பிப்பெட்: வணக்கம் பியூ. குடியரசு தினம்லாம் கொண்டாடியாச்சா?
பியூரெட்: கொண்டாடியாச்சு. என்ன மணல்ல விளையாடிட்டு இருக்க?
பிப்.: இதோ பாரு காந்தம். இந்தக் காந்தத்தை வெச்சு மணல்ல இருக்கும் இரும்புத்தூளைச் சேகரிச்சுக்கிட்டு இருக்கேன்.
பியூ.: ம். இந்த விளையாட்டு ரொம்ப ஜாலியா இருக்கும். நானும் நிறைய தடவ விளையாடி இருக்கேன். ஆமா, சிலிக்காவைப் பத்தித் தெரியுமா?
பிப்.: சிலிக்காவா? அது என்ன?
பியூ.: நீ இப்போ விளையாடிக்கிட்டு இருக்கியே மணல், இதில் அதிகமிருக்கும் வேதிப்பொருள் அதுதான். சிலிக்காங்கிறது ஆக்சிஜனேற்றம் அடைந்த சிலிக்கானின் வடிவம்தான். மணலில் அதிகம் உள்ள பொருள் இது. உலகெங்கும் கடற்கரைகள், பாலைவனங்கள் எனப் பல பகுதிகளில் இருக்கும் மணலில் இது இருக்கிறது. பூமியின் மேலோட்டில் 28 சதவீதம் சிலிக்கான்தான்.
பிப்.: அப்ப அதுதான் பூமில அதிகமுள்ள தனிமமா?
பியூ.: இல்ல, பூமியின் மேலோட்டில் அதிகமுள்ள தனிமம் ஆக்சிஜன். அதற்கு அடுத்த இடத்தில் இருக்குது சிலிக்கான். ஆனா, பூமியின் மேலோட்டில் அது தூய்மையான வடிவத்தில் அதிகம் கிடைக்கிறதில்ல. சிலிக்கான் டையாக்சைடு எனப்படும் சிலிக்கா, அல்லது சிலிக்கேட்களாக தூசி, மணல், கோள்கள், குறுங்கோள்களில் இது காணப்படுது. பிரபஞ்சத்தில் அதிகமுள்ள எட்டாவது தனிமம் சிலிக்கான்.
பிப்.: சிலிக்கான்… ம்… இப்ப ஞாபகம் வருது, அமெரிக்கால சிலிக்கான் பள்ளத்தாக்குன்னு ஒரு இடம் இருக்குல்ல!
பியூ.: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் மின்னணு பொருட்கள் சார்ந்த ஆராய்ச்சி அதிகம் நடக்கும் இடம்தான் சிலிக்கான் பள்ளத்தாக்கு. ஆப்பிள், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இங்கே உள்ளன.
பிப்.: அது சரி, அந்த இடத்துக்கு சிலிக்கான் பள்ளத்தாக்குன்னு ஏன் பேரு வந்துச்சு?
பியூ.: குறைகடத்தியான (Semiconductor) சிலிக்கான் பல்வேறு தொழிற்சாலை பயன்பாடுகளுக்குத் தேவைப்படுது. சிலிக்கான் இல்லாமல் கணினி, கைப்பேசி, நவீனத் தொழில்நுட்பச் சாதனங்கள் பலவற்றை உற்பத்தி செய்றது சாத்தியமில்ல. கணினிச் சில்லுகள், ஒருங்கிணைந்த சர்கியூட்கள், குறைக்கடத்தும் மின்னணு பொருட்களை உருவாக்க மிக மிகத் தூய்மையான சிலிக்கான் பயன்படுத்தப்படுது.
பிப்.: சிலிக்கான் இப்படிப் பயன்படுறதுக்கு என்ன காரணம்?
பியூ.: அதிக வெப்பநிலையிலும் சிலிக்கான் தாக்குப்பிடிப்பதுதான் அதற்குக் காரணம். அலோகங்கள், உலோகப்போலிகளில் இரண்டாவது அதிக உருகுநிலை (1,414 டிகிரி செல்சியஸ்), கொதிநிலை (3,265 டிகிரி செல்சியஸ்) ஆகியவற்றை சிலிக்கான் கொண்டிருக்கு.
