இடம் பொருள் மனிதர் விலங்கு: என்ன என்றால் என்ன?

By மருதன்

‘‘அட, எத்தனை அற்புதமான கண்டுபிடிப்பு என்று உங்களை வியக்க வைத்த பொருள் எது?” இந்தக் கேள்வியை ஒருநாள் நான்கு பேரிடம் கேட்டார்கள். ‘‘சக்கரம் மட்டும் கண்டுபிடிக்கப்படாவிட்டால் இந்த உலகம் முன்னேறியிருக்காது” என்றார் பொறியியல் நிபுணர். ‘‘நெருப்பை நாம் கண்டுபிடிக்காமல் போயிருந்தால் சமைத்திருக்க முடியுமா, சாப்பிட்டிருக்க முடியுமா?” என்றார் மருத்துவர். ‘‘உலகம் எண்களால் ஆனது. கணிதம் இல்லாமல் நாம் இல்லை” என்றார் பேராசிரியர்.

நான்காவது நபர் நீண்டநேரம் யோசித்துவிட்டு நிதானமாகப் பதிலளித்தார். ‘‘கொதிக்கும் நீரைக் கொட்டி வைத்தால் நீண்ட நேரம் கதகதப்பாக வைத்திருக்கிறது. அதே குளிர்ந்த நீரைக் கொட்டினால் அதையும் ஜில்லென்று வைத்திருக்கிறது. நாம் என்ன கொட்டுகிறோம் என்று அந்தச் சின்னஞ்சிறிய தெர்மோ பிளாஸ்குக்கு எப்படித் தெரியும்? அடடா, இன்றுவரை நான் அதை நினைத்து நினைத்து வியந்துகொண்டிருக்கிறேன்.”

அவர் ஒரு தத்துவஞானி என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. இரண்டும் இரண்டும் நான்கு என்று நாம் சொன்னால், அவர் கேட்க மாட்டார். இரண்டையும் இரண்டையும் ஏன் நீங்கள் சேர்க்கிறீர்கள்? முதல் இரண்டும் இரண்டாவது இரண்டும் தனித்தனியே அமைதியாக இருந்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் இருவரும் ஒன்று சேரவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?

சரி, அப்படியே சேர்கிறது என்றே வைத்துக்கொள்வோம். நீங்களும் நானும் இணைந்து நண்பர்கள் ஆனாலும் நாம் தனித்தனியே இருக்கிறோம் அல்லவா? அப்படி அந்த இரண்டு இரண்டுகளும் சேர்ந்த பிறகும் தனித்தனி இரண்டுகளாக நீடிக்கலாம் அல்லவா? ஒருவேளை, நீங்கள் சொல்வதைப்போல் இரண்டையும் இரண்டையும் சேர்த்து நான்கை உருவாக்கி விடுகிறோம் என்றே வைத்துக்கொண்டாலும், அந்த நான்கு என்பது இரண்டு இரண்டுகளால் ஆனது என்பதால், அந்த இரண்டும் இரண்டும் சேர்ந்திருந்தாலும் தனித்தனியே இரண்டு இரண்டுகளாகத்தான் நிற்கின்றன என்பது உங்களுக்குப் புரிகிறதா? அல்லது...

ஐயோ இரண்டும் இரண்டும் நான்கே அல்ல என்று நீங்கள் அலறும்வரை அவர் ஓயமாட்டார். ஒரு பூனைக்குட்டியைப் பார்த்தால் தத்துவஞானி என்ன செய்வார் தெரியுமா?  ‘ஐ, எத்தனை அழகு!’ என்று கொஞ்ச மாட்டார்.

‘‘நான் ஒரு மனிதன் என்பது எனக்குத் தெரியும். நீ ஒரு பூனை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், உனக்கோ நான் ஒரு மனிதன் என்பதும் தெரியாது. நீ ஒரு பூனை என்பதும் தெரியாது. உனக்கு இந்த இரண்டுமே தெரியாது என்பதாவது உனக்குத் தெரியுமா, தெரியாதா?” என்று கேட்பார். மியாவ் என்று கத்தியபடி அது ஓடிவிடும்.

நமக்கு வராத சந்தேகம் எல்லாம் அவருக்கு வரும். உண்மையிலேயே நாற்காலி என்று ஒன்று இருக்கிறதா? அல்லது அப்படி ஒன்று இருப்பதாக நானே நினைத்துக்கொள்கிறேனா? நான் சிந்திக்கிறேன். எனவே, நான் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் சிந்திக்கிறீர்கள். எனவே நான் இருப்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இருப்பதும் உங்களுக்குத் தெரியும். நாற்காலியால் நம்மைப்போல் சிந்திக்க முடியாது.

அப்படியானால் நாற்காலி என்ற ஒன்று இருப்பது நாற்காலிக்கே தெரியாது. நீங்களும் நானும்தான் நாற்காலி இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம். அப்படியானால் இதன் பொருள் என்ன? நாற்காலி என்பது என் மனதிலும் உங்கள் மனதிலும்தான் இருக்கிறது. வெளியில் அல்ல. இதன் பொருள் என்ன? நாற்காலி என்று ஒன்று கிடையவே கிடையாது என்பதுதான்.

சரி, படுத்து தூங்கிவிடுவார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. நாற்காலி என்பது இல்லை என்றால் பேனாவும் இல்லை, பென்சிலும் இல்லை, காகிதமும் இல்லை. வீடு என்றாவது ஒன்று இருக்குமா? அதுவும் இல்லை. அப்படியானால் நான் இப்போது எப்படி வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்?

எப்படிக் காகிதத்தில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்? எப்படி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன்? அதைவிட முக்கியமாக எப்படிக் கட்டிலில் படுத்து தூங்கப் போகிறேன்? அப்படி என்றால் இந்தப் பொருள்கள் எல்லாம் உண்மையில் இருக்கின்றனவா? பூனைக்குட்டி நிஜமாகவே இருக்கிறதா? மியாவ் என்று அது கத்தியது உண்மைதானா?

idam 2jpg

விளையாட்டு அல்ல. நான் வீட்டைவிட்டு வெளியில் போனால் என் வீட்டிலுள்ள நாற்காலி இருக்குமா மறைந்துவிடுமா என்று தத்துவ ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார் ஜார்ஜ் பெர்கெலி என்பவர். சாக்ரடீஸுக்கு எப்படிப்பட்ட சந்தேகங்கள் இருந்தன தெரியுமா? உண்மை என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? கறுப்பா, சிவப்பா? கறுப்பு என்றால் என்ன? வாழ்க்கை என்றால் என்ன? மனிதன் என்றால் என்ன? யோசிப்பது என்றால் என்ன? தூங்குவது என்றால் என்ன? கேள்வி என்றால் என்ன? என்ன என்றால் என்ன? என்றால், என்றால் என்ன?

தத்துவம் பயில்பவர்களின் முழுநாள் வேலையே இப்படி எல்லாம் யோசிப்பதுதான். கன்ஃபூஷியஸ் என்றே பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் இருந்தார், தெரியுமல்லவா? இதெல்லாம் ஒரு விஷயமா என்று எதை எல்லாம் நாம் நினைக்கிறோமோ அதை மாபெரும் புதிர்களாக அவர்கள் நினைத்து மண்டையை உடைத்துக்கொள்வார்கள். அதேநேரம், நமக்கு மயக்கம் வரும் விஷயங்களை எல்லாம் அவர்கள் ‘ஃப்பூ’ என்று ஊதித் தள்ளிவிடுவார்கள்.

நான்கு தத்துவஞானிகள் ஒன்று சேர்ந்தால் என்னாகும்? அப்படி ஒருமுறை நடந்தது. ஒரு வயல்வெளியில் சில ஆடுகள் புல் மேய்ந்துகொண்டிருந்தன. ஆடுகள் கறுப்பாக இருக்கின்றன என்றார் முதல் தத்துவஞானி. அப்படி அவசரப்பட்டுச் சொல்ல முடியாது. இந்த ஊரில் உள்ள ஆடுகள் கறுப்பாக இருக்கின்றன என்றார் இரண்டாவது நபர். இரண்டு பேர் சொல்வதும் தப்பு. இந்த ஊரில் இப்போது நாம் பார்க்கும் ஆடுகள் மட்டும் கறுப்பாக இருக்கின்றன.

மற்ற ஆடுகள் எப்படி இருக்குமோ யார் கண்டது என்றார் மூன்றாவது நபர். நான்காவது நபர், புன்னகை செய்தார். மூன்று பேரும் தப்புத் தப்பாகச் சொல்கிறீர்கள். இந்த ஊரில், இந்த ஆடுகள் இங்கிருந்து பார்க்கும்போது ஒரு பக்கம் கறுப்பாக இருக்கின்றன. அவற்றின் இன்னொரு பக்கம் என்ன நிறத்தில் இருக்கும் என்று நாம் எப்படி முடிவு செய்ய முடியும்?

அவ்வளவுதான், அந்த ஆடுகள் ஒவ்வொன்றும் துள்ளிக் குதித்து அங்கிருந்து ஓடிவிட்டன!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்