ரலில் பெல்ஜியத்தின் வைர நகரமான அண்ட்வெர்பில் ‘உலகில் 51 தலைசிறந்த வைரங்கள்’ கண்காட்சி நடந்தது. அதில் கோஹினூர், தி ஹோப், தி ஸ்டார் ஆஃப் ஆப்பிரிக்கா, தி நிஜாம், தி நேபாள், தி கோல்டன் மெட்ராஸ் என்று பல உலகப் புகழ் வைரங்களோடு பரோடாவின் நிலவும் ஜொலித்தது.
அக்பர் ஷா இன்னும் பரோடாவில்தான் இருக்கிறதா அல்லது ராஜ குடும்பத்தினர் யாரிடமாவது விற்றுவிட்டார்களா என்று தெரியவில்லை. பிரேசிலில் ஓர் அடிமைப் பெண் கண்டெடுத்த அந்த நட்சத்திர வைரம் மட்டும் இன்னும் ராஜ குடும்பத்தின் மீதி இருக்கும் செல்வங்களோடு உறங்கிக்கொண்டிருக்கிறது.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago