பிப்பெட்: வணக்கம் பியூ.
பியூரெட்: வணக்கம். ஏன் இப்படி வேகமா வர்றே?
பிப்.: ரொம்பத் தண்ணி தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி குடேன்.
பியூ.: இந்தா தண்ணி, ரொம்ப நேரமா தண்ணி குடிக்காம இருந்தியா?
பிப்.: ஆமா, ஆனா... இந்தத் தண்ணில ஏதோ வாசனை அடிக்குதே?
பியூ.: கொண்டா என்ன வாசனைன்னு பார்ப்போம். குளோரின் வாசனை வருது.
பிப்.: எனக்கு இந்த வாசனை பிடிக்கல. குளோரினை எதுக்கு தண்ணில சேர்க்குறாங்க?
பியூ.: தண்ணில இருக்கிற நுண்ணுயிர்கள், தொற்றுக்கிருமிகளை அழிக்கத்தான் இதைக் கலக்குறாங்க. ஆனா, குளோரினின் அளவு கூடிடுச்சுன்னா பலருக்கும் தண்ணீர் குடிக்கப் பிடிக்கிறதில்ல.
பிப்.: இந்த வேதிப்பொருளை நான் இதுவரை பார்த்ததே இல்லையே.
பியூ.: பார்த்ததே இல்லையா, தினசரி இதைப் போட்டுத்தான் நீ சாப்பிட்டுக்கிட்டு இருக்க.
பிப்.: சும்மா ஏதும் அடிச்சுவிடாதே பியூ. நான் எங்க குளோரினைச் சாப்பிடுறேன்?
பியூ.: நீ குளோரினைச் சாப்பிடலை, குளோரைடைச் சாப்பிடுற. அதாவது சோடியம் குளோரைடு.
பிப்.: சோடியம்… குளோரைடு… நிஜமாவா?
பியூ.: சோடியம் குளோரைடுன்னா சமையல் உப்புன்னு உனக்குத் தெரியாதா?
பிப்.: ஆமால்ல… உப்பு போடாம எப்படிச் சாப்பிட முடியும்?
பியூ.: இன்னைக்கு நேத்து இல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளா உலகத்துல குளோரின் பயன்படுத்தப்பட்டு வருது. மனிதர்கள் அதிகம் பயன்படுத்திய வேதிப்பொருள் என்றும் இதைச் சொல்லலாம்.
பிப்.: நிச்சயமா, நமது சமையல்கூடமே குட்டி வேதியியல் ஆய்வகம்தானே!
பியூ.: குளோரின் எளிதில் வினைபுரியக் கூடியது, ஆக்சிஜனேற்றியும்கூட. அதனால பூமியின் மேலோட்டுல உள்ள குளோரின் பெரும்பாலும் குளோரைடு அயனிகளாகவே இருக்கு. அதுல சமையல் உப்பும் அடக்கம்.
பிப்.: சாப்பாட்டைத் தவிர, வேற எதுக்கும் இந்த உப்பு பயன்படுதா என்ன?
பியூ.: உலகில் அதிகம் கிடைக்கும் குளோரின் சேர்மம் சோடியம் குளோரைடுதான். குளோரின், ஹைட்ரோகுளோரிக் அமில உற்பத்தியே இந்த உப்பை வெச்சுத்தான் நடக்குது. 15,000 குளோரின் சேர்மங்கள் வணிகரீதியில் உற்பத்தி செய்யப்படுதாம், தெரியுமா?
பிப்.: உப்பு வெறும் உப்பு அல்ல, மதிப்புமிக்க உப்புதான்.
பியூ.: நீ தண்ணி குடிக்கிறப்ப சொன்ன மாதிரியே, நீச்சல் குளத் தண்ணீரை முகர்ந்து பார்த்தாலும் ஒரு வித மணம் அடிக்கும், தெரியுமா?
பிப்.: ஆமா.
பியூ.: அதுக்கும் குளோரின்தான் காரணம்.
பிப்.: நீச்சல் குளத்துலயும் எதுக்கு கலக்குறாங்க?
பியூ.: கிருமித்தொற்றை நீக்குறதாலயும் சுத்தம் சுகாதாரத்தைப் பராமரிக்கவும் சோடியம் ஹைபோகுளோரைட்டை நீச்சல் குளத் தண்ணில கலக்குறாங்க.
பிப்.: ஆனா, நீச்சல் குளத் தண்ணில ரொம்ப நேரம் இருக்கக் கூடாது. அந்தத் தண்ணி முடில படக்கூடாதுன்னு சொல்றாங்களே. அப்படின்னா குளோரின் நல்லதில்லைன்னுதானே அர்த்தம்?
பியூ.: நீச்சல் குளங்கள்ல பயன்படுத்தப்படும் குளோரின் மனிதத் தலைமுடியுடனும் தோலுடனும் வினைபுரியும்.
பிப்.: அப்ப குளோரினோட அதிகம் ஒட்டி உறவாடக் கூடாது, இல்லையா?
பியூ.: ஆமா, ஒரு இடத்துல வாயு வடிவத்துல குளோரின் அதிகமாகறதும் சிக்கல்தான்.
பிப்.: அப்ப வேற என்னவெல்லாம் பாதிக்கப்படும்?
பியூ.: சுவாச அமைப்பு, கண்கள், தோலைப் பாதிக்கும். முதல் உலகப் போரில் 1915-ல் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக குளோரின் வாயுவ ஆயுதமாவே பயன்படுத்தியிருக்காங்க. போரில் ஆயுதமா பயன்படுத்தப்பட்ட முதல் வேதிவாயு குளோரின்தான்.
பிப்.: நூறு ஆண்டுகளுக்கு முன்னாலயே இப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்களா? கேட்கவே பயங்கரமாயிருக்கு.
பியூ.: அதே மாதிரி வளிமண்டலத்தோட உயர் அடுக்குல, அதிகமா சேர்ந்திருந்த குளோரோபுளூரோகார்பன், ஓசோன் படலத்தை மெலிய வெச்சுக்கிட்டு இருந்துச்சு. இதனால உலக நாடுகள் கூடி ஒப்பந்தம் போட்டு, இந்த வேதிப்பொருளோட பயன்பாட்டைக் குறைச்சாங்க. இப்போ ஓசோன் படல மெலிவு சீராகிவருது.
பிப்.: எந்த வேதிப்பொருளா இருந்தாலும், அளவோட பயன்படுத்தி ஆரோக்கியமா வாழணும்.
இந்த வாரத் தனிமம்: குளோரின்
குறியீடு: CL
அணு எண்: 17
அறை வெப்பநிலையில் குளோரின் பசுமஞ்சள் நிற வாயுவாக இருக்கும். கிரேக்க மொழியில் khloros என்றால் வெளிறிய பச்சை நிறம் என்று அர்த்தம். அதனால்தான் குளோரின் என்ற பெயர் இதற்கு வந்தது.
1810-ல் ஹம்ப்ரி டேவி இதை ஒரு தனிமமாக அறிவித்தார். பூமியின் மேலோட்டில் அதிகமுள்ள 21-வது தனிமம்.
கிருமித் தொற்று நீக்கிகள், தரை துடைக்கும் பிளீச் திரவம் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. காகிதத்தை வெளுப்பாக்கப் பயன்படுகிறது. பி.வி.சி. எனப்படும் பாலிவினைல் குளோரைடு, பிளாஸ்டிக் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள்.
தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago