உங்கள் கையில் ஒரு மரப்பெட்டி இருக்கிறது. அந்த மரப்பெட்டி நிறைய மனிதனின் மண்டை ஓடுகள் இருக்கின்றன. எனில், உங்கள் கையில் பொக்கிஷம் இருக்கிறது என்பீர்களா?
மண்டை ஓடுகளைப் போய் யாராவது பொக்கிஷம் என்பார்களா என்று தோன்றலாம். ஆனால், அந்த மண்டை ஓடுகள் சுமார் இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் மண்டை ஓடுகள் என்றால்? அட! அது மிக மிக அரிய பொக்கிஷம்தானே!
நீங்கள் பாதுகாப்பாக வைத்திருந்த அந்த மண்டை ஓட்டுப் பெட்டி திடீரென தொலைந்து போய்விட்டால்? மீண்டும் கிடைக்கவே இல்லை என்றால்? அது மிகப் பெரிய சோகம்தான். அந்தச் சோகக் கதையைப் பார்ப்போம்.
சீனாவின் தலைநகரம் பெய்ஜிங். அதன் பழைய பெயர் பீகிங். 1921-ல் பீகிங்கின் அருகிலுள்ள சொவ்கொவ்தியான் என்ற பள்ளத்தாக்கில் ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் ஆண்டர்சன் அகழ்வாராய்ச்சி நடத்தினார். 1923-ல் ஆண்டர்சனின் உதவியாளரான ஓட்டோ ஸ்டேன்ஸ்கி, பண்டைய மனிதனின் கடைவாய்ப்பற்கள் சிலவற்றைக் கண்டெடுத்தார். 1926-ல் அதுகுறித்த செய்திகளை, ஆய்வு அறிக்கைகளை ஓட்டோ வெளியிட்டார்.
1928-ல் பீகிங்கின் யூனியன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த உடற்கூறியல் நிபுணர் டேவிட்சன் பிளாக், ஓட்டோவின் கண்டுபிடிப்புகளின் மேல் ஆர்வம்கொண்டார். அதற்குப் பிறகு அதே பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கீழ்தாடையுடன் கூடிய சில பற்கள், மண்டை ஓட்டின் சில துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
பிறகு சீனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் சிலரது தலைமையிலும், சார்டின் என்ற பிரெஞ்சு ஆய்வாளரது முயற்சியிலும் அங்கே தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது. அடுத்த சில வருடங்களில் ஆதிமனிதனின் ஆறு முழுமையான மண்டை ஓடுகள் கிடைத்தன. தவிர, மண்டை ஓட்டின் பகுதிகள், பற்கள், தாடை எலும்புகள் என மொத்தம் 200 படிமங்கள் கிடைத்தன.
அந்த மண்டை ஓடுகளுக்குச் சொந்தமான மனிதர்களுக்கு ‘பீகிங் மனிதன்’ என்று பெயரிடப்பட்டது. டேவிட்சன் பிளாக் அவை குறித்த தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பிளாக் 1934-ல் இறந்துபோன பிறகு, சார்டின் என்ற பிரெஞ்சு ஆய்வாளர் அந்த ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். பீகிங் மனிதனுக்கு முன்பாகவே கண்டெடுக்கப்பட்டவன் ஜாவா மனிதன். நீளமான கைகளையுடைய ஜாவா மனிதனை முழுமையான வளர்ச்சியடைந்த மனிதர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால், ஆய்வுகளின்படி பீகிங் மனிதன் ஜாவா மனிதனைவிட வளர்ச்சியடைந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் நான்கு கால்களால் நடக்கவில்லை. இரண்டு கால்களால் நிமிர்ந்து நடந்திருக்கிறான். கல்லால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறான். நெருப்பின் உபயோகத்தை அறிந்திருக்கிறான். எனவே, அவனிடம் மனித குலத்தின் பண்பாடு இருந்திருக்கிறது. இன்றைய நாகரிக மனிதனின் மூதாதையன் பீகிங் மனிதனே என்று சார்டின் தனது ஆய்வுகள் மூலம் விளக்கினார்.
