‘ஒரு காட்டில், பாழடைந்த கட்டிடத்தில் பூதம் ஒன்று தனியாக வசித்துவந்தது.’
இந்த ஒரு வரியை மட்டும் படித்துவிட்டு, புத்தகத்தை மூடி வைத்துவிடுங்கள். சில நொடிகளில் மாயம் நிகழ ஆரம்பித்துவிடும். கொஞ்ச நேரம் என்னைத் தொந்தரவு செய்யாதே என்று ஓர் ஓரமாகச் சுருண்டு படுத்துக்கிடந்த மூளை, சுறுசுறுப்பாக எழுந்து உட்காரும். சூடாக ஒரு தேநீர் போட்டு அருந்தியபடியே வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
என்ன மாதிரியான காடு அது? அங்கே என்னென்ன விலங்குகள் இருக்கும்? பக்கத்தில் மலை உண்டா? இருட்டில் காடு இன்னும் பயங்கரமாக இருக்கும், இல்லையா? அது சரி, அந்தக் காட்டில் பாழடைந்த கட்டிடம் எப்படி உருவாகி இருக்கும்? அடச்சே, இது என்ன கேள்வி? யாராவது நாம் ஒரு பாழடைந்த கட்டிடம் கட்டுவோம் என்று முடிவு செய்தா கட்டுவார்கள்? அநேகமாக அது பக்கத்து ஊர் ராஜாவின் மாளிகையாக இருந்திருக்கலாம். விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் ஓய்வெடுப்பதற்காகவும் அதை அவர் கட்டியிருக்கலாம். பிறகு ஏன் ராஜா அதை விட்டு வெளியேறினார்?
வேறு என்ன? பூதம்தான் காரணம். எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் ராஜா, நேற்று ராத்திரி பூதம்போல் ஒன்று இங்கே உலாவுவதை நான் என் இரு கண்களால் கண்டேன் என்று காவல் வீரர் யாராவது ராஜாவிடம் கிலியோடு வந்து சொல்லியிருக்க வேண்டும். அதற்குப் பிறகு ராஜாவுக்குத் தூக்கம் வரும் என்றா நினைக்கிறீர்கள்? யாரங்கே! மாளிகையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், பூதம் நம்மை வேட்டையாடுவதற்கு முன்பு இந்த இடத்தைக் காலி செய்வோம் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும்.
உடனே அரக்கப்பறக்க குதிரை வண்டியில் ஏறி அமர்ந்து, ராஜாவின் குடும்பம் அங்கிருந்து காணாமல் போயிருக்கும். அப்பா என் பொம்மையை மட்டுமாவது கொண்டு வரட்டுமா என்று அந்த வீட்டிலுள்ள குழந்தை பாவமாகச் சிணுங்கியிக்கும். ராஜாவால் வாங்க முடியாத பொம்மையா? நான் வேறு வாங்கித் தருகிறேன் வா என்று ராஜா சமாதானம் செய்திருப்பார். (ராஜாவாக இருந்தாலும் அப்பா அல்லவா? பிறகு மறந்திருப்பார்!) அப்புறம் என்ன? ஹாஹாஹா என்று அந்த இடமே அதிர்ந்து நடுங்கும்படி பூதம் ஒய்யாரமாக வீட்டுக்குள் வந்து சேர்ந்திருக்கும். இனி அது பூதத்தின் வீடு.
ஆம், பூதம் செய்தது தப்புதான். பூதம் பயங்கரமானதுதான். ஆனாலும் அதைப் பார்க்கக் கொஞ்சம் பாவமாகவும் இருக்கிறது தானே? எத்தனை பெரிய மாளிகையாக இருந்தாலும், என்னதான் பூதமாகவே இருந்தாலும் தனியாக இருப்பது சலிக்பு தரும் அல்லவா? மேலும், பூதம் என்றாலே அது கெட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும்?
மான் எப்படித் துள்ளுகிறதோ, மீன் எப்படி நீந்துகிறதோ, சிறுத்தை எப்படி உறுமுகிறதோ அப்படி அந்தப் பூதமும் மற்றவர்களைப் பயமுறுத்துவதையும் ஹாஹா என்று சத்தம் போட்டுச் சிரிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கலாம் அல்லவா? அத்தனை பெரிய உடம்பு என்பதால் அது நிலம் அதிரும்படி நடக்கலாம் அல்லவா? அது ஒன்றுமே செய்யாமல் தன் பாட்டுக்கு நடந்து சென்றாலும், ’ஐயோ பூதம்’ என்று நாம் கத்தினால் அதற்கு எவ்வளவு வருத்தம் ஏற்படும்! இப்படி எல்லோரும் ஒதுங்கி ஒதுங்கிப் போனால் அதுவும் என்னதான் செய்யும், பாவம்.
மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னால் ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் படித்தது என்னவோ ஒரு வரி மட்டும்தான். அதை வைத்துக்கொண்டு இவ்வளவு கற்பனை செய்வது சரியா? புத்தக ஆசிரியர் என்னதான் எழுதியிருக்கிறார் என்று படிக்க வேண்டாமா என்றால், வேண்டாம். புத்தகத்தின் மாயமே அதுதான்.
idam-2jpgஇதே ஒற்றை வரி தொலைக்காட்சியில் அல்லது பெரிய திரையில் இடம்பெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் காடு எப்படி இருக்கும் என்று அவர்களே காட்டிவிடுவார்கள். அந்தப் பூதத்தைக் காட்டிவிடுவார்கள். பாழடைந்த வீடும் திரையில் வந்துவிடும். அடுத்த அரை மணி அல்லது ஒரு மணி நேரத்துக்குள் கதையும் முடிந்துவிடும். நீங்கள் அமைதியாக ஓர் ஓரமாக அமர்ந்து கொட்டக் கொட்ட பார்த்தால் போதும்.
ஒரு கதையைப் படிக்கும்போது கூடவே நாமும் ஒரு கதையை அல்லது பல கதைகளைப் பின்னுகிறோம். ஆனால் அதே கதையைப் பார்க்கும்போது என்ன காட்டப்படுகிறதோ, எவ்வளவு காட்டப்படுகிறதோ அதை மட்டுமே பார்க்கிறோம். இதோ, இது காடு, அது பூதம். பக்கத்தில் இருக்கிறது பார் அதுதான் பாழடைந்த வீடு. அந்த வீடு ஏன் அப்படி இருக்கிறது என்று நீங்கள் கேட்டால், அது அப்படிதான் இருக்கும் என்கிறது திரை. அந்தப் பூதம் ஏன் அப்படி நடக்கிறது? அது அப்படிதான் நடக்கும். அந்த ராஜா எங்கே? நான் என்ன காட்டுகிறேனோ அதை மட்டும் பார். அநாவசியமாகக் கேள்விகள் கேட்காதே!
தொலைக்காட்சி நிஜமாகவே பாவம்தான். பூதத்தின் கை விரல் நகம் அளவுகூட அது இல்லை. ஆனால் காட்டையும் பூதத்தையும் அதற்குள் அடக்கியாக வேண்டும். புத்தகத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பூதத்தைவிட, காட்டைவிட, உலகைவிட பல மடங்கு பெரியது அது. அதை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து ஒரு மரத்துக்குக் கீழே அமர்ந்துகொள்ளலாம். அதோடு பேசலாம். சண்டை போடலாம். ஒரே ஒரு சொல் படித்தால்கூட போதும். நாய்க்குட்டி மாதிரி மூளை உற்சாகமாகக் குதிக்க ஆரம்பித்துவிடும்.
தொலைக்காட்சி முன்பு அமர்ந்தால் என்னாகும்? உனக்கு நான் தேவைப்பட மாட்டேன், ‘பை பை’ என்று போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு, கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு மூளை தூங்க ஆரம்பித்துவிடும். தொலைக்காட்சியின் சத்தத்தில் மூளை குறட்டை விடுவதுகூட நமக்குக் கேட்காது. பிறகு மாயம் எப்படி நிகழும்?
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago