சென்னைச் சிறுவனின் கின்னஸ் சாதனை

லிம்போஸ்கேட்டிங்கில் சாதனைகள் பல புரிந்துவரும் 8 வயது மெட்வின் தேவா பற்றி ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் மாயா பஜார் பகுதியில் எழுதியிருந்தோம். அந்தக் குட்டிச் சாதனையாளர், இப்போது உலகச் சாதனையாளராக மாறியிருக்கிறார். ஆமாம், அண்மையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ராஜூ- ஜாஸ்மின் ஜூடித் தம்பதியின் மகனான மெட்வின் தேவா சிஎஸ்ஐ எட்வர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவருகிறார். சிறு வயதியே ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வமாக விளையாடிப் பல பரிசுகளையும் பதக்கங்களையும் குவித்திருக்கிறார் இந்தக் குட்டிப் பையன்.

நீங்க நினைப்பது போல காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அப்படியே ஸ்கேடிங் செய்வது இல்லை இந்த விளையாட்டு. தாழ்வான உயரத்தில் படுத்த மாதிரி ஸ்கேட்டிங் செய்வதுதான் ‘லிம்போ ஸ்கேட்டிங்’. இதில்தான் நிலத்தில் இருந்து 9 அங்குலம் தாழ்வான உயரத்தில் 45 மீட்டர் தூரத்தைக் கடந்து புதிய கின்னஸ் சாதனையைப் புரிந்துள்ளார் மெட்வின் தேவா.

இதற்கு முன்பு கர்நாடாகாவைச் சேர்ந்த ரோஹன் கோக்னே என்ற 12 வயது சிறுவன் 10 அங்குலம் தாழ்வான உயரத்தில் 10 மீட்டர் கடந்ததே சாதனையாக இருந்தது. இப்போது அதை மெட்வின் தேவா முறியடித்துள்ளார். இளம் கன்று பயமறியாது என்று சொல்வதைப் போல, 100 மீட்டர் தூரத்தைக் கடந்து சாதனை புரிய ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறார் இந்தக் குட்டி கின்னஸ் சாதனையாளர்.

வாழ்த்துகள் மெட்வின் தேவா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE