இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது யாரால் என்று கேட்டால் மளமளவென்று பல தலைவர்களின் பெயர்களை நம்மால் சொல்ல முடியும். ஆனால் அந்தச் சுதந்திரத்தைக் கொடுத்தது யார் என்று கேட்டால் யோசிப்போம். எங்கள் நாட்டை நாங்களே ஆண்டுகொள்கிறோம், பிரிட்டனின் ஆட்சி எங்களுக்குத் தேவையில்லை என்று பல இந்தியர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள், உயிரைக் கொடுத்துப் பேராடியிருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றி நாம் படித்திருக்கிறோம். ஆனால், இந்தியர்கள் சொல்வது சரிதான். நாம் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடுவோம். இந்தியர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டும் என்று சொல்லி, சுதந்திரத்தை நமக்குக் கொடுத்தவர் யார்?
பிரிட்டன் என்றால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வரும் பிரபலம், வின்ஸ்டன் சர்ச்சில். ஆனால், அவரைப் பொறுத்தவரை இந்தியாவை பிரிட்டனால் மட்டுமே ஆள முடியும். இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பதா? சுதந்திரம் என்றால் என்ன என்றாவது அவர்களுக்குத் தெரியுமா? ஒழுங்காக எழுதப் படிக்கக்கூட அவர்களுக்குத் தெரியாது. குடிசை வீடுகளிலும் அசுத்தமான இடங்களிலும் வாழ்கிறார்கள்.
சுத்தம் என்றால் என்ன, நாகரிகம் என்றால் என்ன, கல்வி என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்பதை எல்லாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்களே நாம்தான். நாம் செய்துள்ள உதவிகளுக்கு இந்தியர்கள் காலம் காலமாக நமக்கு நன்றிக்கடன் அல்லவா செலுத்த வேண்டும்? அதை விட்டுவிட்டு, சுதந்திரம் கொடு, சுண்டைக்காய் கொடு என்று சின்னப்பிள்ளைபோல் அவர்கள் கேட்பதை எப்படி நாம் அனுமதிப்பது?
சர்ச்சிலைப்போலவே பிரிட்டனின் பிரதமராக இருந்தவர் கிளமெண்ட் அட்லீ. ஆனால், எல்லா வகையிலும் சர்ச்சிலுக்கு நேர் எதிரானவர். அடங்கி, ஒடுங்கிதான் இருப்பார். அவர் அலுவலகத்துக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. வாயை அதிகம் திறந்துவிட்டால் வலிக்குமோ என்பதுபோல் மென்மையாகப் பூனைபோல் பேசுவார்.
ஒன்றரைப் பக்கத்துக்கு யாராவது கேள்வி கேட்டால், ஆம் அல்லது இல்லை அல்லது தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் அளிப்பார். இன்னொரு வார்த்தை அவரிடமிருந்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
சர்ச்சிலோ ஒரு வார்த்தை கேட்டால் ஒன்பது பக்கங்களுக்கு முழங்குவார். தாட் பூட் என்று ஊரே அதிரும்படி வலம் வருவார். ஒரே அதட்டல் உருட்டல்தான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். சிங்கமே பயப்படும் அளவுக்குச் சீறுவார். ஆர்ப்பாட்டமாகச் சிரிப்பார். எல்லோரையும் கிண்டல் அடிப்பார்.
என்னது காந்தியா? அவருக்கு முழுமையாக ஆடை அணிந்துகொள்ளவே தெரியாதே, ஹாஹா! அட்லீ எனக்குப் போட்டியா? என் பக்கத்தில் வந்து சும்மா ஒரு நிமிடம் நடுங்காமல் நிற்கச் சொல்லுங்களேன், பார்ப்போம்!
அட்லீ சிறு வயதிலிருந்தே பணிவானவர். ஒரு மாலை வேளை அவர் தன் வீட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு சிறுமி, நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று அட்லீயிடம் கேட்டார். நான் தேநீர் அருந்துவதற்காக வீட்டுக்குப் போகிறேன் என்றார் அட்லீ.
ஓ, நானும் வீட்டுக்குத்தான் போகிறேன். எனக்கும் தேநீர் பிடிக்கும். ஆனால் வீட்டில் தேநீர் இருக்கிறதா என்று தெரியவில்லை என்றார் அந்தச் சிறுமி. இந்தச் சம்பவம் அட்லீக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது.
1928-ம் ஆண்டு சைமன் கமிஷன் அமைக்கப்பட்டபோது அதில் இணைந்து அட்லீயும் இந்தியாவுக்கு வந்தார். இந்தியர்கள் ஏன் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்கிறார்கள், அவர்களுடைய தேவை என்ன என்பதை நேரில் கண்டு தெரிந்துகொண்டார் அட்லீ.
சர்ச்சிலுக்கு பிரிட்டன்தான் உலகிலேயே ஒரே நாகரிக நாடு, ஒரே வளமான நாடு. அப்படி எல்லாம் இல்லை, தேநீர்கூட கிடைக்காத குழந்தைகள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள் என்பார் அட்லீ. இந்தியர்களும் ஆப்பிரிக்கர்களும் காட்டுமிராண்டிகள். பிரிட்டனால் ஆளப்படுவதுதான் அவர்களுக்குக் கிடைத்த ஒரே நன்மை என்று அடித்துச் சொல்வார் சர்ச்சில். யாரும் யாருக்கும் அடிமைகளாக இருக்க வேண்டியதில்லை.
இந்தியாவை இந்தியர்களும் ஆப்பிரிக்காவை ஆப்பிரிக்கர்களும் ஆண்டுகொள்ளட்டும். நாம் பிரிட்டனின் கதையை மட்டும் பார்ப்போம் என்பார் அட்லீ. நம்மை இந்தியா எதிர்க்கிறதா, அவர்களை ஒரு கை பார்த்துவிடுவோம் என்று சட்டையை மடித்துவிட்டுக்கொள்வார் சர்ச்சில். அவர்களுடன் கை குலுக்குவோம், அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்போம் என்பார் அட்லீ.
பிரிட்டன் வலிமையானது. இந்தியா வலுவற்றது. எனவே இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டு இருக்க வேண்டும். நான் வலிமை யானவன். அட்லீ நோஞ்சான். எனவே, பிரிட்டனை நான்தான் ஆளவேண்டும் என்று உறுமினார் சர்ச்சில். ஆனால், வரலாறு வேறு மாதிரியாகச் சிந்தித்தது. 1945-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சர்ச்சிலைத் தோற்கடித்து, பிரிட்டனின் பிரதமரானார் அட்லீ.
1951வரை அவர்தான் பிரிட்டனின் பிரதமர். அவருக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பு அதுதான். என்ன நடந்தாலும் சரி என்று 1947-ம் ஆண்டு அட்லீ இந்தியாவுக்குச் சுதந்தரத்தை வழங்கினார். இந்தியா மட்டுமின்றி, பர்மாவும் இலங்கையும் விடுதலை பெறுவதற்கும் அவரே காரணமாக இருந்தார்.
அட்லீக்கு முன்பு பிரதமராக இருந்தவர் சர்ச்சில். அட்லீக்குப் பிறகு பிரதமர் ஆனவரும் சர்ச்சில்தான். இடையில் ஒரே ஒருமுறை நமக்காகவே சர்ச்சிலை வரலாறு தோற்கடித்தது. என் பக்கத்தில்கூட நிற்க முடியாது என்று ஆர்ப்பரித்த சர்ச்சிலை அமைதியாக வீழ்த்தினார் அட்லீ.
புலிபோல் உறுமிய சர்ச்சில் அல்ல, பூனை போன்ற அட்லீதான் நமக்குத் தேவைப்பட்டதை அளித்தார். சர்ச்சிலின் வலிமையான கரங்களிலிருந்து இந்தியாவைப் பறித்து, சுதந்திரமாகத் தவழவிட்டவர் அவர்தான். அப்படியானால் சர்ச்சிலைவிட நீங்கள்தான் பலசாலியா என்று கேட்டால் அட்லீ என்ன சொல்வார் தெரியுமா?
“ஆயிரம் சர்ச்சில்கள் வந்தாலும் சுதந்திரத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, சுதந்திரம்தான் இருப்பதிலேயே வலுவானது.”
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago