காடு முழுவதும் ’கரடிகளின் குத்துச்சண்டை போட்டியைக் காணத் தவறாதீர்கள்’ என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. விலங்குகள் அதைப் படித்துவிட்டு, “ஆஹா! இந்தப் போட்டியில் நிச்சயம் ‘மோரா’ கரடியின் குத்துச்சண்டையும் இருக்குமே! அதைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று பேசிக்கொண்டன.
இந்த ஆண்டு நடக்கும் போட்டிகளில் எல்லாம் மோராதான் வெற்றி பெற்றுக்கொண்டே வருகிறது. அதனுடன் மோதும் விலங்குகள் முதல் சுற்றிலேயே தோற்றுவிடுகின்றன. தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் மோரா குத்துச்சண்டையில் முதன்மையான இடத்தைப் பிடித்துவிட்டது. பலரும் மோராவைப் புகழ்வதால் தலைக்கனமும் அதிகமானது.
“என்னை வெல்வதற்கு இங்கு யாரும் பிறக்கவில்லை. இனி யாரும் பிறக்கப் போவதுமில்லை” என்று ஆணவமாகப் பேசித் திரிந்தது.
நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் பல்வேறு காடுகளில் இருந்து முன்னணிக் குத்துச்சண்டை வீரர்கள் இந்தக் காட்டுக்கு வருகிறார்கள் என்ற தகவல் வந்ததும் விலங்குகள் ஆர்வமாக இருந்தன.
“அடடா! பல காடுகளில் இருந்தும் போட்டி போட வருகிறார்களா? வரட்டும்... வரட்டும்... ஒரு கை பார்க்கிறேன்” என்று உற்சாகத்தில் எதிரில் ஒருவரைக் குத்துவதைப்போல தனது கைகளால் குத்தியது மோரா.
போட்டி நாளும் வந்தது. விலங்குகள் கூடி இருந்தன. போட்டிக்கு நடுவராக ஆப்பிரிக்கக் காட்டிலிருந்து சிப்பன்சி வந்திருந்தது. திரைப்படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் பட்டாளத்தையே அது வைத்துக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் விலங்குகள் ஆர்ப்பரித்தன.
துருவக் கரடியும் பாண்டா கரடியும் மோத, போட்டி ஆரம்பமானது. அனைவரும் ரசிக்கும்படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். கூட்டம் மகிழ்ச்சியில் உற்சாகமாகக் கத்தியது.
அந்தச் சண்டையில் துருவக் கரடி வெற்றி பெற்றது. அடுத்து பளுப்புக் கரடியும், கறுப்புக் கரடியும் மோதின. அதில் பளுப்புக் கரடி வெற்றி பெற்றது.
இப்படி இரண்டு இரண்டு கரடிகளாகப் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர்கள் மீண்டும் மோத, அதில் மோரா அனைவரையும் வென்று நின்றது.
“மோரா... மோரா... மோரா...”
என்ற உற்சாகக் குரல்கள் காடு முழுவதும் எதிரொலித்தன.
ஏற்கெனவே புகழில் மயங்கி இருந்த மோராவுக்கு இந்த உற்சாகம் மேலும் மகிழ்ச்சியைத் தந்தது.
“இன்னும் வேறு யாராவது என்னுடன் போட்டி போடத் தயாராக இருக்கிறீர்களா?” என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்டது.
பார்வையாளர்கள் ஒருவரை இன்னொருவர் பார்த்துக்கொண்டனர்.
“இந்தக் காட்டில் எல்லோரும் வீரமானவர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் இங்கே இருப்பவர்கள் கோழைகள் என்று தெரிகிறது” என்று சிரித்தது மோரா.
“போட்டியில் மோரா வெற்றி பெற்றது மகிழ்ச்சிதான். அதற்காக மற்றவர்களைக் கோழை என்பதும், நமது காட்டை இழிவு படுத்துவதும் சரியில்லையே” என்றது புள்ளிமான்.
“ஆமாம். நீ சொல்வது சரிதான். புகழ் வந்துவிட்டாலே தலைக்கனமும் வந்துவிடும்” என்றது பபூன் குரங்கு.
மீண்டும் வம்பு இழுத்தது மோரா.
“மோரா, உனக்கு வாழ்த்துகள். இங்கு இருவராகப் போட்ட சண்டையில் பலரை முதல் சுற்றிலேயே அனுப்பி, வெற்றி பெற்றது சாதனைதான். ஆனால்...” என்று பேச்சை முடிக்காமல் நிறுத்தியது சிப்பன்சி.
“ஆனால் என்ன?”
“ஆனால், உன் புகழைவிட உன் தலைக்கனம் உயர்ந்துவிட்டது. அதனால் அனைவரையும் சண்டைக்கு அழைக்கிறாய். உன் பேச்சால் கோபம் அடைந்து, நம் காட்டுக்கு நல்ல பெயர் வேண்டும் என்று யாராவது வந்து, சண்டையிட்டுத் தோற்றால் அந்தத் தோல்வி அவர்களுக்கு அல்ல. அது உனக்குத்தான்” என்றது சிப்பன்சி.
“என்னது! என்னுடன் சண்டை போடுபவர்களின் தோல்வி, என் தோல்வியா? என்ன உளறுகிறீர்?” என்று கோபமாகக் கேட்டது மோரா.
சிரித்த சிப்பன்சி,
“ பொறுமையாகக் கேளு. உன்னுடன் தன் காட்டுக்காகச் சண்டையிடும் விலங்கு, இதுவரை குத்துச்சண்டை பயிற்சி எடுத்திருக்காது. காட்டுக்குப் பெருமை சேர்ப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கும். அதனால் உன் ஒரு அடியில் அது சுருண்டு விழுந்துவிடும். அது தோல்விதான். ஆனால் அது எதற்கும் பயப்படாமல் மேடை ஏறும்போதே வெற்றி பெற்றுவிடுகிறது. உன் அளவுக்குச் சண்டையிடத் தகுதி இல்லாதவரிடம் சண்டை போடும்போதே, நீ தோற்றுவிட்டதாகத் தானே அர்த்தம்?” என்றது.
சிப்பன்சி சொன்னதைக் கேட்டு அனைவரும் கைதட்டினர். மோரா மனம் மாறியது. அனைவர் முன்னிலையிலும், “என் தவறை உணர்ந்துவிட்டேன். போட்டியைப் போட்டியாக நினைக்காமல் என் தலைக்கனம் என்னைத் திசை திருப்பிவிட்டது. அதனைச் சுட்டிக் காட்டிய நடுவருக்கு நன்றி. இந்தக் காட்டையும், காட்டில் உள்ளவர்களையும் தவறாகப் பேசியதற்கு மன்னியுங்கள்” என்றது மோரா.
“எப்போது உன் தவறை உணர்ந்துவிட்டாயோ அப்போதே நீ வெற்றியாளன்தான்” என்று சொல்லி, மோராவுக்குக் கோப்பையை வழங்கியது சிப்பன்சி.
அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு கைதட்டினர். மேடை ஏறிய இரண்டு கரடிகள் மோராவைத் தூக்கித் தங்களது தோள்களில் வைத்துச் சுற்றிவந்தன.கதை
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago