ஆ ஊ என்று சத்தம் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பான். எதையாவது போட்டு உடைப்பான், கத்துவான், அழுவான், அடம் பிடிப்பான். பியானோவின் முன்னால் அக்கா மரியா அமரும்வரை தான் எல்லா ரகளையும்.
அவர் வாசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், முற்றிலும் புதிய மொசார்ட்டை நீங்கள் பார்க்க முடியும். எல்லா சேட்டைகளும் அடங்கிவிடும். மரியாவின் பின்னால் போய் ஒரு முயல் குட்டிபோல் சாதுவாக நிற்பான். எவ்வளவு நேரமானாலும் சரி. ஒரு சின்ன சத்தம்கூட வராது.
இந்த வாண்டா இவ்வளவு நேரம் வீட்டையே உடைத்து நொறுக்கிக்கொண்டிருந்தது என்று அப்பா லியோபோல்ட் மொசார்ட்டும் மற்றவர்களைப் போலவே திகைத்துதான் போனார். மூன்று வயதுக் குழந்தை எப்படி இசைக்குக் கட்டுப்பட்டு அழாமல் நிற்கிறது? என்ன புரிகிறது என்று அக்காவின் விரல்களையே பார்த்துக்கொண்டு நிற்கிறது? இசைதான் அவர் தொழில்.
வயலின் வாசிப்பது எப்படி என்ற ஒரு புத்தகத்தை 1756-ம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்டிருந்தார். மொசார்ட் பிறந்ததும் அதே ஆண்டுதான். அப்படியானால் இசைக்கும் என் குழந்தைக்கும் அழுத்தமான பிணைப்பு இருக்கிறதா?
ஐந்து வயதாகும்போது ஒரு நாள் நாற்காலியை இழுத்துவந்து மொசார்ட்டைத் தூக்கி உட்கார வைத்தார் அப்பா. ஒவ்வொரு விரலாக எடுத்து விசையின் மீது வைத்து அழுத்தினார். என்னையும் அக்காவையும்போல் நீயும் இசை கற்றுக்கொள்ளப் போகிறாயா மொசார்ட்? இது உனக்குப் பிடித்திருக்கிறதா? குழந்தையின் விரல்களின் மேல் தன் விரல்களை வைத்து ஒரு சிறிய பாடலை இசைத்துக் காட்டினார்.
“இந்தா, இப்போது நீ வாசி பார்க்கலாம்.” உண்மையில் ஓர் இசை மேதையை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்து அவர் இதைத் தொடங்கவில்லை. கொஞ்ச நேரம் மொசார்ட் குறும்புகள் செய்யாமல் இருந்தால் அந்த வீடு மட்டுமல்ல, அந்தத் தெருவே அமைதியாக இருக்கும் அல்லவா?
அப்படிதான் நடந்தது. ஆனால் அப்பா ஆச்சரியம் அடையும் அளவுக்கு மொசார்ட்டின் சின்னஞ்சிறிய விரல்கள் விசைகளோடு சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டன.
சின்னச் சின்ன இசைக் கோவைகளாகத் தேர்ந்தெடுத்து அப்பா அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். எதையும் இரண்டு, மூன்று முறை மட்டுமே இசைத்துக் காட்ட வேண்டியிருந்தது. அப்பா நகர்ந்ததும், அப்படியே அதை வாசித்துக் காட்டுவான் மொசார்ட். அச்சு அசலாக அப்படியே.
அப்படியானால், என் விரல்களின் அசைவுகளைக் கூர்மையாகக் கவனித்து மனப்பாடம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டானா? எனில், இசையின் மொழி மொசார்ட்டுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டதா? ஒரு குழந்தை உண்மையில் இது சாத்தியம்தானா?
மொசார்ட் வாசிப்பதைப் பார்க்கப் பார்க்க அப்பாவின் ஆச்சரியம் அதிகரித்துக்கொண்டே போனது. சற்றே பெரிய பாடல்களை, இசைக் கோவைகளை வாசித்துக் காட்டினார். மொசார்ட்டின் கூர்மையான காதுகள் அனைத்தையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டன. உள்வாங்கிக்கொண்ட அனைத்தையும் அவனுடைய மெலிந்த விரல்கள் அற்புதமாக வெளிப்படுத்தின. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் வாசிப்பது ஒரு குழந்தை என்றே கண்டுபிடிக்க முடியாது.
அடுத்தடுத்த நாட்களில் அவர் திகைப்பு நூறு மடங்கு அதிகரித்தது. இப்போது மொசார்ட் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறான்? இதை நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே? ஒருவேளை மரியா கற்றுக் கொடுத்திருப்பாளா? இல்லையே, அவளுக்கும்கூட இது தெரியாதே. கண்களை மூடி வாசித்துக்கொண்டிருந்த மொசார்ட்டை நெருங்கினார்.
”மொசார்ட், இதை யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தது?” மொசார்ட் அப்பாவை அண்ணாந்து பார்த்துச் சிரித்தான். “எப்படி வாசிக்க வேண்டும் என்று நீங்கள் கற்றுக் கொடுத்துவிட்டீர்கள் அல்லவா? அதான், நானே புதிதாக வாசித்துப் பார்த்தேன். நன்றாக இருக்கிறதா அப்பா?”
அள்ளி அணைத்துக்கொண்டார் அப்பா. பத்து வயது மரியாவையும் ஆறு வயது மொசார்ட்டையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரியாவில் உள்ள பெரிய மனிதர்களின் வீடுகளுக்குச் சென்றார். இசை நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டினார். ‘அடடா, அபாரமான குழந்தைகள், பிரமாதமான இசை. நீ கொடுத்து வைத்தவன் லியோபோல்ட். அது சரி, அந்த வாண்டின் பெயர் என்ன? எத்தனை துள்ளலோடு இசைக்கிறான் பாரேன்!’
குவிந்த பாராட்டுகளால் உற்சாகமடைந்த அப்பா பாரிஸ், லண்டன், சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளுக்குத் தன் குழந்தைகளை அழைத்துச் சென்றார். அரசர்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று அனைவரும் மொசார்ட்டின் திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். உன் வயது ஆறுதானா மொசார்ட் என்று திரும்பத் திரும்பக் கேட்டுத் திகைத்துப் போனார்கள்.
இது ஏதோ வித்தை என்று நினைத்த சிலர், மொசார்ட்டை மட்டும் வேறு ஓர் அறைக்கு அழைத்துச் சென்று வாசிக்கச் சொன்னார்கள். இன்னும் சில இசை வல்லுநர்கள் மொசார்ட்டுக்குத் தேர்வு வைத்துப் பார்த்தார்கள். பயமும் திகைப்பும் அதிர்ச்சியும் பொங்கத் தன்னைப் பார்த்தவர்களைக் கண்டு சிரித்தான் மொசார்ட். ”வேண்டுமானால் இதையே வயலினில் வாசித்துக் காட்டட்டுமா? அப்போது நம்புவீர்களா?”
ஒருமுறை ரோமில் உள்ள வாடிகன் நகருக்குச் சென்றிருந்தார்கள். அங்கே மயக்க வைக்கும் இசைக் கோவையைக் கேட்டான் மொசார்ட். அதை உடனே கற்றுக்கொள்ள வேண்டும் என்று மொசார்ட்டின் மனம் துடித்தது. இது போப்பின் பிரத்தியேகமான இசை. உன்னைப் போன்ற பொடியனுக்கு எல்லாம் கற்றுத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
ஓ, சரி என்று வீட்டுக்கு வந்த மொசார்ட், ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து மளமளவென்று தான் காலையில் கேட்ட இசைக் கோவையின் நொட்டேஷனை எழுதி முடித்தான். மறுநாள் போப் முன்னிலையில் மொசார்ட் அதை வாசித்துக் காட்டியபோது அவர் அதிர்ந்துவிட்டார்.
“இது ரகசியமானது அல்லவா? உனக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்?” மொசார்ட் குறும்புடன் சிரித்தான். “நேற்று காலை இந்தப் பக்கம் நடந்து செல்லும்போது கேட்டேன், வாசிப்பதற்கு அப்படி ஒன்றும் கடினமாக இல்லையே. இதை ஏன் ரகசியமாக வைத்திருக்கிறீர்கள்?”
போப்பிடம் இருந்து தங்கப் பதக்கத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியதுதான் தாமதம், பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் திரண்டு வந்துவிட்டார்கள். உங்கள் வாண்டு நிஜமாகவே ஒரு மேதை என்று வியந்தவர்களைப் பெருமிதத்துடன் பார்த்தார் அப்பா. அதற்குப் பிறகு அவர்கள் சொன்னதைக் கேட்டு அவருக்கு மயக்கமே வந்துவிட்டது. ‘இப்போதெல்லாம் அவன் குறும்பு எதுவும் செய்வதில்லை போலிருக்கிறதே. ஏதாவது புதிய விளையாட்டு பொம்மை வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களா?’
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago