அன்றாட வாழ்வில் வேதியியல் 14: இசைக்கு வலுசேர்க்கும் துத்தநாகம்

By ஆதி வள்ளியப்பன்

பிப்பெட்: மா…ர்…க…ழி மா…ச…ம் வந்துடுடுடுச்சு.

பியூரெட்: கூடவே குளிரும் பனியும் வந்திடுச்சு. அதுதான் உன் பல் தந்தியடிக்குது.

பிப்.: குளிரும் பனியும் இருக்கிறதால காலைல தூங்குறது சுகமா இருக்கு.

பியூ.: ஆனா, எந்திரிச்சு தண்ணிய தொட்டுட்டா, இப்படிக் கிடுகிடுன்னு உடம்பு நடுங்க ஆரம்பிச்சிடுதே.

பிப்.: அதேநேரம் கலையும் இசையும் கொண்டாடப்படும் மாசமும் இதுதானே?

பியூ.: சரியாச் சொன்னே, இந்தத் தடவ இசைக்கருவி தயாரிக்க உதவும் உலோகத்தைப் பத்தியே பேசிடுவோம்.

பிப்.: அது என்ன உலோகம்?

பியூ.: நாம பேசப் போறது துத்தநாகம் பத்தித்தான். காற்றிசைக் கருவிகள் பலவற்றை உருவாக்கப் பயன்படும் கலப்பு உலோகமான பித்தளையில் துத்தநாகத்தின் பங்கு அதிகம்.

பிப்.: என்னென்ன இசைக்கருவிகள் எல்லாம் பித்தளைல செய்றாங்க?

பியூ.: ஷெனாய், டிரம்பெட், கொம்பு, எக்காளம் போன்ற காற்றிசைக் கருவிகளைச் சொல்லலாம். பண்டை காலத்துல தகரம், காரீயத்தில் செய்யப்பட்ட காற்றிசைக் கருவிகளைப் பயன்படுத்தினாங்க. இன்னைக்கு அந்தக் கருவிகள துத்தநாகத்துலதான் தயாரிக்கிறாங்க. ஏன் ஜிஞ்சா போடுற கருவிகூட பித்தளைதான்.

பிப்.: ஓ! எந்ததெந்த உலோகங்களைக் கலந்து பித்தளையை உருவாக்குறாங்க?

பியூ.: வெண்கலமும் துத்தநாகமும் கலந்தா பித்தளை கிடைச்சிடும்.

பிப்.: அப்ப, அது ரெண்டையும் தனித்தனியா பயன்படுத்த முடியாதா?

பியூ.: வெண்கலத்தைவிட பித்தளை ரொம்ப வலுவானது, அதேநேரம் எளிதா வளையவும் செய்யும்.

பிப்.: அதானே பார்த்தேன்!

பியூ.: துத்தநாகம் சேர்க்கப்படுறதோட நோக்கம், துருப்பிடிக்கிறதை அது தடுக்குங்கிறதுதான். பித்தளைல 3 சதவீதம் முதல் 45 சதவீதம்வரை துத்தநாகத்தைச் சேர்க்குறாங்க.

பிப்.: துருவைத் தடுக்கும் வீரன் துத்தநாகம்!

பியூ.: துருப்பிடிக்காம இருக்கிறதாலதான் தகவல் தொடர்புக் கருவிகள், கணினி உட்பொருட்கள், தண்ணீர்க் குழாய்கள் உருவாக்க பித்தளைய அதிகம் பயன்படுத்துறாங்க.

பிப்.: சரி, பித்தளைக்கு இத்தனை வலுவைத் தரும் துத்தநாகத்தைத் தனியாகப் பயன்படுத்தினா?

பியூ.: சட்டுனு உடைஞ்சுல்ல போயிடும்.

பிப்.: அப்ப சேர்ந்து இருக்கிறதுதான் பலம்னு சொல்ற.

பியூ.: எப்பவுமே தனியா இருக்கிறதவிட, சேர்ந்து இருக்கிறதுதானே பலம்!

பிப்.: ஆனா, இது மனுசங்களுக்குப் புரியறதில்லையே.

பியூ.: எவ்வளவோ படிச்சிருந்தாலும், மனுசங்ளுக்கு இது புரியமாட்டேங்குதே.

பிப்.: திரும்பவும் புரிய வைப்போம்.

பியூ.: பலத்துக்கு மட்டுமில்ல, மனுச உடலுக்கும் துத்தநாகம் தேவை.

பிப்.: ஒற்றுமை உணர்த்தும் துத்தநாகம் உடம்புக்கும் தேவையா?

பியூ.: இரும்புக்கு அடுத்தபடியா அதிகம் தேவைப்படும் அவசியத் தனிமம் துத்தநாகம். உடல்ல துத்தநாகக் குறைபாடு ஏற்பட்டா, தோலின் மேற்பகுதி பாதிக்கப்படும்.

பிப்.: தோல் முக்கியமாச்சே, அப்ப கவனமாத்தான் இருக்கணும்.

பியூ.: அது மட்டுமில்ல, மனுச உடல் செயல்பாடுகள்ல துத்தநாகம் நீக்கமற நிறைஞ்சிருக்கு. 300 என்சைம்கள் செயல்பட துத்தநாகம் அவசியமா இருக்கு.

பிப்.: ஆமா, இவ்வளவு வேலை செய்யுற துத்தநாகம் மனுச உடலுக்கு எவ்வளவு தேவைப்படும்?

பியூ.: மனித உடல்ல 2-4 கிராம் துத்தநாகம் இருக்கு. மூளைல சேகரமாகியிருக்கும் துத்தநாகம் நரம்புத் தூண்டலை ஒழுங்குபடுத்துறதுலேயும் நரம்பு மண்டலத்தைச் செயல்பட வைக்கிறதிலும் முக்கியப் பங்காற்றுது.

பிப்.: துத்தநாகத்தை எதற்காகவும் குறைச்சு எடைபோடக் கூடாதுன்னு சொல்லு.

பியூ.: ஆமா, ஆமா, ஆமா!

 

பண்டைக் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் உலோகம் துத்தநாகம். 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்விட்சர்லாந்து மருத்துவரும் ரசவாதியுமான பாராசெல்சஸ் இதற்குப் பெயரிட்டார். Zinke என்றால், முட்கள் என்று ஜெர்மனியில் அர்த்தம். துத்தநாகத் தாது முட்களாக நீட்டிக்கொண்டிருப்பதுபோல் இருந்ததே இதற்குக் காரணம்.

ஜெர்மன் வேதியியலாளர் ஆண்ட்ரியாஸ் சிகிஸ்மண்ட் மர்கிராஃப் 1746-ல் இதன் தூய்மையான வடிவத்தைக் கண்டறிந்தார். பூமியின் மேலோட்டில் அதிகம் கிடைக்கும்  24-வது தனிமம் இது. வெண்கலம், இரும்பு, அலுமினியத்துக்கு அடுத்தபடியாக தொழில் உற்பத்தியில் அதிகம் தேவைப்படும் உலோகம் துத்தநாகம்.

 

 

ராஜஸ்தான் பண்டைச் சுரங்கம்

1637-ல் சீனர்கள் துத்தநாகத்தைப் பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னதாக பொ.ஆ. 9-ம் நூற்றாண்டிலேயே இந்தியத் துணைக்கண்டத்தில் இந்த உலோகத் தாது எடுக்கப்பட்டு, உருக்கியெடுத்து பிரிக்கப்பட்டிருக்கிறது.

ராஜஸ்தானில் உள்ள சுரங்கங்கள் பொ.ஆ. 6-ம் நூற்றாண்டிலேயே துத்தநாகம் கிடைத்ததை அறிவிக்கின்றன. ராஜஸ்தானில் உள்ள ஸாவர் பகுதியில் தூய்மையான துத்தநாகம் பொ.ஆ. 9-ம் பயன்படுத்தப்பட்டது ஆதாரப்பூர்வமாகத் தெரிய வந்திருக்கிறது.


தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்