கதை: குளத்தில் இருந்த நட்சத்திரங்கள்

By உதய சங்கர்

மருதாபுரியில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். அதில் மூத்தவரின் பெயர் தன்யன், இரண்டாவது சோசு, கடைசியில் பிறந்தவர் பென்கன். தன்யன் நல்லவர். கடின உழைப்பாளி. மற்ற இருவரும் சோம்பேறிகள். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் எப்பொழுதும் உறங்கிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் பொழுதைப் போக்கினார்கள்.

ஒரு நாள் தன்யன் தன் தம்பிகளிடம், “பிரியமுள்ள தம்பிகளே, நாம் இப்படிக் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பது சரியில்லை. நம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். அதனால் நான் ஒரு பயணம் செல்லப் போகிறேன். நல்வாய்ப்பு கிடைத்தால் உழைத்து, சம்பாதித்துக்கொண்டு வருவேன்” என்றார். ஆனால் அது தம்பிகளுக்குப் பிடிக்கவில்லை.

“ஏன் நீங்கள் மட்டும் செல்வந்தனாக வேண்டும்? நாங்களும் பணம் சம்பாதிக்க வேண்டாமா? அதனால் நாங்களும் பயணம் போகிறோம்” என்று சொன்னார்கள். தன்யன் பதில் எதுவும் சொல்லவில்லை.

சோசு பயணம் சென்றார். ஒரு கிராமத்தில் மெதுவாக நடந்துகொண்டிருந்தார். ஒரு வயல்காட்டை அடைந்தார். அப்போது பசியும் தாகமும் ஏற்பட்டது. அருகில் இருந்த ஒரு குடிசையின் வாசல் கதவைத் தட்டினார். உள்ளேயிருந்து ஒரு வயதான குரல், “வெளியில யாரு?“ என்று கேட்டது.

“நான் ஒரு பயணி. இன்னிக்கு ராத்திரி இங்கே தங்கிக்கலாமா?” என்று கேட்டார் சோசு.

“இருந்துட்டுப் போகலாம். ஆனால் என் குடிசையின் பின்புறம் ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்திலுள்ள நட்சத்திரங்களை எல்லாம் சுத்தப்படுத்தித் தர வேண்டும். முடியுமா?”

அது எப்படி முடியும்? சோசு யோசித்தார். குளத்தில் தெரிவது வானத்தில் தெரிகிற நடத்திரங்களின் பிம்பம்தானே! அவற்றை எப்படிக் குளத்திலிருந்து சுத்தப்படுத்த முடியும்? தோல்வியை ஒப்புக்கொண்டு, ஊருக்குத் திரும்பி வந்துவிட்டார். தன்னுடைய சகோதரர்களிடம் வருத்தத்துடன், “எனக்கு எங்கேயும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் திரும்பி வந்துட்டேன்” என்றார்.

அப்போது தன்யனும் பென்கனும் வீட்டில் இருந்தார்கள். அடுத்த முறை பென்கனுடையதாக இருந்தது. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து கடைசியில் அவர் அந்தப் பழைய குடிசைக்குப் போனார். சோசு கேட்டதைப்போல அவரும் அதே கேள்வியைக் கேட்டார். சோசுவிடம் சொன்ன காரியத்தையே கிழவி பென்கனிடமும் சொன்னார். சோசுவைப்போல எதுவும் செய்யாமல் பென்கனும் வீட்டுக்குத் திரும்பினார்.

“எனக்கு எந்த இடத்திலும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று வேதனையோடு சொன்னார்.

கடைசியில் நல்வாய்ப்பைத் தேடி தன்யன் புறப்பட்டார். பல மைல் தூரம் கடந்து அவரும் அந்தக் கிழவியின் குடிசைக்குப் போய்ச் சேர்ந்தார். அப்போதும் கிழவி அந்தப் பழைய வேலையைச் செய்யச் சொன்னார்.

ஒரு நிமிடம் யோசித்த தன்யன், கிழவியிடம் ஒரு வாளியைக் கேட்டு வாங்கினார். வாளி கையில் கிடைத்த உடனே குளத்தில் இறங்கி தண்ணீரை வெளியில் எடுத்து ஊற்ற ஆரம்பித்தார். குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியில் எடுத்து ஊற்ற கடுமையாக உழைத்தார்.  வேலை முழுவதும் முடிந்த பிறகே ஓய்வெடுத்தார்.

பொழுது விடிவதற்கு முன்பு குடிசையிலிருந்து வெளியே வந்தார் கிழவி. தன்யன் மகிழ்ச்சியோடு குளத்தைக் காட்டினார். தண்ணீர் இல்லாததால் ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இல்லை.

“நான் குளத்தில் இருந்த நட்சத்திரங்களை எல்லாம் வெளியே எடுத்து விட்டேன். இனி ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இருக்காது.“

கிழவிக்கு மகிழ்ச்சி. தன்யனைப் பாராட்டினார். “உனக்கு முன்னால் பலரும் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முயற்சி கூடச் செய்யாமல் திரும்பிப் போயிருக்கிறார்கள். உழைப்பதற்கான உறுதியோ, சிந்திப்பதற்கான புத்தியோ இல்லாதவர்கள். நீதான் சிறந்த உழைப்பாளி” என்று புகழ்ந்த கிழவி, தன்யனை உற்று நோக்கினார்.

“இனிமேல் இந்த நிலம் முழுவதும் உனக்குதான். இங்கே நீ உன் விருப்பம்போல் விவசாயம் செய்து சம்பாதிக்கலாம்!”

அந்த மகிழ்ச்சியான செய்தியைத் தம்பிகளிடம் சொல்வதற்காக வீட்டுக்கு ஓடினார் தன்யன். “நான் என்னுடைய நல்வாய்ப்பைக் கண்டுபிடித்துவிட்டேன்.” அவர்கள் திகைத்து நின்றனர்.

“எங்கே?”

தம்பிகளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அன்று முதல் சோம்பலை மறந்து உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று  முடிவு எடுத்தார்கள்.

- அப்துல்லா பெரம்பரா | தமிழில்:உதயசங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்