‘‘வாருங்கள், இப்படி அமருங்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று அக்கறையோடு விசாரித்தார் மருத்துவர். நோயாளி நடுங்கும் குரலில் விவரித்தார்: “எனக்கு என்ன ஆகிவிட்டது என்றே தெரியவில்லை. இரண்டு நாட்களாக வாயிலிருந்து விநோதமான சத்தம் வருகிறது. நான் பாட்டுக்குச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். திடீரென்று வீடே அதிரும்படி என் வாய் சத்தம் போட ஆரம்பித்துவிட்டது.
இதென்னடா வம்பா போச்சே என்று எழுந்து கொஞ்ச தூரம் நடந்து பார்த்தேன். மீண்டும் சத்தம். சரி, படிக்கலாம் என்று உட்கார்ந்தேன். சத்தம். நாய்க் குட்டியோடு விளையாடிப் பார்த்தேன். எதுவுமே செய்யாமல் எதிரில் இருந்த சுவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ம்ஹூம், அந்தச் சத்தம் வந்துகொண்டே இருக்கிறது. ரொம்பக் கவலையாக இருக்கிறது” என்றார்.
மருத்துவர் யோசனையோடு நெற்றியைச் சுருக்கினார். “வாயை மூடிப் பார்த்தீர்களா?”
“பார்த்தேனே. அப்போதும் வருகிறது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சட்டென்று லொக் லொக் என்று சத்தமிட்டார். “பார்த்தீர்களா, பார்த்தீர்களா. இதைத்தான் சொன்னேன்.”
“ஓ… இது பயங்கரமாக இருக்கிறதே” என்ற மருத்துவர், நோயாளியின் வயிற்றை நன்றாக அமுக்கிப் பார்த்தார். பிறகு வயிற்றில் காதை வைத்து கேட்க முயன்றார். வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே எட்டிப் பார்த்தார். பிறகு திருப்தியுடன் சொன்னார்: “பயப்படாதீர்கள். உங்கள் வியாதி என்ன என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன். உங்களை ஒரு பொல்லாத பேய் பிடித்திருக்கிறது.
நீங்கள் சாப்பிட்ட ஏதோ ஒன்றுடன் கலந்து அது உள்ளே போய்விட்டது. இப்போதைக்கு உங்கள் வயிற்றில் உட்கார்ந்திருக்கிறது. அது போடும் சத்தம்தான் உங்கள் வாய் வழியாக வெளியில் வருகிறது. லொக் லொக் என்றால் பிசாசு மொழியில், ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று அர்த்தம்.”
“ஆ… ஐயோ” என்று அலறினார் நோயாளி. ”இப்போது நான் என்ன செய்வது? அந்தப் பேய் என்னைக் கடித்து விழுங்கி விடுமா?”
“நான் பார்க்காத நோய்களா? விரட்டாத பேய்களா? கவலைப்படாதீர்கள், சரி செய்துவிடலாம்” என்றபடி தனது சிகிச்சையை ஆரம்பித்தார் மருத்துவர். பக்கத்து அறையிலிருந்து வந்த உதவியாளர்கள், நோயாளியைக் கவனமாக அழைத்துச் சென்று படுக்க வைத்தார்கள். மருத்துவர் தன்னுடைய இரு கைகளையும் பரபரவென்று தேய்த்துக்கொண்டார். எங்கே என்னுடைய மருத்துவக் கருவிகள் என்று அவர் குரல் கொடுத்ததும், இன்னொரு உதவியாளர் ஒரு தட்டை எடுத்து வந்து படுக்கைக்கு அருகில் வைத்தார். அதில் சிறிய கத்தி, பெரிய கத்தி, சின்ன சுத்தியல், பெரிய சுத்தியல், இரும்புக் கம்பி, கயிறு உள்ளிட்ட பல பொருள்கள் இருந்தன.
“ஏய் பேய், இரு நீயா நானா என்று ஒரு கை பார்த்துவிடலாம்” என்று சவால் விட்டபடியே சிறிய சுத்தியலை எடுத்து நோயாளியின் வயிற்றில் ஒரே போடு போட்டார். அம்மா, அப்பா, தாத்தா என்றெல்லாம் நோயாளி கத்த, மருத்துவருக்கு ஒரே குஷியாகிவிட்டது.
“ஆ, மாட்டினாயா என்னிடம்? உன்னைக் கதற வைக்காமல் விடமாட்டேன் பேயே” என்றபடி இப்போது பெரிய சுத்தியலை எடுத்துக்கொண்டார் மருத்துவர். அலறியடித்தபடி அங்கிருந்து ஓடியது பேயா அல்லது நோயாளியா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
மருத்துவத் துறையின் பழங்கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் திகைப்பாகவும் பயமாகவும் இருக்கும். எகிப்து மருத்துவர் தன் நோயாளிக்குப் பரிந்துரை செய்யும் மருந்து எப்படி இருக்கும் தெரியுமா?
“உங்கள் உடல் வாணலியில் போட்டு வதக்கியதுபோல் கொதிக்கிறது. சூடு குறைய வேண்டுமானால் காலை ஒரு பல்லி வால், மதியம் ஒரு ஓணான் கால், மாலை ஒரு பிடி களிமண் ஆகியவற்றைப் பத்து நாள்கள் தவறாமல் உண்டு வாருங்கள், எல்லாம் சரியாகிவிடும்.” இன்னும் சிலர், காய்ச்சலைத் தணிக்கக் குளிர்ந்த தண்ணீரில் சில பொடிகளைத் தூவி, நோயாளியின் தலையில் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். “எனக்குச் சரியாகிவிட்டது, சரியாகிவிட்டது” என்று அவர் அலறும்வரை ஓயமாட்டார்கள்.
வாரம் ஒரு வெள்ளெலி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது வேறு சிலரின் நம்பிக்கை. அவர்கள் பேச்சைக் கேட்டுப் பலர் எலிகளைத் துரத்தித் துரத்திப் பிடித்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். உங்கள் உடலில் தேவைக்கு அதிகமாக ரத்தம் ஓடுகிறது, வாருங்கள் கொஞ்சம் கீறிவிடுகிறேன் என்று சொல்லி கையிலும் காலிலும் கத்தியால் கீறிய மருத்துவர்களும் இருந்தனர்.
இவர்கள்கூடப் பரவாயில்லை. சிலர் நோயாளியைப் படுக்க வைத்து மண்டையில் சிறிய ஓட்டையே போட்டுவிடுவார்கள். அந்த ஓட்டை வழியாக உடலில் உள்ள வியாதிகள் தப்பி ஓடிவிடுமாம்! பல் வலி வந்தால் கேட்க வேண்டியதே இல்லை. நிஜமாகவே பல்லைத் தட்டு தட்டு என்று தட்டி கையில் எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.
பலருக்கு நிஜமாகவே குழப்பம் வந்துவிடும். நோயா, சிகிச்சையா? எது அதிகத் தொல்லையாக இருக்கிறது? மருத்துவரா, பேயா? இருவரில் யாரைச் சகித்துக்கொள்வது சுலபம்? சிலர் வலி பொறுக்க முடியாமல் மருத்துவரிடம் ஓடுவார்கள். பலர் வலி பொறுக்க முடியாமல் மருத்துவரிடமிருந்து தப்பி ஓடுவார்கள்.
இன்று ரோபோவின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு மருத்துவம் முன்னேறியிருக்கிறது. இருந்தாலும் மருத்துவரிடம் போக வேண்டும் என்றால் பலருக்கு நடுக்கம்தான். ஒரே ஒரு நிமிடம் ஆவியையும் சுத்தியலையும் பல்லி வாலையும் நினைத்துப் பார்த்துக்கொண்டால், சின்ன ஊசிக்கும் மாத்திரைக்கும் அவர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
ஓவியங்கள்: லலிதா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago