இடம் பொருள் மனிதர் விலங்கு: உள்ளுக்குள் ஒரு பூனைக்குட்டி!

By மருதன்

எழுதுவதற்கு பேனா இல்லை. இன்று மாலை வீட்டுக்குப் போகும்போது வழக்கம்போல் நேர் பாதையில் செல்லாமல், பூங்காவுக்கு அருகிலுள்ள சந்தில் திரும்பி அங்குள்ள கடையில் பேனா வாங்கிக்கொண்டுதான் வீட்டுக்குப் போக வேண்டும். பலமுறை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள். மதியம் சாப்பிடும்போதுகூட பேனா பற்றி நன்றாக நினைவில் இருக்கிறது. மாலை நேரம். வீட்டுக்குப் புறப்பட வேண்டியதுதான். பேனா, பேனா என்றபடி நடக்கத் தொடங்குகிறீர்கள். பூங்கா வருகிறது. அவ்வளவுதான், நீங்கள் பாட்டுக்கு நேராக நடந்து வீட்டுக்குப் போய்விடுகிறீர்கள்.

இது எல்லோருக்கும் நடப்பதுதான். இயல்புதான். ஆனால் ஏன் எல்லோருக்கும் இப்படி நடக்கிறது என்று தெரியுமா? என் மூளை பேனாவை நினைவில் வைத்திருந்தும் என் கால்கள் ஏன் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டன?

சுமார் 150 ஆண்டுகளுக்கு   முன்பு சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் என்பவர் ஒரு கப்பலில் சென்றுகொண்டிருந்தார். திடீரென்று அவருடைய கைக்கடிகாரத்தைக் காணவில்லை. நடுக்கடலில் வேறு யார் வருவார்கள்? எனவே கப்பலில் உள்ள யாரோ ஒருவர்தான் திருடியிருக்க வேண்டும் என்று தெரிந்தது. அவருடைய அறைக்குள் கப்பல் பணியாளர்கள் மட்டுமே நுழைய முடியும். எனவே, அவர்களில் ஒருவர்தான் குற்றவாளி. ஆனால் யார்?

எல்லாப் பணியாளர்களையும் வரிசையாக நிற்கவைத்து ஒவ்வொருவரையும் விசாரித்தார் பியர்ஸ். என்னது தங்கமா, கடிகாரமா, நானா என்று அனைவரும் மறுத்துவிட்டார்கள். ஆனால் பியர்ஸ் விடவில்லை. ஒவ்வொருவருடைய முகமாக உற்றுப் பார்த்தபடியே நடை போட்டார். சில நிமிடங்கள்தான். சட்டென்று ஒருவரைப் பார்த்தார். நீதான் என் கடிகாரத்தை எடுத்தாய், சரியா?  “அந்தப் பணியாளர் கோபத்துடன் கத்திவிட்டார். என் முகத்தில் திருடன் என்று எழுதியிருக்கிறதா? எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைக் குற்றம் சாட்டுவீர்கள்? உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?”

பியர்ஸால் பதிலளிக்க முடியவில்லை. எனவே, அவரை விட்டுவிட்டார். மறுநாள் கப்பல் கரை ஒதுங்கியது. பியர்ஸ் உடனடியாக ஒரு துப்பறியும் நிபுணரை அணுகினார். அந்த நிபுணர் மறுநாளே கடிகாரத்தை ஓர் அடகுக் கடையில் கண்டுபிடித்துவிட்டார். ஆனால், பியர்ஸ் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. எனக்குத் தேவை கடிகாரம் அல்ல. அதை யார் திருடிச் சென்று விற்றது என்று தெரிய வேண்டும் என்றார்.

துப்பறியும் நிபுணர் கடைக்காரரிடம் சென்று, அவர் சொன்ன அடையாளங்களைக் குறித்துக்கொண்டுவந்து பியர்ஸிடம் கொடுத்தார். அதைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தார் பியர்ஸ். இவர்தான், இவர்தான்! அன்றே என் உள்மனம் சரியாகச் சொல்லிவிட்டது!

வேறு யாராவது இப்படிச் சொல்லியிருந்தால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பியர்ஸ் சாதாரணமானவரா? உலகப் புகழ்பெற்ற மேதை, ஆராய்ச்சியாளர். வேதியியல் துறையின் வரலாற்றை 11 வயதில் எழுதி முடித்தவர். 12 வயதில் தனக்கென்று தனியே ஓர் ஆய்வுக்கூடத்தை உருவாக்கிக்கொண்டவர். அவர் நிச்சயம் ஏதோ ஓர் அறிவியல் வழிமுறையைக் கடைபிடித்துதான் குற்றவாளியைக் கண்டுபிடித்திருப்பார் இல்லையா? பியர்ஸ், தயவு செய்து எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள். எப்படிச் சரியாக குற்றவாளியைக் கண்டுபிடித்தீர்கள்?

உண்மையில் பியர்ஸுக்கும் இது விசித்திரமாகவே இருந்தது. முன்பின் தெரியாத ஒருவரை என் உள்மனம் எப்படிக் குற்றவாளி என்று துல்லியமாகச் சொன்னது? ஆய்வாளர் அல்லவா? உடனே நண்பரை வரவழைத்து அவரிடம் இரண்டு இரும்புக் குண்டுகளைக் கொடுத்தார். பார்ப்பதற்கு இரண்டுமே ஒன்றுபோல் இருந்தன. ஆனால் ஒரு குண்டின் எடை இன்னொன்றைவிடக் கொஞ்சம் அதிகம்.

கொஞ்சம் என்றால் ரொம்பவே கொஞ்சம். வெறுமனே தூக்கிப் பார்த்து கண்டுபிடித்துவிட முடியாது. இருந்தாலும் பியர்ஸ் விடவில்லை. நண்பரின் கைகளில் இரண்டையும் வைத்துவிட்டு இந்த இரண்டில் எது சற்றே கனமான குண்டு என்று கேட்டார். இப்படி ஒருமுறை இரண்டு முறையல்ல, பலமுறை பலவிதமான குண்டுகளைக் கொடுத்துப் பரிசோதித்தார். கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் நண்பர் எடை அதிகமான குண்டை மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்துவிட்டார்.

பியர்ஸுக்கு ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. புரியாததுபோலவும் இருந்தது. மேலும் ஆய்வைத் தீவிரமாக்கினார். அவர் மட்டுமல்ல, அவருக்குப் பிறகு வந்தவர்களும் இந்த விசித்திரத்தை ஆராயத் தொடங்கினார்கள். ஒரு நாள் விடை கிடைத்தது. உள்மனம், உள்ளுணர்வு என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் ஓர் உணர்வு இருக்கிறது.

ஒரு பூனைக்குட்டியைப் போல் அது உங்களுக்குள் பதுங்கியிருக்கிறது. அதை நீங்கள் வளர்ப்பதில்லை. நீங்கள் அதற்கு எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. அது தானாகவே வளர்கிறது. தானாகவே சிந்திக்கிறது. தானாகவே எல்லாவற்றையும் கவனிக்கிறது. தானாகவே முடிவெடுக்கிறது.

நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு ஆலோசனைகளையும் அளிக்கிறது: இந்த ஓட்டலில் இனி சாப்பிடாதே. அவரைப் பார்த்தால் நல்லவராக இருக்கிறார், பயமில்லாமல் பேசு. ஐயோ, அவர் பக்கமே போகாதே, அவர் சரியில்லை. இது வேண்டாம், நீல நிற ஆடைதான் உனக்கு நன்றாக இருக்கும். கணக்கு வாத்தியார் கோபமாக இருக்கார், கிட்டே போய்விடாதே. இதுதான் சரியான நேரம், அப்பாவிடம் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுக்கச் சொல்.

அதோ, அவன்தான் உன் கடிகாரத்தைத் திருடியிருக்க வேண்டும் என்று பியர்ஸை எச்சரித்தது அவருக்குள் இருந்த பூனைதான். உன் வலது கையில் உள்ள குண்டின் எடை கொஞ்சம் கூடுதல் என்று நண்பருக்குச் சொல்லிக் கொடுத்ததும் பூனைதான். இந்தப் பூனை எப்போது என்ன செய்யும் என்று உங்களுக்கே தெரியாது.

ஆனால், பெரும்பாலும் நல்ல ஆலோசனைகளையே தரும். நல்லவிதமாகவே உங்களை வழிநடத்தும். எப்போதாவது கொஞ்சம் குறும்புத்தனமும் செய்யும். பேனா, பேனா என்று உங்கள் மூளை பலமுறை கத்தினாலும், அது கிடக்கிறது நீ வீட்டுக்குப் போ என்று உங்கள் கால்களுக்கு உத்தரவு போட்டுவிடும். பூனைக்குட்டி எப்போது செல்லமாக வாலை ஆட்டும், எப்போது குழையும், எப்போது குறும்பு செய்யும் என்று நமக்கே தெரியாது.

அதற்காக ஏன் கணக்கு சரியாகப் போடவில்லை என்று ஆசிரியர் கேட்டால், எனக்குத் தெரியாது மியாவ்தான் இப்படிச் செய்தது என்று சொல்லி தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். அது உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறது!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்