பீகிங் மனிதன், சுமார் 2,50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று சார்டினின் ஆய்வுகள் தெரிவித்தன. மனித இனத்தின் வரலாற்றை விளக்குவதில் பீகிங் மனிதனின் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது. 1941-ல் சார்டின் சீனாவில் இருந்து கிளம்பினார். பீகிங், ஜப்பானியப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. பீகிங்கின் யூனியன் மருத்துவக் கல்லூரியில்தான் பீகிங் மனிதனின் மண்டை ஓட்டுப் படிமங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
ஜப்பானியர்கள் வசம் அவை சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, சீன அதிகாரிகள் பீகிங் மனிதனின் படிமங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியத்துக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டார்கள். இரண்டு பெரிய மரப்பெட்டிகளில் பீகிங் மண்டை ஓடுகளும், பிற படிமங்களும் பத்திரமாக வைக்கப்பட்டன. அந்த மரப்பெட்டிகளை வட சீனாவிலுள்ள குவின்ஹுவாங்டோ துறைமுகத்துக்கு ரயிலில் எடுத்துச் செல்ல வேண்டும்.
அங்கே காத்திருக்கும் அமெரிக்கக் கப்பல் ஒன்றில் ஏற்றி அனுப்பிவிட வேண்டும் என்பது திட்டம். யூனியன் மருத்துவக் கல்லூரியில் இருந்து மரப்பெட்டிகள் கிளம்பின. அதற்குப் பிறகு என்னவாயின என்பது இன்றைக்குவரை மர்மமே.
அமெரிக்க வீரர்கள், அந்த மரப்பெட்டிகளைத் துறைமுகத்துக்கு ரயிலில் எடுத்துச் சென்றனர். அப்போது ஜப்பானிய வீரர்கள் ரயிலைச் சூறையாடினர். அதில் அந்த மரப்பெட்டிகளும் சூறையாடப்பட்டன. இதென்ன வெறும் மண்டை ஓடுகள்? இவற்றை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று அதன் அருமை தெரியாமல் ஜப்பானிய வீரர்கள் எங்கோ குப்பையில் எறிந்துவிட்டார்கள் என்று ஓர் அனுமானம் உண்டு.
இல்லை, சீனா அந்தப் பெட்டிகளை அமெரிக்காவுக்கு அனுப்பவே இல்லை. ரகசியமாக இன்றைக்கும் பதுக்கி வைத்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். அமெரிக்காவுக்கு அந்த மரப்பெட்டிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன. அவை அமெரிக்காவில்தான் இருக்கின்றன. ஆனால், தன்னிடம் இல்லையென அமெரிக்கா பொய் சொல்வதாகச் சிலர் வாதிடுகிறார்கள்.
சீனாவின் செல்வங்கள் பலவற்றுடன், இந்த பீகிங் மண்டை ஓட்டுப் படிமங்கள் அடங்கிய மரப்பெட்டியையும் ஜப்பானிய வீரர்கள் கொள்ளையடித்தார்கள். அவற்றை எல்லாம் ஜப்பானியக் கப்பல் ஒன்றில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். அந்தக் கப்பல் நடுக்கடலில் மூழ்கிப் போனது. பீகிங் மண்டை ஓடுகளும் கடலுக்குள் காணாமல் போய்விட்டன என்றும் சிலரால் சொல்லப்படுவது உண்டு.
ஆனால், சீனாவும் அமெரிக்காவும் ஜப்பானும் பீகிங் மனிதப் படிமங்கள் தங்கள் வசம் இல்லை என்றுதான் இன்றைக்குவரை சொல்லி வருகின்றன. 1972-ல் அமெரிக்காவின் செல்வந்தரான கிறிஸ்டோபர் ஜானஸ், பீகிங் மண்டை ஓடுகளைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 5 ஆயிரம் டாலர் பரிசு என்று அறிவித்தார். என்னிடம் இருக்கிறது. ஆனால், எனக்கு 5 லட்சம் டாலர் வேண்டும் என்று ஒரு பெண், அவரைத் தொடர்புகொண்டார். அதற்குப் பிறகு அந்தப் பெண் காணாமல் போய்விட்டார்.
2005-ல் சீன அரசு பீகிங் மனிதப் படிமங்களைத் தேட குழு ஒன்றை அமைத்தது. தவிர, உலகம் எங்கிலும் பலரும் அதைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் படிமங்களைக் கொண்டு போதுமான அளவுக்கு ஆராய்ச்சிகள் நடந்துவிட்டாலும், அவை காணாமல் போனது என்பது, மனித குல வரலாற்றின் பேரிழப்பே!
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago