இடம் பொருள் மனிதர் விலங்கு: நீங்கள் ரோபோவா?

By மருதன்

ஒரு மனிதரையும் ரோபோவையும் அருகருகில் கொண்டுவந்து நிறுத்தினால், யார் மனிதர் எது ரோபோ என்பதை உங்களால் சுலபத்தில் கண்டுபிடித்துவிட முடியும் என்றா நினைக்கிறீர்கள்? இன்னும் சில ஆண்டுகள் போனால் நிச்சயம் உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. இப்போதேகூட நீங்கள் மனிதர் என்று நினைத்துப் பழகிக்கொண்டிருப்பவர்களில் சிலர் ரோபோவாக இருக்கக்கூடும்.

உங்கள் பேருந்தை ஓட்டுபவர், நீங்கள் வாசிக்கும் செய்தித்தாளை அச்சிடுபவர், நீங்கள் அணிந்திருக்கும் ஆடையை உருவாக்கியவர், உங்கள் பென்சிலை உற்பத்திச் செய்தவர், உங்களுக்கு மாத்திரை மருந்து எழுதித் தருபவர், கொய்யாக்காய் விற்பவர் என்று உங்களைச் சுற்றியுள்ளவர்களில் எத்தனை பேர் நிஜ மனிதர்கள் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?

ஆம் என்றால் எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று விளக்க முடியுமா? இரண்டு கால், இரண்டு கை, ஒரு தலை இருந்தால் மனிதன் என்று அப்பாவித்தனமாக இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறீர்களா?

கவனம். ரோபோவுக்கும் மனிதனுக்குமான இடைவெளி ஒவ்வொரு நாளும் வேக வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது. அச்சு அசலாக ரோபோ நம்மைப்போலவே சிரிக்கிறது, அழுகிறது, கிண்டல் செய்கிறது, பாடுகிறது, நடக்கிறது. அமெரிக்காவில் கோட் சூட் அணிந்துகொள்கிறது என்றால் ஜப்பானில் கிமோனோவுக்குத் தாவிவிடுகிறது.

பாப் கட்டிங், நீள முடி, சிவப்பு முடி என்று எந்த வடிவத்தையும் முயன்று பார்க்கத் தயங்குவதில்லை. கண்ணாடி போட்டுக்கொள்கிறது. கைக்கடிகாரம் கட்டிக்கொள்கிறது. செல்பேசியில் பேசுகிறது. விளையாடுகிறது. போரடிக்கிறது என்கிறது.

பேசும்போது திடீரென்று ஹச்சு என்று தும்மிவிட்டு, மன்னிக்கவும் என்று புன்னகை செய்தபடியே சட்டைப்பையிலிருந்து கைக்குட்டையை எடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ‘காலையில் தெரியாமல் குளிர்ந்த நீர் பருகிவிட்டேன், அதான்!’ என்று ஒருவேளை விளக்கம் அளித்தால், ‘ஓ, அப்படியா? கொஞ்சம் இஞ்சியும் சுக்கும் பொடிச்சுப் போட்டு...’ என்று உங்களுக்குத் தெரிந்த வைத்தியத்தைச் சிபாரிசு செய்ய முயற்சி செய்யலாம்.

நாம் என்னவெல்லாம் செய்வோமோ அனைத்தையும் நம்மைவிடச் சுறுசுறுப்பாக, நம்மைவிட நேர்த்தியாக, நம்மைவிட வேகமாகச் செய்து முடிக்கிறது. கார் ஓட்டத் தெரியும். சமைக்கத் தெரியும். ’கூச்சப்படாம சாப்பிடுங்க, இது நம்ம வீடு மாதிரி’ என்று பரிவோடு கவனித்துப் பரிமாறத் தெரியும். ’என்னைக் கூப்பிட்டா வரமாட்டேனா?’ என்று உரிமையோடு கோபித்துக்கொண்டு பாட்டியை அலேக்காகத் தூக்கிப் படுக்கையில் அமர்த்தத் தெரியும்.

’உங்கள் பெருங்குடல்வாயில் சிறிய பிரச்சினை. கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன். கண்ணை மூடுங்கள்’ என்று ஆற்றுப்படுத்திவிட்டு, கத்தியைக் கையில் எடுக்கத் தெரியும். நீங்கள் கண் விழித்ததும், உங்களுக்குச் செரிமானச் சிக்கல் ஏன் வந்தது என்பதைக் காணொளிக் காட்சிகளோடு விளக்கவும் தயார்.

சுத்த தமிழும் தெரியும். எடுத்துக்காட்டு. ‘கரையாத உணவு மூலக்கூறுகளைத் தண்ணீரில் கரையக்கூடிய சிறிய மூலக்கூறுகளாகச் சிதைக்கும் வளர்சிதைமாற்ற வினையே செரிமானம் எனப்படும். மேலதிகத் தகவல்களுக்கு என் நெற்றிப்பொட்டில் உள்ள விசையை அழுத்துங்கள். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.’

ஆனால், ரோபோவுக்கு இதெல்லாம் போதவில்லையாம். சரி வா என்று இழுத்து உட்கார வைத்து படம் வரையக் கற்றுக் கொடுக்க முடியுமா என்று பார்த்திருக்கிறார்கள். ப்பூ இதுதானா என்று பிரஷ்ஷை எடுத்து வைத்துக்கொண்டு, கை இருக்க வேண்டிய இடத்தில் தலை. கண் இருக்க வேண்டிய இடத்தில் வாய்.

பல்லுக்குப் பதில் பாறாங்கல். அதன் மேலே ஓர் ஆரஞ்சு நிற மரம் என்று எதையோ வரைந்துவிட்டு, இது கொஞ்சம் பிகாசோபோல் இல்லை என்று அடக்கமாகப் புன்னகை செய்கிறது. பியானோ முன்பு உட்கார வைத்தால் ஒரே நாளில் டைட்டானிக் வாசித்துக் காட்டுகிறது. அடுத்த நாள், வேறு புதிய பாடல். இது என்ன என்று கேட்டால், டைட்டானிக் 2.0 வாம்!

ஹாஹா இதில் சோகமே இல்லையே. டைட்டானிக் என்றால் நெஞ்சைப் பிழியும் சோகக் காட்சிகள் இருக்க வேண்டும். அதெல்லாம் உனக்குத் தெரியாது. என்ன இருந்தாலும் நீ இயந்திரம்தானே என்று மடக்கினால், ஹேஹே என்று பதிலுக்குச் சிரிக்கிறது. ‘என் டைட்டானிக்கை நான் மனிதனிடம் தர மாட்டேன். என்னை மாதிரி ஒரு சுட்டி ரோபோதான் வெள்ளை தொப்பி அணிந்துகொண்டு கப்பல் ஓட்டும். பிறகு எப்படி ஐஸ் பாறையில் கப்பல் மோதும்? விபத்தே நடக்காதபோது ஏன் சோகம், கீகம் எல்லாம்?’

நிஜமாகவே இது எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. இன்றுவரை நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறது. பொம்மைபோல் கை கட்டி நிற்கிறது. ஆனால், எத்தனை நாளைக்கு? இதெல்லாம் ஒரு கட்டுரையா? கொஞ்சம் தள்ளுங்கள் என்று மடிக்கணிணியைப் பிடுங்கி கடகடவென்று அற்புதமாக எழுதிக் காட்டுமா?

என்னது நான் பொருளா? உங்களைப்போல தானே சிந்திக்கிறேன். அப்படியானால் நானும் மனிதன்தானே என்று வாதம் செய்யுமா? இனி என்னை அது, இது என்று அழைக்காதீர்கள். பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள் என்று அறிவுறுத்துமா? இடத்தை அடைக்காமல் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று அலுத்துக்கொள்ளுமா? மன்னிக்கவும், அலுத்துக்கொள்வாரா அந்த மதிப்புமிக்க ரோபோ சார் அல்லது மேடம்?

அதெல்லாம் சரி. இதைப் படித்துக்கெண்டிருக்கும் நீங்கள் யார்? மனிதரா அல்லது ரோபோவா? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கும் ரோபோவின் உதவியைத்தான் நாட வேண்டுமா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்