1972-ம் ஆண்டில் ஒருநாள். பல்கேரியாவில் அமைந்த வர்னா அருங்காட்சியத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. பேசியவர் முன்னாள் ஆசிரியர். ‘புதையல் கிடைத்திருக்கிறது. வந்து பாருங்கள்.’ அருங்காட்சியகத்துக்கு இப்படி அடிக்கடி அழைப்புகள் வரும்.
நிலத்தைத் தோண்டும்போது செப்புக்காசுகள் கிடைக்கும். அப்படிக் கிடைத்த காசுகள் அருங்காட்சியகத்தின் ஓர் அறை முழுக்கக் கிடந்தன. அன்றைக்கும் அப்படிப்பட்ட காசுகள்தான் கிடைத்திருக்கும் என்று அந்த ஆசிரியரைத் தேடி அவரது ஊருக்குப் போனார் அலெக்சாண்டர் மின்செவ். அவர் ஓர் தொல்லியல் ஆய்வாளர்.
ஆசிரியர் ஓர் அறையில் மேஜையில் சில பொருட்களைப் பரப்பி வைத்திருந்தார். அவற்றைப் பார்த்ததும் அலெக்சாண்டரின் கண்கள் ஆச்சரியத்தில் அகலமாக விரிந்தன. அனைத்தும் தங்கத்தாலான சின்னச்சின்னக் கலைப்பொருட்கள், அணிகலன்கள். ‘நிலத்தில் மின்சாரக் கம்பி புதைப்பதற்காகத் தோண்டும்போது இதேபோலச் சில பொருட்கள் கிடைத்தன’ என்று இன்னோர் அட்டைப்பெட்டியையும் நீட்டினார்.
அந்தப் பெட்டியில் உலோகங்களால் ஆன சிறு கத்திகள், சிறிய அணிகலன்கள் போன்றவை இருந்தன. ‘இது வரலாற்றின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு’ என்று அலெக்சாண்டருக்குத் தோன்றியது.
அடுத்த சில நாட்களில் பல்கேரிய அகழ்வாராய்ச்சியாளர்கள் அந்தப் பகுதியை முற்றுகையிட்டனர். ஆசிரியர் தோண்டியது ஒரு கல்லறைப் பகுதி என்று தெரியவந்தது. அந்தப் பகுதியை மேலும் ஆராய்ந்தபோது மேலும் சில கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது மிகப்பெரிய சுடுகாடு, அங்கே இன்னும் பலருடைய உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்று கண்டறிந்தார்கள். வர்னாவில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தீவிரமாக ஆரம்பமாயின.
அடுத்த சில கல்லறைகளைத் தோண்டியபோது, சில கலைப் பொருட்கள், பழைய மட்பாண்டங்கள், எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், களிமண் பொம்மைகள் கிடைத்தன. நாற்பத்தியிரண்டாவது கல்லறையைத் தோண்டும்வரை அவர்களது பணி அவ்வளவு சுவாரசியமில்லாமல்தான் சென்று கொண்டிருந்தது. நாற்பத்து மூன்றாவது கல்லறையில் அவர்கள் கண்ட காட்சி, ஐரோப்பியக் கண்டத்தின் வரலாற்றையே மாற்றி எழுதும்படியாக இருந்தது.
ஓர் ஆண் எலும்புக்கூடு. அதைச் சுற்றி ஏகப்பட்ட தங்க ஆபரணங்கள், அந்த எலும்புக்கூட்டின் கையில் தங்கத்தாலான ஒரு செங்கோல், அப்புறம் கோடாரி போன்ற ஓர் ஆயுதம் என்று அந்தக் கல்லறை தனியாக மிளிர்ந்தது. அந்தப் பகுதியில் வாழ்ந்த அரசன் அல்லது தலைவனுடைய கல்லறை அது. மிகவும் மரியாதையுடன் அவன் புதைக்கப் பட்டிருக்கிறான் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். வர்னா மனிதர்கள் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது.
thalaijpgகளிமண் தலைசரி, அந்த வர்னா மனிதர்கள் வாழ்ந்த காலம் எது?
கரிமக்காலக் கணிப்புப்படி (Carbon dating) அந்தக் கல்லறைகள் கி.மு.4569-க்கும் கி.மு.4340-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. அதாவது சுமார் 6,500 ஆண்டுகளுக்கு முந்தையவை. மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியில் உலோகத்தினால் செய்யப்பட்ட கருவிகளின் பயன்பாடு தொடங்கிய செப்புக்காலம் என்று இதைச் சொல்லலாம். அப்போதே அந்தப் பகுதியில் அமைந்த வர்னா ஏரிக்கரையை ஒட்டி அந்த மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
மனிதன் அறிந்த வரலாற்றில் இதுவரை மெசபடோமியா, எகிப்து, சிந்து சமவெளி போன்றவையே பண்பாடுமிக்க பண்டைய நாகரிகங்களாகக் கருதப்பட்டு வந்தன. நல்ல கட்டமைப்பு கொண்ட நகரம், சமூக அமைப்பு, கலாச்சாரம், நிர்வாகம் என்று மனிதன் நாகரிக வாழ்க்கைக்கு நகர்ந்தது இந்த நாகரிகங்களில்தாம் என்று ஆய்வாளர்கள் நம்பினர். ஆனால், சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே கருங்கடல் பகுதியில் பல்கேரியாவில் இப்படி ஒரு மனித நாகரிகம் தழைத்தோங்கியிருக்கிறது என்ற கண்டுபிடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வர்னா மனிதர்கள் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்கம், செம்பு உள்ளிட்ட உலோகங்களை மிக நேர்த்தியாகக் கையாண்டு, அழகான ஆபரணங்களைச் செய்துள்ளனர். அற்புதமான கலைப் பொருட்களை வடித்துள்ளனர். அருமையான ஆயுதங்களை உருவாக்கியுள்ளனர்.
இவற்றை எல்லாம் கொண்டு பார்க்கும்போது, வர்னா மனிதர்களிடம் செழுமையான கலாச்சாரம் இருந்திருக்கிறது. வளமையான சடங்குகளைக் கடைபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக அவர்களது இறுதிச்சடங்குகளில் பல்வேறு நடைமுறைகளைக் பின்பற்றியிருக்கிறார்கள்.
ஆண்களை நேராகப் படுக்க வைத்துப் புதைத்திருக்கிறார்கள். பெண்களை தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் நிலையில் வைத்துப் புதைத்திருக்கிறார்கள். அங்கே தோண்டப்பட்ட எல்லா கல்லறைகளிலும் எலும்புக்கூடுகள் இல்லை. சிலவற்றில் சுட்ட மண்ணால் ஆன பொம்மைகளும், சிலவற்றில் களிமண்ணால் ஆன, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும், சிலவற்றில் மனிதனின் முக உருவங்களும் காணப்பட்டன.
அந்த மனிதர்கள் வர்னா ஏரியைப் பயன்படுத்தி, கருங்கடல், மத்தியத்தரைக்கடல் வழியாகச் செழிப்பாகக் கடல் வணிகமும் செய்திருக்கிறார்கள். ஒரு தலைவன், அவன் வகுத்த சட்டம், அதற்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை என்று முறையான சமூக அமைப்பில் வாழ்ந்து வரலாற்றில் காணாமல் போயிருக்கிறார்கள். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தங்கங்களிலேயே மிகவும் பழமையானது வர்னாவில் கண்டுபிடிக்கப்பட்டதே.
வர்னா அகழ்வாராய்ச்சியில் 1972 தொடங்கி இதுவரை 294 கல்லறைகள் தோண்டப்பட்டுள்ளன. இன்னும் 30% பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டியிருக்கிறது. 22,000-க்கும் மேற்பட்ட பழம்பொருட்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் சுமார் 3,000 தங்கத்தாலான பொருட்கள் (ஏறத்தாழ 6 கிலோ எடை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதிலும் 43-வது கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தின் அளவானது, அன்றைக்கு உலகத்தின் பிற பகுதிகளிலிருந்த தங்கத்தைக் காட்டிலும் அதிகமானது என்று கருதப்படுகிறது. இவற்றை எல்லாம் கொண்டு வரலாற்று ஆய்வாளர்கள் அழுத்தமாக ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். ‘ஐரோப்பியக் கண்டத்தில் நாகரித்தின் தொட்டில் என்பது பல்கேரியாவில் வாழ்ந்த வர்னா மனிதர்களிடமிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும்.’
வர்னா பொக்கிஷங்களின் கண்டுபிடிப்பால் பண்டைய மனிதனின் வரலாறே மாற்றி எழுதப்பட வேண்டியிருக்கிறது.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago