கண்டுபிடிப்புகளின் கதை: சிப்ஸ்

By எஸ். சுஜாதா

ஒரு காலத்தில் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களின் விருப்பமான சிற்றுண்டியாக இருந்த உருளைக் கிழங்கு சிப்ஸ், இன்று உலக மக்களின் விருப்பத்துக்கு உரிய சிற்றுண்டியாக மாறிவிட்டது. தனியாகவும் உணவுடன் சேர்த்தும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

உருளைக் கிழங்கு சிப்ஸின் ருசியைப் போலவே அது கண்டுபிடிக்கப்பட்ட கதையும் சுவையானது. 1817-ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் இசைக் கலைஞருமான வில்லியம் கிட்ச்னர், சமையல் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதில் உருளைக் கிழங்கு துண்டுகளை எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.

இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இந்தப் புத்தகம் அதிகமாக விற்பனையானது. உருளைக் கிழங்கின் தோலை நீக்கி, கால் அங்குல தடிமனில் உப்புச் சேர்த்துப் பொரிக்கப்பட்டன. 1824-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி ரான்டோல்ப், 1832-ம் ஆண்டு என்.கே.எம். லீ இருவருடைய சமையல் புத்தகங்கள் வெளிவந்தன. இவற்றிலும் பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்குகள் இடம்பெற்றன.

1853-ம் ஆண்டு ஆப்பிரிக்க அமெரிக்கப் பழங்குடியினரான ஜார்ஜ் க்ரம், ஓர் உணவகத்தில் சமையல் கலைஞராக வேலை செய்துவந்தார். வாடிக்கையாளர் ஒருவர், பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்கு வேண்டும் என்றார். அதைக் கொடுத்தபோது, அவருக்குப் பிடிக்கவில்லை. உடனே வேறு விதமாகச் செய்து கொடுக்கும்படி கேட்டார். மீண்டும் செய்து கொடுத்தார் ஜார்ஜ்.

georgejpgஜார்ஜ் க்ரம்

அதுவும் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அதனால் உருளைக் கிழங்கை மிக மிக மெல்லியதாகச் சீவி, அதைப் பொரித்து, உப்புத்தூள் சேர்த்துக் கொடுத்தார். அதைச் சுவைத்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். மிகவும் சுவையாக இருப்பதாகச் சொன்னார்கள். ஜார்ஜுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படித்தான் உருளைக் கிழங்கு சிப்ஸ் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

சரகோட்டா ஸ்பிரிங்ஸ் என்ற நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால், ‘சரகோட்டா சிப்ஸ்’ என்ற பெயரில் விற்பனைக்கு வந்தது. 1860-ம் ஆண்டு ஜார்ஜ், ‘க்ரம்ப்ஸ் ஹவுஸ்’ என்ற பெயரில் ஓர் உணவகத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு பாத்திரம் நிறைய உருளைக் கிழங்கு சிப்ஸ் வைக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்காக ஜார்ஜ் காப்புரிமை கோரவில்லை. அதற்கான எந்தப் பலனையும் அவர் அனுபவிக்கவே இல்லை.

மாட்டிறைச்சியும் சாசேஜையும் தயாரித்துக் கொண்டிருந்த டேனியல் டபிள்யூ மைக்செல், 1910-ம் ஆண்டு சரகோட்டா சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். இதுவே அமெரிக்காவின் மிகப் பழமையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்மித்ஸ் உருளைக் கிழங்கு சிப்ஸ் நிறுவனம், 1920-ம் ஆண்டு, காகிதப் பையில் சிப்ஸை விற்பனைக்குக் கொண்டுவந்தது. சீஸ், வெங்காயம், உப்பு, வினிகர் கலந்த சிப்ஸ் வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

காகிதத்தில் சிப்ஸ் எளிதாக நமுத்துவிடுவதால், அவற்றை டின்களில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். பிறகு மெழுகுத்தாள், பிளாஸ்டிக் தாள்களில் சிப்ஸ் பாக்கெட்கள் வெளிவந்தன.

இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு என்று பல்வேறு சுவைகளில் சிப்ஸ் வந்துவிட்டன. சிப்ஸை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் சோடியம் அளவு அதிகமாகி, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அளவோடு சாப்பிட்டால் பிரச்சினை இல்லை.

உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதில் கண்டுபிடித்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, எகிப்து, பிரேசில் நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனா, 8-வது இடத்தில் இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய கண்டுபிடிப்பு உலகப் புகழ் பெறும் என்று ஜார்ஜ் க்ரம் நினைத்திருக்க மாட்டார். இனி சிப்ஸ் சாப்பிடும்போது அவரை நினைத்துக்கொள்வோமா?

(கண்டுபிடிப்போம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்