இடம் பொருள் மனிதர் விலங்கு: தாகூரின் வகுப்பறை

By மருதன்

ஒரு பாடப் புத்தகத்தைத் திறப்பது என்பது சும்மா கிடக்கும் ஒரு முதலையை எழுப்பி அதன் வாயை இரண்டு கைகளாலும் பலவந்தமாகப் பிரித்துத் திறப்பதுபோல் இருக்கிறது. எனக்கு மட்டும்தான் அப்படித் தோன்றுகிறதா அல்லது, மற்றவர்களுக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகச் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். முதலை அல்ல, கரடி என்று ஒருவனும்; இல்லை, அது பாம்பு என்று இன்னொருவனும்; கிடையாது, பூதம் என்று மற்றொருவனும் சொன்னான். அந்த அளவில்தான் எங்களுக்குள் வேறுபாடு.

என்றாவது ஒரு நாளாவது உற்சாகமாக ஒரு பாடலை முணுமுணுத்தபடி பள்ளிக்கூடத்துக்குப் போயிருப்பேனா? வகுப்பறைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது, அடடா, அறிவுச் செல்வம் கொட்டிக்கிடக்கும் பூஞ்சோலை அல்லவா இது என்று என்றாவது சிலிர்த்திருப்பேனா? ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று ஆசிரியர்கள் வரிசையாக வந்து பாடம் எடுக்கும்போது அறிவுக்கண் திறக்கிறதோ இல்லையோ, இதோ இந்த இரண்டு கண்களும் அப்படியே மயங்கி, சரிந்து, சொருகிக்கொண்டுவிடும்.

ஆனால், ஒரு பொட்டுத் தூக்கம் இல்லாமல் நிலாவை இரவு முழுக்க என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியும். காற்றில் அசைந்து, அசைந்து ஆடும் இலைகளைப் பார்த்துப் பார்த்துப் பரவசம் கொள்ளமுடியும். ஒரு மானை, ஆட்டுக்குட்டியை அல்லது ஒரே ஓர் எறும்பைப் போய்ப் படித்துவிட்டு வா என்று சொல்லுங்கள். உற்சாகமாக ஓடிச்சென்று அதன் ஒவ்வோர் அசைவையும் கவனித்து அறிவேன்.

நாளை வரும்போது மழை பற்றி ஒரு பாடல் எழுதிவா என்று வீட்டுப்பாடம் கொடுங்கள். உங்களுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு, ஒன்றல்ல, இரண்டல்ல பக்கம் பக்கமாகப் பாடல்களை நிரப்பி வந்து உங்களை அசத்துவேன். போதும் நிறுத்து தாகூர் என்று நீங்கள் அலுத்துக்கொள்ளும்வரை பாடிக்கொண்டே இருப்பேன்.

பறவைகளின் சத்தங்களை ஏன் மனப்பாடச் செய்யுளில் நீங்கள் வைப்பதில்லை? இந்த ஏட்டில் உள்ள உயிரற்ற சொற்களையே ஏன் மீண்டும் மீண்டும் நீங்கள் போதிக்கிறீர்கள்? அதையே நானும் மீண்டும் மீண்டும் மந்திரம்போல் எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்துகிறீர்கள்? ஒவ்வொரு நாளும் புதிய கதிரவன் வருவதுபோல் நாம் ஏன் தினமும் புதிய பாடங்களை உருவாக்கிப் படிக்கக் கூடாது? ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளைச் சற்று ஓரம் தள்ளிவிட்டு, நாம் ஏன் புதிய கதைகளை உருவாக்கக் கூடாது? புதிய படங்களை ஏன் வரையக் கூடாது? புதிய கவிதைகளை ஏன் படைக்கக் கூடாது?

idamjpgright

முகவாயை வருடியபடி யோசித்துக்கொண்டிருந்தார் ரவீந்திரநாத் தாகூர். (பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் நீண்ட, வெளுத்த தாடியொன்று வரவிருந்தது). அச்சம் என்றால் என்னவென்றே தெரியாத ஓரிடம் எனக்கு வேண்டும். இதை எழுதலாமா, இதைப் படிக்கலாமா என்றெல்லாம் அங்கே யாரும் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. நினைத்ததைத் தயக்கமின்றி செய்யலாம். யாரும் யாரையும் கட்டுப்படுத்த மாட்டார்கள். எனக்கு ஆர்வமில்லாததை, பிடிக்காததை நான் செய்ய வேண்டியிருக்காது.

அச்சம் இல்லாத இடத்தில் என்ன இருக்கும்? மலர்களின் நறுமணத்தைப்போல் சுதந்திரத்தின் வாசம் பரவியிருக்கும். அந்த வாசம் என் உறக்கத்தைக் கலைத்து, என் சோர்வுகளை எல்லாம் நீக்கி, புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும். அப்போது எனக்கான பாடத்தை நான் தேர்வு செய்துகொள்வேன். எனக்கான கவிதைகளை நான் எழுதிக்கொள்வேன். என் பாடலை நானே சத்தம் போட்டுப் பாடுவேன். விலங்குகளோடு விலங்காகச் சுற்றுவேன். மரங்களோடு பேசுவேன். புல் தரையில் படுத்துக் கிடப்பேன். ஆகாயத்தை என் விழிகளால் அளப்பேன். மழையில் கல்போல் அசையாமல் நிற்பேன். கடிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, நத்தையைப் பின்தொடர்வேன்.

சுதந்திரம் இருக்கும் இடத்தில் வேறுபாடுகள் இருக்காது. ஆசிரியர், மாணவர் எனும் பேதம் இருக்காது. சாதி, நிறம், மதம், மொழி எதுவும் ஒருவரையும் வேறுபடுத்தாது. என்னுடைய தங்க மொழியான வங்கத்தில் கவி பாடுவேன். அதே நேரம், ஆங்கிலமும் கற்பேன்.

சுதந்திரமும் சமத்துவமும் இருக்கும் இடத்தில் உண்மை இருக்கும். பொய் பேச வேண்டிய அவசியம் ஒருவருக்கும் இருக்காது. பகை இருக்காது, மோதல்கள் இருக்காது, போட்டியோ பொறாமையோ இருக்காது. எதிரிகள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். நான் என் நண்பர்களோடு இணைந்திருப்பேன். என் ஊர், பக்கத்து ஊரோடு இணைந்திருக்கும். என் நாடு உலகை அணைத்துக்கொள்ளும். உலகம் என்னுடையதாக இருக்கும்.

நான் என் வகுப்பறையின் பிடியிலிருந்து மீளும்போது என் நாடு பிரிட்டனின் பிடியிலிருந்து மீண்டிருக்கும். என் மக்கள் வறுமையின் பிடியிலிருந்தும் அறியாமையின் பிடியிலிருந்தும் மீண்டிருப்பார்கள். என்னை, என் நண்பர்களை, என் உறவினர்களை, என் ஊரை, என் மக்களை யாரும் பிளவுபடுத்த முடியாமல் போகும். அப்படி ஒரு காலம் வரும்.

ஒரு புதிய கதிரவன் தோன்றுவான். புதிய சிந்தனைகள் மலரும். புதிய நாடு. புதிய மக்கள். புதிய பள்ளிக்கூடம். புதிய புத்தகங்கள். புதிய ஆசிரியர்கள். மொத்தத்தில் ஒரு புதிய எதிர்காலம் அமையும். அப்போது நான் பெருமிதத்தோடு தலையை நிமிர்த்தி என் வகுப்பறையை நோக்கி உற்சாகமாக நடைபோடுவேன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்