திறந்திடு சீஸேம் 18: மகாராஜாவின் நெக்லெஸ்

By முகில்

சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பாட்டியாலா தனி சமஸ்தானமாக இருந்தது. அதை ஆண்டுகொண்டிருந்த மகாராஜா ராஜிந்தர் சிங்கின் மகன் பூபிந்தர் சிங். சொகுசாக வாழ்வதற்கென்றே பிறந்த இளவரசர். ராஜிந்தர் சிங் இறந்துபோக, ஒன்பதாவது வயதிலேயே சமஸ்தானத்தின் மகாராஜாவாகவும் மாறிப் போனார் பூபிந்தர் சிங்.

பகட்டான வாழ்க்கை. எந்த நேரமும் பளபளக்கும் புது உடைகள். கழுத்தில் ஜொலிஜொலிக்கும் நகைகள். தங்கத்தட்டில் மட்டுமே உணவு. வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த மகாராஜா பூபிந்தர் சிங், 1910-ல் தனக்கென தனி விமானம் ஒன்றையும் பிரிட்டனிலிருந்து வாங்கினார். இந்திய மகாராஜாக்களில் முதன் முதலில் விமானம் வாங்கியவர் பூபிந்தர் சிங்தான்.

ராஜ்யத்தின் நிர்வாகப் பணிகளைக் கவனிப்பதில் பூபிந்தர் சிங்குக்குப் பெரிய அளவில் அக்கறை இருந்ததில்லை. எப்போதும் அரண்மனையில் கேளிக்கை, விருந்து என்று உல்லாசமாக இருப்பார். இல்லையென்றால், துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு புலி வேட்டையாடக் கிளம்பிவிடுவார். அல்லது அவருக்கு மிகவும் பிடித்த இடமான பிரான்ஸின் தலைநகர் பாரிஸுக்குச் சென்றுவிடுவார்.

அப்படி ஒருமுறை பாரிஸூக்குச் சென்றபோதுதான், அங்கே விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்த அந்த வைரக்கல்லைப் பார்த்தார். டி பியர்ஸ் (De Beers) வைரம். உலகின் ஏழாவது பெரிய வைரம். தென் ஆப்பிரிக்காவின் கிம்பெர்லி வைரச் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. இளம் மஞ்சள் நிறத்தில் மினுமினுத்த அந்த வைரத்தைக் கண்ட நொடியே, பூபிந்தர் சிங் அதன் விலையைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. வாங்கிவிட்டார்.

கார்ட்டியே – பாரீஸில் 1847-ல் ஆரம்பிக்கப்பட்ட நகை வடிவமைப்பு நிறுவனம். ஒருநாள் அந்த நிறுவனத்துக்குச் சில டிரங்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வந்துசேர்ந்தன. ஒவ்வொரு டிரங்கு பெட்டியிலும் வைரக்கற்களும், பர்மிய மாணிக்கக்கற்களும் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. ஒரு பெட்டியில் டி பியர்ஸ் வைரம் வைக்கப்பட்டிருந்தது. பெட்டியைக் கொண்டுவந்து சேர்த்த அதிகாரிகள் கார்ட்டியே நகை வடிவமைப்பாளர்களிடம் பேசினார்கள்.

‘இந்த விலை உயர்ந்த கற்களைப் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் அனுப்பி வைத்துள்ளார். இவற்றைக் கொண்டு மிக அழகான நெக்லெஸ் ஒன்றை உருவாக்கித் தாருங்கள். அதைப்போல் ஒரு நெக்லெஸ் உலகில் யாரிடமும் இருக்கவே கூடாது. நெக்லெஸின் பிரதானக் கல்லாக டி பியர்ஸ் வைரம் ஜொலிக்க வேண்டும். எங்கள் பாட்டியாலா மகாராஜா இந்த நெக்லெஸை அணிந்திருக்கும்போது உலகமே வியந்து பார்க்க வேண்டும்’ என்று தங்கள் விருப்பத்தைச் சொன்னார்கள்.

கார்ட்டியே நிறுவனம் பெருமையுடன் அந்த வேலையை ஏற்றுக்கொண்டது. நகை வடிவமைப்பதில் சிறந்தவர்கள் சேர்ந்து அந்தப் பணியைத் தொடங்கினார்கள். முதலில் நெக்லெஸின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்று வரைபடம் ஒன்றை உருவாக்கினார்கள். அதில் கற்கள் எப்படி எல்லாம் பதிக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டார்கள். அதற்கேற்ப வைரக்கற்களை எல்லாம் பட்டைத் தீட்டினார்கள்.

இந்த நெக்லெஸை முழுமையாக வடிவமைத்து முடிக்க மூன்று வருடங்கள் ஆகின. பிளாட்டினத்தால் ஆன ஐந்து வரிசைச் சங்கிலி. அதில் மொத்தம் 2,930 வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நெக்லெஸின் பிரதான டாலராக, பட்டைத் தீட்டப்பட்ட டி பியர்ஸ் வைரம், ஒரு கோல்ஃப் பந்து அளவில், 234.65 காரட் மதிப்பில், இளம் மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது. தவிர, மேலும் ஏழு பெரிய வைரங்களும் அந்த நெக்லெஸில் பதிக்கப்பட்டிருந்தன. ஏராளமான பர்மிய மாணிக்கக்கற்களால் அந்த நெக்லெஸ் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

1928-ல் மகாராஜா பூபிந்தர் அந்த நெக்லெஸை முதன் முதலில் அணிந்தார். அதன் அழகில் எல்லோரும் பிரமித்துவிட்டனர். அதற்குப் ‘பாட்டியாலா நெக்லெஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் பூபிந்தர் சிங், தான் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகளில் எல்லாம் பாட்டியாலா நெக்லெஸை அணிந்து காட்சி கொடுத்தார். 1938-ல் அவர் இறந்து போனார். அதற்குப் பிறகு மகாராஜாவாகப் பதவியேற்ற அவரது மகன் யத்விந்தர் சிங், சில முக்கியமான தருணங்களில் பாட்டியாலா நெக்லெஸை அணிந்துகொண்டார். மற்ற நாட்களில் அது பாட்டியாலாவின் கஜானாவில் பத்திரமாக இருந்தது.

நாடு சுதந்திரமடைந்த பிறகு, பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. மகாராஜாக்களின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டன. அவர்கள் பெரும்பாலான சொத்துகளையும் இழந்தார்கள். 1948, ஏப்ரல்வரை, பாட்டியாலாவின் கஜானாவில் இருந்த அந்த நெக்லெஸ், அதன் பிறகு காணாமல் போனது. யார் எடுத்துச் சென்றார்கள்? யத்விந்தர் சிங் அதைப் பதுக்கி வைத்துக்கொண்டாரா என்பது போன்ற எந்த விவரங்களும் தெரியாது. அந்த நெக்லெஸின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.115 கோடிக்கும் மேல்.

1982-ல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரத்தில் ஏலம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் டி பியர்ஸ் வைரம் மட்டும் ஏலத்துக்கு வந்தது. எல்லோரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். டி பியர்ஸ் வைரம் மட்டும் இங்கே இருக்கிறதென்றால், பாட்டியாலா நெக்லெஸ் என்ன ஆனது என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அந்த ஏலத்தில் டி பியர்ஸ் வைரம் ஏலம் விடப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

1998-ல் கார்ட்டியே நிறுவனத்தைச் சேர்ந்த எரிக் என்பவர், லண்டனில் பழைய நகைகளை விற்கும் கடை ஒன்றுக்குச் சென்றார். அங்கே ஒரு நெக்லெஸின் பாகங்களைக் கண்டார். ஆராய்ந்து பார்த்தபோது அது கார்ட்டியே நிறுவனம் வடிவமைத்த பாட்டியாலா நெக்லெஸ்தான் என்று தெரியவந்தது. அதிலிருந்த பல வைரக்கற்களும், பர்மிய மாணிக்கக்கற்களும் காணாமல் போயிருந்தன. மீதமிருந்த நெக்லெஸை கார்ட்டியே நிறுவனம் விலைகொடுத்து வாங்கியது.

கார்ட்டியே நிறுவனம் தன் வரலாற்றில் வடிவமைத்ததிலேயே மிகவும் விலைமதிப்புள்ள நகை என்றால் அது ‘பாட்டியாலா நெக்ஸெல்’தான். எனவே அந்த நெக்லெஸை மறுபடியும் உருவாக்கத் திட்டமிட்டது. டி பியர்ஸ் வைரத்தின் மாதிரி, காணாமல் போன பிற வைரங்களின் மாதிரிகளைக் கொண்டு நான்கு ஆண்டுகள் உழைப்பில் ‘பாட்டியாலா நெக்ஸெஸ்’ போன்ற ஒன்றை மறுபடியும் உருவாக்கியிருக்கிறது.

இருந்தாலும் பூபிந்தர் சிங் தன் கழுத்தில் கம்பீரமாக அணிந்திருந்தது போன்ற அசல் ‘பாட்டியாலா நெக்லெஸை’ இனி எவராலும் எப்போதும் உருவாக்க முடியாது என்பதே கசப்பான உண்மை.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்