இடம் பொருள் மனிதர் விலங்கு: அமிர் குஸ்ரோவின் கடல்

By மருதன்

நான் நீயா மாறிவிட்டேன்,

நீ நானாக மாறிவிட்டாய்

நான் உடல் என்றால் நீ உயிர்

நீ வேறு, நான் வேறு என்று யாரும் இனி சொல்ல முடியாது.

“வாரே வா! அருமை, அமிர் குஸ்ரோ, அருமை. ஆனால், கேட்க நன்றாக இருந்தாலும் இது உண்மையல்ல. ஒரு குயவரும் சுல்தானும் ஒன்றா? பலசாலியான ஆணும் மென்மையான பெண்ணும் ஒன்றா? நான் ஒரு இந்து, நீங்கள் முஸ்லிம். நீங்கள் சுடர்விடும் அறிவு கொண்டவர். எனக்கோ ஒரு எழுத்துக்கூட படிக்கத் தெரியாது.

நீங்களும் நானும் எப்படி ஒன்றாகமுடியும்? நீங்களும் நானும் எப்படி உயிரும் உடலுமாக மாறமுடியும்? நீங்கள் வேறு, நான் வேறு. சுல்தான் வேறு, குயவர் வேறு. இந்து வேறு, முஸ்லிம் வேறு. ஆண் வேறு, பெண் வேறு. நான் சொல்வது சரிதானே?”

“நீ சொல்வது பாதி சரி என்றார் அமிர் குஸ்ரோ. சுல்தானிடம் உள்ள பொன்னும் பொருளும் ஒரு நாள் காணாமல் போகலாம். அப்போது அவர் ஏழையாகலாம். அவர் பிழைப்புக்குப் பானை செய்யலாம். பானை செய்பவருக்குப் புதையல் கிடைக்கலாம். பதவி கிடைக்கலாம். அவர் நாளையே சுல்தான் ஆகலாம்.

வாள் சண்டையில் என்னை ஒரு பெண் தோற்கடிக்கலாம். நான் ஒரு ஆண், மென்மையாக இருக்க வேண்டிய நீ எப்படி என்னைத் தோற்கடிக்கலாம் என்று நான் கேட்க முடியுமா என்ன? நண்பா, உனக்கு இப்போது எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது உண்மைதான். ஆனால், நீ இன்றுள்ள நிலையில்தான் எப்போதும் இருந்தாக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே.

குயவர், சுல்தானாக மாறும்போது நீயும் ஒரு கவிஞராக மாறலாமே? அப்போது நீ எழுதும் கவிதை, என்னுடையதைவிட நன்றாகவும் இருக்கலாம் அல்லவா?”

“ஹாஹா, கவிஞர் அல்லவா? அதான் இப்படி எல்லாம் அழகாகக் கற்பனை செய்கிறீர்கள்! குஸ்ரோ, கொஞ்சம் நிஜ உலகுக்கு வாருங்கள். நீங்கள் ஏழு அரசர்களிடம் பணியாற்றியவர். உங்களுடைய ஒரு விரல் பாடல் எழுதுகிறது என்றால் இன்னொரு விரல் தபலாவை இசைக்கிறது. ஒரு விரல் பாரசீகக் கவிதை எழுதினால் இன்னொரு விரல் உருது கஸல் இயற்றுகிறது.

உங்களை இந்த நாடே மதிக்கிறது. யாரையும் சட்டை செய்யாத சுல்தான்கூட, உங்களுக்குத் தலைவணங்குகிறார். என்னை மதித்து உங்களைத் தவிர, வேறு யாராவது இரண்டு வார்த்தைகளாவது பேசுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? பிறகு எப்படி நாம் ஒன்றாக முடியும்?”

“ஆம், நண்பரே நாம் ஒன்றுதான். உனக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சரி, இதைச் சொல். உன்னிடம் வரமாட்டேன் என்று கவிதை எப்போதாவது சொன்னதா? தபலாவுக்கும் உனக்கும் ஏதாவது பகையா? உன் கை விரல் தீண்டினால் நான் வாய் திறக்க மாட்டேன் என்று தபலா சத்தியம் செய்திருக்கிறதா?

உன்னைப் பார்த்ததும் புத்தகத்துக்குக் கையும் காலும் முளைத்து காணாமல் போய்விட்டதா? ஒரு பெண் என்னைத் தொடுவதை அனுமதிக்க மாட்டேன் என்று வாள் முகத்தைத் திருப்பிக்கொண்டதா? புத்தகத்துக்கும் தபலாவுக்கும் வாளுக்கும் நம்மைவிட நிறைய அறிவு இருக்கிறது. அது யாரையும் பேதம் பிரித்துப் பார்ப்பதில்லை.”

அமிர் குஸ்ரோ தொடர்ந்தார். “எனக்கு முதலில் பாரசீகமும் உருதுவும் மட்டும்தான் தெரியும். ஒரு முஸ்லிமுக்கு இந்த இரு மொழிகள் தெரிந்திருந்தால் போதும் என்றுதான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் முதல் முறையாக இந்துஸ்தானியைக் கேட்டதும் என் மனம் மயங்கிவிட்டது. இரண்டு மொழிகளுக்கு மேல் ஒருவர் தெரிந்துகொள்ளக் கூடாது என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா என்ன?

idam-2jpgright

எனவே இந்துஸ்தானியைக் கற்றுக்கொண்டேன். பிறகு அவத் மொழி, பிரிஷ் பாஷா ஆகியவற்றையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு மொழியும் ஒரு புதிய உலகை எனக்குக் காட்டியது. இது எனக்குப் புரியாது, அது எனக்கு வேண்டாம் என்று நான் ஒதுங்கியிருந்தால் எனக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும், நினைத்துப் பார். ஐயோ சமஸ்கிருதமா, அது இந்துக்களின் மொழி அல்லவா என்றார்கள் சிலர். ஆனால், நான் ஆசையோடு சமஸ்கிருதத்தை நெருங்கினேன். அந்த மொழியும் அன்போடு என்னை அணைத்துக்கொண்டது.”

கண்களை மூடிப் பாடத் தொடங்கினார் அமிர் குஸ்ரோ.

“அன்பு என்னும் பெருங்கடலில் யார் குதிக்கிறார்களோ அவர்கள்

மூழ்கிப் போவார்கள்.

ஆனால் பயப்படாதே, மூழ்கியவர்கள் பாக்கியசாலிகள்

அவர்களால் மட்டும்தான் கரை சேரமுடியும்.”

நாம் எப்படி ஒன்றாக முடியும் என்று கேட்கிறாயே, உனக்கான பதில் இதுதான். நான் அந்தக் கடலில் குதித்து, மூழ்கிவிட்டேன். நீயும் என்னைப்போல் துணிந்து குதி என்றார் அமிர் குஸ்ரோ. என்னைப்போல் நீயும் உன்னை மூழ்கடித்துக்கொள். அந்தக் கடல்நீர் உன் கண்களைக் கூர்மையாக்கும். சுல்தானும் குயவரும் இந்துவும் முஸ்லிமும் ஆணும் பெண்ணும் உருதுவும் சமஸ்கிருதமும் ஒன்றுதான் என்பதை நீ உணர்வாய்.

உன் மதம் அந்தக் கடலில் காணாமல் போய்விடும். உன் தயக்கம் உன்னைவிட்டு விலகி ஓடும். தங்கமும் வைரமும் வைடூரியமும் உப்புபோல் அந்தக் கடலில் கரைந்து மறைந்து போவதை நீ பார்ப்பாய். உன் கண்களையும் காதுகளையும் இதயத்தையும் அந்தக் கடல் சுத்தப்படுத்தும். பிறகு உன்னை மறுகரையில் கொண்டுவந்து சேர்க்கும்.

அதற்குப் பிறகு நீ ஒரு புதிய மனிதனாக மாறியிருப்பாய். இசையும் கவிதையும் பாடலும் இன்பமும் உன்னை வந்து அணைத்துக்கொள்ளும். நீயும் நானும் ஒன்று என்பதை அப்போது நீ உணர்வாய், நண்பா!”

அமிர் குஸ்ரோ 15-ம் நூற்றாண்டு கவிஞர், இசைக் கலைஞர். வரலாற்றாசிரியர், சூஃபி அறிஞர். அன்பே அவர் படைப்புகளின் மையம்.


கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்