கதை: புதைத்த பல் முளைக்குமா?

By கன்னிக்கோவில் ராஜா

கொன்றை வனத்தில் சிங்கராஜா, வெகு சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அன்று அவரைக் காண, செண்பக வனத்தில் இருந்து அவருடைய நண்பர் புலி வந்திருந்தார்.

“வாருங்கள் புலியாரே! பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. எப்படி இருக்கிறீர்?” என்று வரவேற்று நலம் விசாரித்தார் சிங்கராஜா.

“நான் நன்றாக இருக்கிறேன் சிங்கராஜா. உங்களின் சிறப்பான ஆட்சி, எங்கள் செண்பக வனம் முழுவதும் எதிரொலிக்கிறது. எங்கள் அரசர் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இந்தப் பழங்களையும் கொடுக்கச் சொன்னார்” என்று தான் கொண்டு வந்திருந்த விளாம்பழங்களைக் கொடுத்தார் புலியார்?

“புலியாரே, சிங்கராஜா அசைவப் பிரியர் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவருக்குப் பழங்களைக் கொண்டுவந்து கொடுக்கிறீரே!” என்று கேலி செய்தார் நரியார்.

“நரியாரே, ஒருவர் அன்போடு தரும் பொருட்களை இப்படி நாம் குறைகூறுவது சரியல்ல” என்று எச்சரிக்கை செய்தார் சிங்கராஜா.

“நீங்களும் புலியாரும் என்னை மன்னியுங்கள்” என்றார் நரியார்.

“அரசே! இந்த விளாம்பழங்கள் மலையில் விளைந்தவை. மிகவும் ருசியாக இருக்கும். இதனுடன் தேன் கலந்து உண்டால் இன்னும் சுவை கூடும்“ என்றார் புலியார்.

“என்னது தேனா?” என்று வாயைப் பிளந்தார் அருகில் இருந்த கரடியார்.

“தேன் என்றாலே கரடியாருக்கு நாக்கில் எச்சில் ஊறிவிடுமே” என்று கிண்டல் செய்தார் குரங்கார்.

எல்லோருக்கும் பழம் கொடுத்தார் புலியார்.

சிங்கராஜா ஒரு பழத்தை எடுத்துக் கடித்தார். பழம் கல்போல் இருந்தது. ‘என்ன இது! இவ்வளவு உறுதியாக இருக்கிறதே... மற்றவர்களுக்கு எதிரில் இந்தப் பழத்தைக் கடிக்க முடியாவிட்டால் நன்றாக இருக்காது’ என்று நினைத்த சிங்கராஜா, தன் பலம் முழுவதும் செலுத்திப் பழத்தைக் கடித்தார்.

“ஆஆஆஆ” என்ற ஆலறலுடன் வாயைப் பிளந்தார் சிங்கராஜா.

“ஐயையோ! அரசருக்கு ஏதோ ஆகிவிட்டது. வாய் முழுவதும் ரத்தம்...” என்று கத்திக்கொண்டே வேகமாக சிங்கராஜாவின் அருகில் சென்றார் நரியார்.

“இந்தப் பழத்தால் என் சிங்கப்பல் உடைந்துவிட்டது” என்று வலியுடன் சொன்ன சிங்கராஜாவின் கையில் உடைந்த பல் இருந்தது.

இதைக் கவனித்த நரியார், “ஐயையோ… அரசருக்கு அந்த அழகான சிங்கப்பல் உடைந்துவிட்டதே… இனி நீங்கள் ஓட்டைப் பல் ராஜா என்று அழைக்கப்படுவீர்களே” என்று வருத்தப்பட்டார் நரியார்.

“அரசே, கொய்யா, சப்போட்டா போன்றவற்றை அப்படியே சாப்பிடலாம். இது விளாம்பழம். பற்களால் கடிக்க முடியாது. உடைத்துதான் சாப்பிட முடியும். நான் முன்னரே சொல்லியிருந்தால் உங்கள் பல் உடைந்திருக்காது. என்னை மன்னியுங்கள்” என்றார் புலியார்.

“அட, விடுங்க புலியாரே! மன்னிப்பெல்லாம் எதற்கு? உங்கள் மேல் வருத்தமில்லை. எனக்குத்தான் இதுநாள்வரை இந்தப் பழத்தை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லை. வாய்தான் கொஞ்சம் வலிக்கிறது” என்றார் சிங்கராஜா.

“அரசே! அந்தப் பல்லை இப்படிக் கொடுங்கள். மண்ணில் புதைத்துவிடலாம்“ என்றார் நரியார்.

“எதற்காக அரசரின் பல்லை மண்ணில் புதைக்க வேண்டும்?” என்று கேட்டார் புலியார்.

“என்ன புலியாரே, இது தெரியாதா? பல்லை மண்ணில் புதைத்தால்தானே அது முளைவிட்டு, மரமாக மாறும். அப்போதுதானே அரசருக்கு மறுபடியும் பல் முளைக்கும்!”

நரியின் பேச்சைக் கேட்டுச் சிரித்த புலியார், “அரசே, விதையைப் புதைத்தால் அது முளைவிட்டு, செடியாகி, மரமாகும். அதேபோல் இந்தப் பல்லைப் புதைத்தால் அது செடியாகி, மரமாகும் என்பது மூடநம்பிக்கை. பல்லைப் புதைக்காவிட்டாலும் உங்களுக்கு அழகான, உறுதியான சிங்கப்பல் முளைக்கும் கவலையை விடுங்கள்” என்றார்.

“ஆமாம், புலியார் சொல்வது சரிதான்” என்றார் மருத்துவர் கரடியார்.

“ஆஹா... என் சிங்கப்பல் உடைந்ததால் இன்று இரண்டு செய்திகளைத் தெரிந்துகொண்டேன். எந்தப் பழத்தை எப்படிச் சாப்பிடுவது என்றும், பல்லைப் புதைக்காவிட்டாலும் பல் முளைக்கும் என்றும் தெரிந்துகொண்டேன், புலியாருக்கு என் நன்றி” என்று ஓட்டைப்பல்லுடன் சிரித்தார் சிங்கராஜா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்