பிப்பெட்: என்ன பியூ, ரெண்டு வாரமா உன்னை ஆளையே காணோம்?
பியூரெட்: சென்னை புத்தகக் காட்சி நடந்துச்சு இல்லையா, அங்கேதான் போயிருந்தேன். நிறைய புத்தகங்களைத் தேடிப் படிச்சா தானே, நீ கேட்குற கேள்விக்கெல்லாம் ஒழுங்கா பதில் சொல்ல முடியும்.
பிப்.: ஆமாமா, நான்கூட சென்னை புத்தகக் காட்சியை எட்டிப் பார்த்தேன்.
பியூ.: ஆனா, நீ நிறைய நாள் அங்கே வந்ததுபோலத் தெரியலையே.
பிப்.: ஆமா! பொங்கல் இல்லையா, ஊருக்குப் போக வேண்டாமா?
பியூ.: நான் அறிவைத் தேடப் போனேன். நீ பண்பாட்டைத் தேடிப் போயிருக்கே, நல்லதுதான்.
பிப்.: ஆமா, இந்த வாரம் எந்தத் தனிமத்தைப் பத்திப் பார்க்கப் போறோம்?
பியூ.: ரெண்டு வாரம் முன்னாடி பார்த்தோமே நியான்...
பிப்.: ஆமா, அதுகூட கிரிப்டான், ஸெனான்னு இன்னும் ரெண்டு தனிமங்களை வில்லியம் ராம்சேயும் மோரிஸ் டிராவர்ஸும் கண்டறிஞ்சாங்கன்னு சொன்னியே.
பியூ.: ஸெனான் பத்திப் பின்னாடி சொல்றேன்னு சொல்லியிருந்தேனே.
பிப்.: அப்ப இந்த வாரம் ஸெனான்தானே?
பியூ.: ஸெனானைப் பத்திப் பார்க்கிறதுக்கு முன்னாடி, கிரிப்டான் பத்தின சுவாரசியமான தகவலை முதலில் தெரிஞ்சுப்போம். நீ காமிக்ஸ் படிப்பியா?
பிப்.: ஓ! ஸ்பைடர்மேன் காமிக்ஸ்னா எனக்கு ரொம்பப் பிடிக்குமே.
பியூ.: ஸ்பைடர்மேனுக்கு முன்னாடி வந்த முதல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ - சூப்பர்மேன். அவர் ஒரு கற்பனை கோளைச் சேர்ந்தவர். அந்தக் கோளின் பெயர் என்ன தெரியுமா?
பிப்.: தெரியலையே?
பியூ.: கிரிப்டான். ஆனா, கிரிப்டான் தனிமத்துக்கும் சூப்பர்மேன் வசிக்கும் கோளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பெயர் மட்டும்தான் ஒற்றுமை. அப்புறம் அதில் வரும் 'கிரிப்டோனைட்' என்கிற கற்பனைத் தனிமம், சூப்பர்மேனின் சக்தியைப் பறித்துவிடும் என்றும் கூறியிருப்பார்கள்.
பிப்.: அப்ப காமிக்ஸுக்கு வேதியியலும் உதவியிருக்கு.
பியூ.: அறிவியலும் அதீதக்கற்பனையும் தானே காமிக்ஸுக்கு உயிர் கொடுப்பவை. ஒரு பக்கம் அறிவியல் கண்டறிதல்களுக்குப் புதுப் புது பெயர்களைத் தேடி வச்சாங்க. அந்தப் பெயர்கள்ல சிலது, காமிக்ஸ் கதைகளுக்கும் உதவியிருக்கு.
பிப்.: ஆமா, ராம்சேயும் டிராவர்ஸும் கிரிப்டானையும் ஸெனானையும் எப்படிக் கண்டறிஞ்சாங்க?
பியூ.: திரவக் காற்றிலிருந்து காய்ச்சி வடித்தல் முறையில் ஸெனானைப் பிரிச்செடுத்தாங்க. இப்படிச் செய்யும்போது, காற்றிலுள்ள மற்ற தனிமங்கள் ஆவியாகிப் போன பின்னால என்ன இருக்குன்னு ஆராய்ஞ்சப்ப, ஸெனான், கிரிப்டான் எல்லாம் அவங்களுக்குக் கிடைச்சது.
பிப்.: இந்த ஸெனான் எதுக்கெல்லாம் பயன்படுது?
பியூ.: மின்சாரத்தை இந்த வாயு வழியாப் பாய்ச்சும்போது, நீல நிற ஒளியை ஸெனான் வெளியிடுது. அதன் காரணமா பளிச்சுனு ஒளி வீசும் ‘ஃபிளாஷ் லைட்டிங்', சூரியக்கதிர்களைப் போன்று ஒளி தரும் விளக்குகள், பனிமூட்டத்தைத் தாண்டி ஒளி தரப் பயன்படுத்தப்படும் விளக்குகள், சாலை சமிக்ஞைகள் என வெளிச்சத்துக்கு ஸெனான் தனி அடையாளம் தருது.
பிப்.: அப்புறம்?
பியூ.: உணவில் கிருமிகளைக் கொல்வதற்குச் சில விளக்குகளைப் பயன்படுத்துறாங்க, இல்லையா? அதிலும் ஸெனான் இருக்கு.
பிப்.: ஓ! இந்தப் பயன்பாடு ரொம்ப முக்கியமானதா இருக்கே.
பியூ.: அது மட்டுமில்ல, விண்கலங்களைச் செலுத்தும் வாகனங்களின் இன்ஜின்களுக்கு ஆற்றலைக் கொடுக்கவும் ஸெனான் பயன்படுது.
பிப்.: அருமை அருமை, அது எப்படி நடக்குது?
பியூ.: அறை வெப்பநிலையில், அதிக அழுத்தத்துடன் திரவ நிலையிலேயே ஸெனானைச் சேகரித்துவைக்க முடியும். அதை எளிதா ஆவியாக்கி இன்ஜினுக்கும் அனுப்ப முடியும். இதனாலதான் விண்கலங்களை முன்னோக்கிச் செலுத்தும் பொருட்கள்ல ஸெனானும் பயன்படுது. 1970-கள்ல செயற்கைக்கோள் இன்ஜின்களில் முதன்முதலா ஸெனானைப் பயன்படுத்தினாங்க.
பிப்.: ஆமா, இத்தனை விஷயங்களுக்குப் பயன்படுதே, இந்த ஸெனான் பூமில அதிகமா கிடைக்குதா?
பியூ.: இல்லை. பூமியின் வளிமண்டலத்தில் அரிதாக இருக்கும் வாயு ஸெனான்.
பிப்.: வேற எங்கெல்லாம் இருக்கு?
பியூ.: பூமிலதான் அது அதிகமில்லை. வியாழன் (Jupiter) கோளில் அதிகமிருக்கு. அதன் தாயான சூரியனில் இருப்பதைப்போல மூன்று மடங்கு ஸெனான், வியாழன் கோள்ல இருக்காம். அப்புறம் செவ்வாய் கோளிலும் இது அதிகமிருக்கு.
பிப்.: அப்ப ஸெனானைப் பார்க்க நேரா செவ்வாய்க்கும் வியாழனுக்கும் போயிட வேண்டியதுதான்.
இந்த வாரத் தனிமம்: ஸெனான்
குறியீடு: Xe
அணு எண்: 54
முதல் திட நிலை லேசரில் ஸெனான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அணு ஆயுதப் பரிசோதனை நடத்தப்படும் இடங்களில் உள்ள காற்றில் ஸெனான் 133, ஸெனான் 135 ஐசோடோப்புகளின் கதிரியக்கம் தென்படும் என்பதால், அணு ஆயுதப் பரிசோதனைத் தடை செய்யப்பட்ட இடங்களில் இந்த ஐசோடோப்புகள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து, அணு ஆயுதப் பரிசோதனை நடத்தபட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது. ஃபுளூரோராசில் என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் ஸெனான் பயன்படுகிறது.
தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago