திறந்திடு சீஸேம் 13: களவு போன உலகக் கோப்பை!

By முகில்

அந்த உலகக் கோப்பை 1929-ல் வடிவமைக்கப்பட்டது. கிரேக்கப் புராணத்தின் வெற்றி தேவதையான நைக், சிறகுகளை விரித்தபடி, தன் இரு கைகளைத் தூக்கியிருப்பதுபோல, வெள்ளியால் செய்து தங்க முலாம் பூசப்பட்ட சிலை. அதனைத் தாங்கும் பீடமானது Lapis lazuli என்ற நீலநிறத்தினாலான, விலை மதிப்புமிக்கப் பாறையால் செதுக்கப்பட்டிருந்தது.

1930-ல் சர்வதேச கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு (FIFA), இந்தக் கால்பந்து உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தியது. எந்த ஒரு தேசம் மூன்று முறை இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் ஆகிறதோ, அந்தத் தேசமே இந்த உலகக் கோப்பையை எப்போதும் வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

1930-ல் உலகின் முதல் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி உருகுவே தேசத்தில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் சாம்பியன் உருகுவேதான். ஜூல்ஸ் ரிமெட் என்ற FIFA அமைப்பின் தலைவர்தான், இதுபோல உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்தவர். எனவே 1946-ல் அதற்கு ‘ஜூல்ஸ் ரிமெட் கோப்பை’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

1934, 1938-ம் ஆண்டுகளில் இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இரண்டாம் உலகப் போரினால் 1942, 1946-களில் போட்டிகள் நடைபெறவில்லை. 1950-ல் ஜூல்ஸ் ரிமெட் என்று பெயரிடப்பட்ட உலகக் கோப்பையை உருகுவே வென்றது. இத்தாலியோ, உருகுவேவோ இன்னொரு முறை சாம்பியன் ஆனால், அந்தத் தேசத்துக்கே ஜூல்ஸ் ரிமெட் கோப்பை சொந்தம் என்ற நிலையில், 1954-ல் மேற்கு ஜெர்மனி வென்றது. 1958, 1962 ஆண்டுகளில் பிரேசில் அடுத்தடுத்து சாம்பியன் ஆனது.

julesjpgஜுல்ஸ் ரிமெட்

1966 கால்பந்து உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்தது. உருகுவே, இத்தாலி, பிரேசில் யார் மூன்றாவது முறை சாம்பியன் பட்டம் வென்று, ஜூல்ஸ் ரிமெட் கோப்பையைத் தங்கள் தேசத்துக்குத் தூக்கிச் செல்லப் போகிறார்கள் என்று உலகமே ஆவலோடு காத்திருக்க, அதனைத் திருடர்கள் தூக்கிச் சென்றுவிட்டார்கள்.

அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் போட்டிகள் தொடங்குவதாக இருந்தது. அதற்கு முன்பாக ஜூல்ஸ் ரிமெட் கோப்பை, இங்கிலாந்தின் சில இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மார்ச் 19 அன்று வெஸ்ட்மினிஸ்டர் சென்ட்ரல் ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. கோப்பையைப் பாதுகாப்பதற்கு காவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். மார்ச் 20, பகல் 12.10-க்கு கோப்பை இருந்த அறையைத் திறந்து பார்த்த காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோப்பை வைக்கப்பட்டிருந்த பெட்டியின் ஸ்க்ரூ, போல்ட் எல்லாம் பின்பக்கமாகக் கழற்றப்பட்டிருந்தன. கோப்பை திருடப்பட்டிருந்தது. ஸ்காட்லாந்து யார்டு பரபரப்பானது. உடனடியாக இங்கிலாந்து தேசம் முழுவதும் செய்தி அனுப்பப்பட்டது. பல இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது அந்தக் கட்டிடத்தில் பணியில் இருந்த அனைவருமே விசாரிக்கப்பட்டனர். அடுத்த நாள், ‘கால்பந்து உலகக் கோப்பையைக் காணவில்லை’ என்ற செய்தி ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

இங்கிலாந்து கால்பந்து அமைப்பின் சேர்மன் ஜோ மியர்ஸுக்கு மார்ச் 21 அன்று, போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில் மர்ம நபர் ஒருவர், மறுநாள் ஜோவுக்கு பார்சல் வரும் என்றார். மார்ச் 22 அன்று வந்த பார்சலில், ஜூல்ஸ் ரிமெட் கோப்பையின் மேல்புறம் பூசப்பட்டிருந்த பூச்சை உரித்து அனுப்பியிருந்தார்கள்.

அந்தக் கோப்பையின் அன்றைய மதிப்பு 3 ஆயிரம் பவுண்ட். கோப்பையைக் கடத்தியவர்கள் 15 ஆயிரம் பவுண்ட் வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தார்கள். போலீஸுக்கோ, பத்திரிகைகளுக்கோ தகவல் கொடுக்கக் கூடாது. பணம் சரியாக வந்து சேர்ந்தால், மார்ச் 25 அன்று கோப்பை திரும்ப வந்துவிடும். இல்லை என்றால் உருக்கிவிடுவோம் என்று கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஜோ மியர்ஸ் போலீஸுக்குத் தகவல் சொன்னார். அவர்கள் 15 ஆயிரம் பவுண்ட் என்ற பெயரில் அசல் நோட்டுகளுடன் வெற்றுக் காகிதங்களையும் நிரப்பி பெட்டி ஒன்றைத் தயார் செய்தார்கள். கோப்பைக் கடத்தல்காரர்களைத் தொடர்புகொள்வதில் குழப்பங்கள். போலீஸுக்குத் தகவல் தெரிவித்ததால் விளைந்த சிக்கல்கள். அதனால் ஜோ மியர்ஸால் கோப்பையை மீட்க முடியவில்லை. வேறு கோப்பை ஒன்றைச் செய்துவிடலாம் என்று முடிவெடுக்கும் நிலையில் FIFA இருந்தது.

மார்ச் 27. லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் டேவிட் கோர்பெட் என்பவர் தனது நாய் பிக்கிள்ல் உடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். வீட்டின் அருகே புதர்ப் பகுதியில் செய்தித்தாள் சுற்றப்பட்டிருந்த பொருள் ஒன்றை பிக்கிள்ஸ் மோப்பம் பிடித்துக் குரைத்தது. டேவிட் அதைத் திறந்து பார்த்தார். அது காணாமல் போன உலகக் கோப்பை. இத்தனை பரபரப்புகளுக்குப் பிறகு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தே சாம்பியன் பட்டம் வென்றது. அந்த நாய் பிக்கிள்ஸ், பல படங்களில் நடித்து நட்சத்திரமானது.

picklesjpgபிக்கிள்ஸ்right

1970-ல் உலகக் கோப்பை போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் பிரேசிலும் இத்தாலியும் மோதின. வெல்பவர் ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை நிரந்தரமாக வைத்துக்கொள்ளலாம் என்பதால் ஆட்டத்தில் சூடு பறந்தது. 4-1 என்ற கணக்கில் பிரேசில் கோப்பையைத் தனதாக்கிக்கொண்டது. FIFA ,1974-ல் வேறொரு புதிய உலகக் கோப்பையை வடிவமைத்துக்கொண்டது. ஜூல்ஸ் ரிமெட் கோப்பை, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் அமைந்துள்ள பிரேசில் கால்பந்து சம்மேளன அலுவலகக் கட்டிடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

1983-ல் திருடர்களின் நீண்ட நாள் சதிக்குப் பின் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அங்கிருந்து சாதுரியமாகத் திருடப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னும் அந்தக் கோப்பையை மீண்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கோப்பையைத் திருடியவர்கள், அதனை உருக்கித் தங்கக் கட்டிகளாக்கி விற்றுவிட்டார்கள் என்று செய்தி பரவியது. ஆனால், அது வெள்ளியால் ஆன கோப்பை என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்பதே உண்மை.

1984-ல் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை போன்ற மாதிரி ஒன்று பிரேசிலுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிஜக் கோப்பை என்ன ஆனது என்பது இன்றுவரை மர்மமே.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்