திறந்திடு சீஸேம் 14: வோனொபாயோ புதையல்

By முகில்

சிப்டோ என்ற இந்தோனேசியப் பெண்ணுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. கொஞ்சம் மேடான பகுதியில் இருந்ததால், கால்வாய் வழியாக வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்குச் சிரமமாக இருந்தது. எனவே, சிப்டோ கூலிக்குச் சில ஆட்களை நியமித்து, நிலத்தைத் தோண்டி, கால்வாய் வழியே நீர் பாய்வதற்கு வசதியாக வயலின் உயரத்தைக் குறைக்கச் சொன்னார்.

1990, அக்டோபர் 17 அன்று அந்த வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அது இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்திலிருக்கும் கிளாடென் பிரதேசத்தைச் சேர்ந்த வோனொபாயோ என்ற சிறிய கிராமம்.

மாலை நேரம். சுமார் இரண்டரை மீட்டர் அளவுக்கு வயலைத் தோண்டியிருந்தார்கள். விட்டோமொஹர்ஜோ கடப்பாரையை நிலத்தில் பாய்ச்சினார். அது போதிய அளவு உள்ளே இறங்கவில்லை. பாறை தடுப்பதுபோலத் தோன்றியது. கையை வைத்து மண்ணை அகற்றினார். அது பாறை அல்ல என்று தெரிந்தது. என்னவாக இருக்கும்? அதை வெளியில் எடுக்கும்விதமாகப் பக்கவாட்டில் கவனமாகத் தோண்டினார். ஒரு ஜாடி கிடைத்தது. பழமையான, பெரிய பீங்கான் ஜாடி.

அனைவரது இதயத்துடிப்பும் அதிகமானது. இது புதையல்தானா? கவனமாக ஜாடியைத் திறந்தார்கள். உள்ளே மண் அப்பிக் கிடந்தது. அதை அப்புறப்படுத்தினார்கள். வெளியே இருள் சூழத் தொடங்கிய பொழுதில், ஜாடிக்குள்ளிருந்து எடுத்த பொருட்கள் பளபளத்தன. ஆ! அத்தனையும் தங்கம்!

உடனே ஊர்த் தலைவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அவர், பிற அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னார். அன்று இரவோடு இரவாக சிப்டோவின் வயலை மேலும் தோண்டினார்கள். மேலும் சில ஜாடிகளும், வெண்கலத்தாலான ஒரு பெட்டியும் கிடைத்தன.

மொத்தம் 16.9 கிலோவில், 14.9 கிலோ தங்கம், மீதி வெள்ளி. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அழகான வேலைப்பாடுகள் அமைந்த தங்கப் பாத்திரம் ஒன்று, தங்கத்தாலான ஆறு மூடிகள், தண்ணீர் குடிக்கும் பாத்திரங்கள் மூன்று, சில தட்டுகள், கத்தி ஒன்று, 97 கைக்காப்புகள், 22 சிறிய பாத்திரங்கள், கைகழுவும் பெரிய பாத்திரம் ஒன்று, சில ஜாடிகள், சில மோதிரங்கள், ஒரு கைப்பை, 6 ஆயிரம் நாணயங்கள். பெரும்பாலும் தங்கத்தாலும், சில வெள்ளியாலும் ஆனவை.

இந்தோனேசியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநராக இருந்த உகா, பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். ‘எனது 37 வருட வேலை அனுபவத்தில் இதைப்போன்ற பழமையான பொக்கிஷம் கிடைத்ததே இல்லை’ என்றார். ஆம், சிப்டோவின் வயலில் கிடைத்த புதையல் பொருட்கள் ஒவ்வொன்றுமே பல நூற்றாண்டுகள் பழமையானவை. அவை வோனொபாயோ புதையல் என்று அழைக்கப்படலாயின.

அந்தப் பீங்கான் ஜாடிகள் ஒன்பதாம் நூற்றாண்டில் சீனாவை ஆண்ட தாங் வம்சத்தைச் சேர்ந்தவை. கண்டெடுக்கப்பட்ட தங்கப் பாத்திரங்கள் சிலவற்றில் ராமாயணக் காட்சிகள் காணக் கிடைத்தன. ராமன் மானை வேட்டையாடுவது, ராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது, அனுமன் ராமனுக்கு உதவுவது போன்ற காட்சிகள் தத்ரூபமாக அந்தப் பாத்திரங்களில் செதுக்கப்பட்டிருந்தன.

இதேபோன்ற காட்சிகள் இந்தோனேஷியாவின் பிரம்பானான் கோயில் சிற்பங்களிலும் உண்டு என்று ஓர் ஆய்வாளர் தெரிவித்தார். பிரம்பானான் ஒன்பதாம் நூற்றாண்டில் மத்திய ஜாவாவில் எழுப்பப்பட்ட இந்து ஆலயம். அந்த நேரத்தில் ஜாவாவில் சைலந்திர வம்சத்தால் புத்த மதம் தழைத்துக்கொண்டிருந்தது.

சைவ சமயம் வீழ்ந்துகொண்டிருந்தது. அதை மீண்டும் தழைக்கச் செய்வதற்கென மத்திய ஜாவாவின் மாதாராம் ராஜ்ய மன்னன், இந்தக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. முதலில் சிவக்கிரகம் என்ற பெயரில் சிவனுக்காகவே ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பிறகு திருமாலுக்கும் பிரம்மனுக்கும் தனித்தனி ஆலயங்கள் எழுப்பப்பட்டு, இது மும்மூர்த்திகள் ஆலயமானது.

பிரம்பானான் கோயிலுக்கும், புதையல் கண்டெடுக்கப்பட்ட வோனொபாயோ கிராமத்துக்கும் இடையேயான தொலைவு ஆறு கிலோமீட்டர்தான். தங்கப் பாத்திரங்களில் செதுக்கப்பட்டிருக்கும் ராமாயணக் காட்சிகள் போலவே, பிரம்பானான் கோயிலிலும் ராமாயணக் காட்சிகள் கொண்ட சிற்பங்கள் இருப்பதால், வோனொபாயோ புதையல் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், அது பிரம்பானான் கோயிலுக்குரிய செல்வத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கிழக்கு ஜாவாவின் சிலைகளில் அனுமன் உடையின்றிதான் இருப்பார். மத்திய ஜாவாவின் பழைய சிலைகளில்தான் அனுமனுக்கு முழு உடை அணிவிக்கப்பட்டிருக்கும். புதையல் பாத்திரங்களில் அனுமன் உடையோடுதான் இருக்கிறார். எனவே வோனொபாயோ புதையல் என்பது மத்திய ஜாவாவைச் சேர்ந்த மாதாராம் ராஜ்யத்தின் செல்வங்களாக இருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்களில் ta என்று பொறிக்கப்பட்டிருந்தது. அது அன்றைக்குப் பண்டைய ஜாவாவில் புழக்கத்திலிருந்த tahil என்ற நாணய முறையைக் குறிப்பதாகும். ஒரு நாணத்தில் Kawi என்ற பண்டைய ஜாவா மொழியில், Saragi Diah Bunga என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த நபர், அன்றைக்கு அங்கே வாழ்ந்த செல்வந்தராகவோ அல்லது ராஜ குடும்பத்தைச் சார்ந்தவராகவோ இருந்திருக்கலாம். எனவே வோனொபாயோ புதையல் கி.பி. 899 முதல் 911வரை ஆட்சி செய்த மாதாராம் மன்னர் பாலிடங் ஸ்ரீ தர்மோதய மஹாசம்புவின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.

வோனொபாயோ புதையலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தற்போது இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருட் களின் மாதிரிகள், பிரம்பானான் கோயிலின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தோனேசிய வரலாற்றில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மிக முக்கியமான, பழமையான பொக்கிஷம் வோனொபாயோ புதையல்தான்.

கி.பி. 930-ல் மாதாராம் ராஜ்யம், கிழக்கு ஜாவாவுக்கு மாற்றப்பட்டது. அப்போது பிரம்பானன் கோயில் கவனிப்பார் இன்றிக் கைவிடப்பட்டது. அந்தச் சூழலில் இந்தப் பொக்கிஷங்கள் இங்கே புதைக்கப்பட்டிருக்கலாம். யார், என்ன காரணத்துக்காக அதைப் புதைத்தார்கள் என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க டைம்-மிஷின்தான் வேண்டும்.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்