கதையும் காமிக்ஸும் பிடிக்கும்: இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

By கிருத்திகா முருகேசன்

சதுரங்கப் போட்டியில் உலகிலேயே இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தைப் பெற்று, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார் குகேஷ். இவருக்கு முன்பு பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதங்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது குகேஷ், 12 வயது 7 மாதம், 17 நாட்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்!. உலக அளவில் முதல் இடத்தில் இருப்பவர் உக்ரைனைச் சேர்ந்த சர்ஜி கர்ஜாகின். இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கிறார் குகேஷ்.

மருத்துவர்களாக இருக்கும் குகேஷின் பெற்றோர், ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் மூலம்தான் இவருக்கும் விளையாட்டில் ஆர்வம் வந்தது. விவரம் தெரிந்த பிறகு உறவினர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். வேலம்மாள் பள்ளியில் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, குகேஷின் திறமையை அறிந்து, விளையாட்டு ஆசிரியர் ஊக்கப்படுத்தினார். தொழில்முறை விளையாட்டில் இப்படித்தான் காலடி எடுத்து வைத்தார். கடின உழைப்பால் ஏழே ஆண்டுகளில் உலக சாதனையை நிகழ்த்திவிட்டார்!

இந்தச் சாதனையைச் செய்தபோது எப்படி இருந்தது என்று கேட்டால், “உலக அளவில் சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியம் எனக்குள் இருந்தாலும், அந்தச் சாதனை நிகழ்த்தியபோது இயல்பாகத்தான் இருந்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்” என்கிறார்.

chess-3jpg

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும்?

விளையாட்டில் மட்டுமே அதிக கவனம் இருக்க வேண்டும். கடினமான பயிற்சி வேண்டும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் வேண்டும். வேகமாக முடிவெடுக்கக்கூடிய ஆற்றல் வேண்டும். நான் முதல் மதிப்பெண் பெறும் மாணவனாக இருந்தேன். ஆனால், 2015-ம் ஆண்டிலிருந்து என்னால் பள்ளிக்குத் தொடர்ந்து செல்ல முடியவில்லை.

ஆண்டு முழுவதும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குப் போட்டிக்காகப் பறந்துகொண்டே இருக்கிறேன். கடந்த ஓராண்டில் மட்டும் 243 போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பள்ளி செல்வதற்கு நேரமே கிடைக்காது. எனக்காகப் பள்ளி சிறப்புச் சலுகை வழங்கியிருக்கிறது. பரீட்சை மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இனி பரீட்சை எழுவதும் கடினம் என்பதால் விலக்கு கேட்க முடிவு செய்திருக்கிறோம்.

தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி?

ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரம்வரை பயிற்சி செய்வேன். ‘செஸ் பேஸ்’ இந்தியா பத்திரிகையைப் படித்து, விஷயங்களை அறிந்துகொள்வேன். என்னை முழு நேரமும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் போட்டிகளுக்காகப் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் மருத்துவரான என் அப்பா, தொழிலை விட்டுவிட்டார். என்னுடைய இந்தச் சாதனையில் அப்பா, பயிற்சியாளர்கள் பாஸ்கர், விஜயானந்த், கார்த்திகேயன், விஷ்ணு பிரசன்னா ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது.

மற்ற சிறுவர்களைப்போல் இருக்க முடியவில்லை என்ற எண்ணம் வந்திருக்கிறதா?

சில நேரத்தில் அப்படித் தோன்றும். கடந்த 4 ஆண்டுகளாக என் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடுவதற்கு முடியவில்லை. பண்டிகை, கல்யாணம் என எதிலும் கலந்துகொள்ள முடிந்ததில்லை. ஆனால், என்னுடைய இலக்குப் பெரியதாக இருப்பதால், சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற தெளிவும் எனக்கு இருக்கிறது.

chess-2jpgright

செஸ் தவிர, வேறு என்ன பிடிக்கும்?

நேரம் இருந்தால் திரைப்படம் பார்ப்பேன். அதிலும் கார்ட்டூன் படம் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஜாலியாக நீச்சலடிப்பேன். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவேன். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள கதை, காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பேன். ஏராளமான புத்தகங்கள் வைத்திருக்கிறேன்.

எதிர்காலத்தில் குகேஷ் எப்படி இருப்பார்?

‘சதுரங்கச் சக்கரவர்த்தி’ விஸ்வநாதன் ஆனந்த், பாபி ஃபிஷர்போல் உலக அளவில் புகழ்பெற்ற விளையாட்டு வீரனாக, இந்தியாவுக்குப் பெருமைத் தேடித் தருபவனாக இருப்பேன். அதற்காகத்தான் இவ்வளவு உழைப்பும் பயிற்சியும் செய்துகொண்டிருக்கிறேன்.

அந்த நாளுக்காக நாங்களும் காத்துக்கொண்டிருக்கிறோம், வாழ்த்துகள் குகேஷ்!விளையாட்டில் மட்டுமே அதிக கவனம் இருக்க வேண்டும். கடினமான பயிற்சி வேண்டும். எதையும் சமாளிக்கக் கூடிய மனப்பக்குவம் வேண்டும். வேகமாக முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்