பிப்.: ஓஹோ! இதுதான் சிலிக்கானின் தனித்தன்மையா.
பியூ.: அதேநேரம் கணினி போன்ற விலையுயர்ந்த பொருட்கள்லதான் சிலிக்கான் இருக்குன்னு நினைக்க வேணாம். கிரானைட், ஜல்லி, கான்கிரீட் போன்றவையும் சிலிக்கேட்களை அடிப்படையாகக் கொண்டவைதான். சிமெண்ட் உற்பத்தி (கால்சியம் சிலிக்கேட்), பீங்கான், மட்பாண்டங்கள், கண்ணாடி உற்பத்தி போன்றவற்றுக்கும் சிலிக்கான் பயன்படுது.
பிப்.: சிலிக்கான் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்குன்னு, சொல்லு.
பியூ.: இப்படி நிறைந்திருக்கும் அதேநேரம், அது சார்ந்து சில பிரச்சினைகளும் இருக்கவே செய்கின்றன. சிலிக்கா நுண்துகள்களை சுவாசிப்பது சிலிக்கோசிஸ் என்ற நுரையீரல் நோயை ஏற்படுத்துது. இது நுரையீரலின் மேற்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
பிப்.: எந்த சிலிக்கான் பொருளைப் பயன்படுத்தினாலும் இந்தப் பிரச்சினை வருமா?
பியூ.: ஆஸ்பெஸ்டாஸ் எனப்படும் கல்நார் சிலிக்காவால் உருவாக்கப்பட்டது. முன்பு கூரை போடுவதற்கு இந்தக் கல்நார் பரவலாகப் பயன்பட்டுச்சு. அதிலிருந்துதான் இந்தப் பிரச்சினை அதிகமானது.
பிப்.: மின்னணு கழிவைப் பத்தி நீ சொல்லவே இல்லையே.
பியூ.: ஆமா ஆமா, மின்னணு கழிவுதான் இன்றைக்கு உலகில் அதிகரித்துவரும் மிகப் பெரிய பிரச்சினை.
பிப்.: நாம சாதாரணமா நினைக்கும் சிலிக்கான் நிறைய நல்லது பண்ணுது. அதேநேரம் அதைப் பயன்படுத்தும்போதும் கழிவா வெளியேற்றும்போதும் ஜாக்கிரதையா இருக்கணும்.
பியூ.: ஆமா, ஆமா!
இந்த வாரத் தனிமம்: சிலிக்கான்
குறியீடு: Si
அணு எண்: 14
எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைந்துவிடும் சிலிக்கானை, 1823-ல் ஜான்ஸ் ஜேகப் பெர்ஸேலியஸ் முதன்முதலில் தூய்மையான வடிவத்தில் உற்பத்தி செய்தார். போக்குவரத்து வாகனங்களின் உதிரிப்பாகங்களுக்கான அலுமினிய வார்ப்பு (இவற்றில் எளிதில் உடைதல், விரிசல் இல்லாமல் இருக்க சிலிக்கான் உதவுகிறது), எஃகு சுத்திகரிப்பு, வேதியியல் தொழிற்சாலைகள் போன்றவற்றில் சிலிக்கான் பயன்படுத்தப்படுகிறது.
சூரியசக்திக் கலங்கள், எல்.சி.டி. திரை தயாரிப்பு, செயற்கை பாலிமர்களான சிலிக்கோன் மூலமாக மார்பக செயற்கை உறுப்புப் பொருத்திகள், காண்டாக்ட் லென்ஸ் போன்றவற்றை உருவாக்கவும் சிலிக்கான் பயன்படுகிறது.
நிலவில் சிலிக்கான்
1969-ல் நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள், சிலிக்கான் தட்டு ஒன்றை ஒரு வெள்ளைப் பையில் வைத்து நிலவில் விட்டு வந்தனர். அந்தத் தட்டில் 73 நாடுகளைச் சேர்ந்த நல்லெண்ண, அமைதி வாசகங்கள் நுண் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தன.
தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago