இடம் பொருள் மனிதர் விலங்கு: குறுக்கே வரும் பூனை

By மருதன்

நீங்கள் வெளியில் கிளம்பிச் செல்லும்போது பூனை குறுக்காக ஓடினால் அன்றைய தினம் ஏதோ ஏடாகூடாமாக நடக்கப் போகிறது என்று அர்த்தம். அது எந்த மாதிரியான ஏடாகூடம் என்பது பூனை இடமிருந்து வலமாக ஓடியதா அல்லது வலமிருந்து இடமாக ஓடியதா என்பதைப் பொறுத்திருக்கிறது. தப்பித்தவறி அந்தப் பூனையின் நிறம் கறுப்பாக இருந்துவிட்டால், நீங்கள் நிஜமாகவே பாவம்.

நெதர்லாந்தில் பூனையை அருகில் வைத்துக்கொண்டு எந்த ரகசியத்தையும் பேச மாட்டார்கள். எதுவும் தெரியாததுபோல் அப்பாவியாக ஒரு மூலையில் அமர்ந்திருந்தாலும் நாம் பேசும் எல்லாவற்றையும் பூனை ஒரு வார்த்தை விடாமல் கேட்டு வைத்துக்கொள்ளுமாம். பிறகு ஊர் முழுக்கப் பரப்பிவிடுமாம்.

பூனை மழையில் நனைந்துவிட்டால் இத்தாலியில் இருப்பவர்கள் மகிழ்வார்கள். அது எப்போது தும்மும் என்று காத்திருப்பார்கள். பூனை தும்மினால் பண வரவு இருக்குமாம். ஆனால் கவனம், சேர்ந்தாற்போல் மூன்று முறை தும்மிவிட்டால் அன்றிரவு உங்களுக்குக் காய்ச்சல், சளி வந்துவிடும். எனவே முதல் தும்மலைக் கேட்டதும் அங்கிருந்து ஓடிச் சென்றுவிடுங்கள்.

மெக்சிகோவில் இரண்டு கண்ணாடிகளை எடுத்து வந்து ஒன்றை இன்னொன்று பார்க்குமாறு வைத்துவிட்டால் முடிந்தது உங்கள் கதை. சொய்ங் என்று ஒரு பெரிய ஒளி தோன்றும். அதிலிருந்து ஒரு பெரிய சாத்தான் மலையைப்போல் வீட்டை உடைத்துக்கொண்டு வெளியில் வரும். என்னை ஏன் வரவழைத்தாய் என்று கேட்டு உங்களை மாத்திரமல்ல, உங்கள் ஊரையே ஒருவழி செய்துவிடும். எங்காவது அருகருகில் இரண்டு கண்ணாடி இருந்தால்கூட அதை உடனடியாகப் பிரித்துவிடுங்கள். இது மூக்குக் கண்ணாடிக்குப் பொருந்தாது.

துருக்கியில் இருக்கும்போது உங்கள் கை அரிக்கிறதா? வலதா, இடதா என்று பாருங்கள். இடது என்றால் உங்களிடமுள்ள பணத்தை யாராவது வந்து பறித்துக்கொண்டு போய்விடுவார்கள். வலது என்றால் நீங்கள் விசில் அடிக்கலாம். கத்தைக் கத்தையாகப் பணம் வந்து கொட்டப் போகிறது. லித்துவேனியாவுக்கு விசில் ஆகாது. அங்குள்ள தூங்குமூஞ்சி பூதம் விசில் சத்தம் கேட்டால் மட்டும் டக்கென்று விழித்துக்கொண்டுவிடுமாம். கவனம்.

பூனையும் வேண்டாம் விசிலும் வேண்டாம், படுத்துத் தூங்கலாம் என்று நினைக்கிறீர்களா? எந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கவேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். ஜப்பானில் வடக்கு நோக்கி தலை வைத்துப் படுக்கக் கூடாது.

ஆப்பிரிக்காவில் மேற்கு பக்கம் கூடாது. நடக்கும்போது பறவை எச்சமிட்டால் அய்யய்யே என்று சிணுங்காதீர்கள். ரஷ்யர்களைப்போல் கடவுளே உனக்கு நன்றி என்று வானத்தைப் பார்த்து கத்துங்கள். அன்றைய தினம்  உங்களுக்கு நல்ல காரியம் நடக்கும்.

ஐஸ்லாந்தில் வீட்டுக்கு வெளியில் துணி தைக்கக் கூடாது. மீறினால் குளிர் மேலும் அதிகரிக்குமாம். போர்ச்சுகீசியர்கள் பின் பக்கம் நடக்க மாட்டார்கள். அப்படி நடந்தால் சாத்தான் கண்டுபிடித்து உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். இத்தாலியில் நீங்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது நீங்களும் அவரும் ஒரே நேரத்தில் ஒரே வார்த்தையை உச்சரித்துவிட்டால் உடனே மூக்கைத் தொட்டுக்கொள்ள வேண்டும்.

அதாவது, உங்கள் மூக்கை. இல்லாவிட்டால் நடக்க இருக்கும் நல்ல காரியம் தள்ளிப் போகும். பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் ஒவ்வொரு புதிய மாதம் பிறக்கும்போதும் முயல், முயல் என்று நீங்கள் கத்த வேண்டும். அப்படிச் செய்தால் அந்த மாதம் முழுக்க ஜாலியாக இருக்கலாம்.

சுவர் மீது ஏணியைச் சாய்த்து வைத்திருக்கும்போது அதன்கீழ் நடக்கக் கூடாது. வீட்டுக்குள் குடையை விரிக்கக் கூடாது. இடது காலை எடுத்து வைத்து ஒரு வீட்டுக்குள் நுழையக் கூடாது. கண்ட நேரத்தில் தும்மக் கூடாது. இரவில் நகம் வெட்டக் கூடாது. உப்பு சிந்தக் கூடாது. கீழே குழந்தை படுத்திருக்கும்போது தாண்டக் கூடாது. கப்பலில் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. நீங்கள் எடுத்துப் போகும் பை தரையைத் தொடக் கூடாது.

நீங்கள் சீனர் என்றால் நான்கு உங்களுக்கு ஆகாது. நீங்கள் யாராக இருந்தாலும் 666 என்னும் எண்ணை எங்காவது காண நேர்ந்தால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். 13 என்று எங்கு எழுதியிருந்தாலும் பக்கத்திலேயே போகக் கூடாது. 13 என்ன செய்தது, பாவம் அது எண்தானே என்று இத்தாலியர்கள் சிரிப்பார்கள்.

ஆனால் 13-ம் தேதி வெள்ளிக்கிழமையாகப் போய்விட்டால் சிரிப்பதை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள். தென் கொரியர்கள் கதவை அல்லது ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுதான் மின்விசிறியைப் போடுவார்கள். மூடிய கதவுக்குள் மின்விசிறி போட்டால் கெட்ட காற்றுப் பரவும்.

இங்கிலாந்தின் ஒரு பகுதியில் குழந்தை இடைவிடாமல் இருமிக்கொண்டே இருந்தால் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, மூன்று வயதுக்கு மிகாத கழுதையைத் தேடி ஓடுவார்கள். கழுதைக்கு அடியில் ஒன்பது முறையும் கழுதைக்கு மேலே மூன்று முறையும் குழந்தையைக் காட்டிவிட்டு எடுத்தால் இருமல் மறைந்துவிடும்.

அதெல்லாம் மறையாது என்று எவ்வளவோ பேர் சொல்லிவிட்டார்கள். நல்ல எண்கள், கெட்ட எண்கள் என்று எதுவும் இல்லை. கண்ணாடிக்கும் விசிலுக்கும் பூதத்துக்கும் தொடர்பில்லை. கடல் கன்னி, சாத்தான், பிசாசு எதுவும் இல்லை.

தலையை எங்கே வேண்டுமானாலும் வைத்துத் தூங்கலாம். வீட்டுக்குள் மழை வராது என்பதால் குடையைப் பிரிக்க வேண்டியதில்லை. ஒருவேளை பிரித்தால், குடை விரியும், அவ்வளவுதான். வாழைப்பழத்தை எங்கும் சாப்பிடலாம். ஏணிக்கு அடியில் செல்லலாம். கழுதையைவிட மருந்து மேலானது.

பறவை எச்சமிட்டால் துடைத்துக்கொள்ள வேண்டும். பின் பக்கம் நடந்தால் வரும் ஒரே ஆபத்து, எங்காவது முட்டிக்கொள்வது மட்டும்தான். நீங்கள் நடக்கும்போது பூனை குறுக்கில் வந்தால் ஓர் அர்த்தம்தான் உண்டு. உங்களைப்போலவே அதுவும் எங்கோ அவசரமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

இப்படி எல்லாம் சொன்னால் என்ன பதில் கிடைக்கும் தெரியுமா? ‘புதன் கிழமையும் அதுவுமாக இப்படி எல்லாவற்றையும் மறுத்துப் பேசினால் டிராகுலா பறந்துவந்து கடிக்கும். அதைத் தடுக்க ஒரு வழிதான் இருக்கிறது. உங்கள் வீட்டு வாசலில் குதிரை லாடத்தை உடனடியாகக் கட்டி வையுங்கள்.’

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்