இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, 2014-ம் ஆண்டு கணக்குப்படி காடுகளில் 2,226 புலிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஓ, அப்படியா? ஐயோ பாவம் என்று உச்சுக்கொட்டுவதற்கு முன்னால் ஒரு நிமிஷம். உங்கள் வகுப்பில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்டால் உங்களால் பட்டென்று பதில் சொல்லிவிட முடியும். உங்கள் பள்ளியில் மொத்தம் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்? எத்தனை ஆசிரியர்கள்? உங்கள் ஊரில் அல்லது கிராமத்தில் எத்தனை பேர் வசிக்கிறார்கள்? இந்தியாவின் மக்கள் தொகை என்ன? நமக்குத் தெரியாவிட்டாலும் தெரிந்தவர்களிடம் கேட்டு இவற்றுக்கெல்லாம் சரியான விடைகளைச் சொல்லிவிட முடியும்.
புலிகளின் எண்ணிக்கையை எப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்? வருகை பதிவேட்டை எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போய், எல்லோரும் வரிசையாக வந்து நில்லுங்கள் என்று அதட்டுவார்களா? குட்டிப்புலி? உள்ளேன் ஐயா. சுட்டிப்புலி? உள்ளேன் ஐயா. தாத்தா புலி? இப்போதுதான் ஒரு மானைச் சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருக்கிறது, ஐயா. சரி, வெட்டுப்புலி எங்கே? நேற்று முழுக்க நீர்வீழ்ச்சியில் குளித்ததால் ஓய்வெடுக்கிறது ஐயா. இப்படி ஒவ்வொரு புலியையும் பெயர் சொல்லி அழைத்து தான் 2,226 என்னும் எண்ணைக் கண்டுபிடித்தார்களா? உள்ளேன் ஐயா என்று சமர்த்தாகப் புலி கையை உயர்த்துமா?
யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார்கள். ஒரு காட்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். எனக்கு இது, உனக்கு அது என்று தனித்தனியே பகுதிகளைப் பிரித்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழு. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். குனிந்த தலை நிமிராமல் தரையை ஆராய வேண்டும். புலியின் கால் தடம் தட்டுப்படுகிறதா? கீழே குனிந்து அதைப் படமெடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது அப்படியே காகிதத்தை வைத்து அச்சு எடுத்துக்கொண்டாலும் சரிதான். பிறகு அடுத்த காலடித் தடத்தைத் தேட வேண்டும். மதிய நேரத்தில் மரத்தடியில் சாய்ந்து கையில் கொண்டுபோயிருக்கும் இட்லியைச் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் காலடித் தடத்தைத் தேடவேண்டும்.
மாலை எல்லோரும் ஒன்றுகூடுவார்கள். தங்களிடமுள்ள காலடித் தடங்களை எல்லாம் ஒப்பிடுவார்கள். ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு விதமாக நடந்து செல்லும். எனவே ஒவ்வொரு காலடித் தடமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பகுதியில் எத்தனை புலிகள் நடந்து சென்றிருக்கின்றன என்று குறித்துக்கொள்வார்கள். குட்டிப் புலியும் வெட்டுப் புலியும் அங்கும் இங்கும் தாவிச் சண்டை போட்டுக்கொண்டால் அதையும் காலடித் தடத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம். ஒரே புலி பலமுறை குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டால் அதையும் கண்டுபிடித்துவிடுவார்கள். மானைத் துரத்திக்கொண்டு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஒரு புலி பாய்ந்து போனால் அதுவும் தெரிந்துவிடும். அந்த இன்னொரு பகுதியின் காலடித் தடங்களை இன்னொரு குழு பதிவு செய்துவிடும் அல்லவா? கவனமாக இப்படி ஒவ்வொரு காலடித் தடத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரே புலியைப் பலமுறை கணக்கிடும் தவறு குறைந்துவிடும்.
இன்னொரு வழியையும் கண்டுபிடித்தார்கள். மரம், மலை, பொந்து, சந்து என்று காட்டில் பல இடங்களில் கேமராவைப் பொருத்திவிடவேண்டும். அந்தக் கேமரா ஒரு சிறு அசைவு இருந்தாலும் கண்டுபிடித்து ‘க்ளிக்’ என்று படம் பிடித்துவிடும். மனிதர்களைப் போலல்லாமல் பகல், இரவு என்று இருபத்து நான்கு மணி நேரமும் கொட்டக் கொட்ட விழித்திருக்கும். இட்லியும் தேவைப்படாது. புலி மட்டுமல்ல நரி, ஓநாய், சிங்கம், மான் என்று தன் முன்னால் எது வந்தாலும், எது அசைந்தாலும் கேமரா பார்த்துக்கொள்ளும். அவ்வப்போது கேமராவி லிருந்து படங்களைச் சேகரித்துக் கொள்வார்கள்.
ஏற்கெனவே பார்த்ததைப்போல் படங்களைக் கவனமாக ஒப்பிடுவார்கள். நம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விரல் ரேகை இருப்பதுபோல் ஒவ்வொரு புலிக்கும் உடலில் ஒவ்வொருவிதமான கோடுகள் இருக்கும். எனவே, சுலபமாகக் கணக்கு போட முடியும். நடு ராத்திரியில் தாத்தா புலி எதை வாயில் போட்டு மென்றுகொண்டிருக்கிறது? நமக்கு வேலை வைத்துவிட்டு இந்தக் குட்டிப்புலி எவ்வளவு ஒய்யாரமாகத் தூங்கி வழிந்துகொண்டிருக்கிறது பாருங்கள். அது சரி, இந்தச் சுட்டி ஏன் அடிக்கடி பல்லைக் காட்டிக்கொண்டு சிரிக்கிறது? ஐயோ, இந்த மான் கொஞ்சம் தள்ளிப் போய் துள்ளக் கூடாதா? இப்படி வீடியோவைப் பார்த்துக் கதை பேசியபடி ஒவ்வொரு புலியையும் அடையாளம் கண்டு கணக்குப் போடுவார்கள்.
இன்னும் சில வழிகளும் இருக்கின்றன. புலி எங்காவது கீறியிருக்கிறதா என்று சிலர் மரங்களை ஆராய்வார்கள். சிலர் புலி கடித்துப் போட்ட மாமிசத்தை ஆராய்வார்கள். சிலர் மோப்ப நாய்களை அழைத்துச் சென்று புலியைத் தேடுவார்கள். இப்படியெல்லாம் செய்து கணக்கு போட்டுப் பார்த்துதான் இத்தனை புலிகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மற்றபடி அவர்கள் சொல்வது துல்லியமான கணக்கு அல்ல. கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின்போது கிடைத்த எண்ணிக்கை அது. அதற்குப் பிறகு சில பாப்பா புலிகள் பிறந்திருக்கலாம். அந்தக் கணக்கை அடுத்த குழுதான் காட்டுக்குச் சென்று கண்டுபிடிக்க வேண்டும். இப்படிக் காட்டில் அலைந்து திரிந்து எண்ணுபவர்கள் நிஜமாகவே கணக்கில் பெரிய புலியாகத்தான் இருப்பார்கள் இல்லையா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago