செண்பகக் காட்டில் சிங்கராஜா வன உலாவுக்குக் கிளம்பியது. திடீரென்று ஒரு பெரிய முள் காலில் குத்திவிட்டது. வலி தாங்க முடியவில்லை. கால்களை ஊன்றாமல் நடந்து தன் குகைக்கு போய்ச் சேர்ந்தது.
குகைக்கு ஓடிவந்த கரடி, சிங்கராஜாவின் காலில் குத்திய முள்ளை வெளியே எடுத்து, மருந்தும் வைத்தது. சிறிது நேரத்தில் வலி குறைந்தது.
ஆனாலும் சிங்கராஜாவின் கோபம் குறையவில்லை. ”நான் இந்தக் காட்டுக்கு ராஜா. என்னை எப்படி இந்த முள் குத்தலாம்? அனைத்து விலங்குகளையும் உடனே அழையுங்கள்” என்று கட்டளை இட்டது.
விலங்குகள் வந்துசேர்ந்தன.
"என் காலில் ஒரு முள் குத்திவிட்டது. நீங்கள் இந்தக் காட்டிலுள்ள முட்கள் அனைத்தையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். ஒரு முள் செடி கூட இருக்கக் கூடாது. இனி முள் என் கண்ணில் தென்பட்டால் உங்களுக்குக் கடுமையான தண்டனை தருவேன்" என்று கர்ஜனையோடு சொன்னது சிங்கராஜா.
உத்தரவைக் கேட்டு அனைத்து விலங்குகளும் நடுங்கின. இந்தப் பெரிய காட்டிலுள்ள முட்களை எல்லாம் எப்படி அப்புறப்படுத்த முடியும் என்று மிரண்டன.
அருகில் நின்றிருந்த நரியின் முகத்தைப் பார்த்தன. புத்திசாலியான நரி, பல நேரங்களில் விலங்குகளைச் சிங்கராஜாவின் தண்டனையிலிருந்து காப்பாற்றியிருந்தது. சிங்கராஜாவிடமும் நரிக்கு ஓரளவு நல்ல பெயர் இருந்தது.
ஆனால் நரியோ, "அப்படியே ஆகட்டும் அரசே! இனி இந்தக் காட்டில் உங்களுக்கு முட்களால் எந்தத் துன்பமும் நிகழாது" என்று சொன்னது.
நரி சொன்னதைக் கேட்ட மற்ற விலங்குகள் திடுக்கிட்டன. ‘ஐயேர, நரி நம்மைக் காப்பாற்றுவான் என்று நினைத்தால், இப்போது அவனும் சிங்கராஜாவின் இந்த முட்டாள்தனமான உத்தரவை ஏற்றுக் கொண்டானே’ என்று வருந்தின.
சிங்கராஜா குகைக்குள் சென்றது.
"இப்படிச் சிங்கராஜாவிடம் வாக்கு கொடுத்து எங்களையும் மாட்டி விட்டுவிட்டாயே! காட்டிலுள்ள முட்கள் அனைத்தையும் நம்மால் அகற்ற முடியுமா?" என்று கேட்டது புலி.
நரி புன்னகை செய்தது.
"நண்பர்களே, நாளை காலை இந்தக் காட்டின் முக்கியமான பாதைகளிலுள்ள முட்களை அப்புறப்படுத்துவோம். மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டது நரி.
மறுநாள் விலங்குகள் அனைத்தும் கத்தி, அரிவாள்களோடு முட்களை அப்புறப்படுத்தத் தொடங்கின. ஆனால் நரி மட்டும் வேலை செய்ய வரவே இல்லை.
"பாருங்கள்... இந்த நரி நம்மை வேலை செய்ய வைத்துவிட்டு, அவன் எங்கோ போய் ஒளித்துகொண்டான். சிங்கராஜா வரட்டும். நரியைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டியதுதான்" என்று புலம்பியபடி விலங்குகள் தங்கள் வேலையைக் கவனித்தன.
சிறிது நேரத்தில் வேலை எப்படி நடக்கிறது என்பதைக் கண்காணிக்க, சிங்கராஜா வந்தது.
"அரசே! நாங்கள் எல்லோரும் காலையிலிருந்தே முட்களை அப்புறப்படுத்த ஆரம்பித்துவிட்டோம். ஆனால் நரி மட்டும் வேலை செய்ய வரவில்லை" என்று சிங்கராஜாவிடம் புகார் கொடுத்தது குரங்கு.
"என்ன சொல்கிறீர்கள்? நரி வேலை செய்ய வரவில்லையா?" என்று சிங்கராஜா கோபத்தோடு கேட்கும்போதே, நரி கைகளில் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தது.
"அரசே, வணக்கம்!"
"உன் வணக்கம் எல்லாம் இருக்கட்டும். விலங்குகள் எல்லாம் முட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும்போது, நீ மட்டும் எங்கே போயிருந்தாய்? நேற்று நீயும் முட்களை அகற்றுவேன் என்று சொன்னாய் அல்லவா?" என்று
சற்றுக் கோபத்தேரடு கேட்டது சிங்கராஜா.
"அரசே, இனி முட்களால் உங்களுக்குத் துன்பம் நிகழாது என்றுதான் சொன்னேன். அதற்காகத்தான் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் இவற்றைச் செய்தேன்!" என்று, நான்கு பொருட்களைப் பையிலிருந்து வெளியே எடுத்து வைத்தது நரி.
நரி எடுத்து வைத்த பொருட்களைப் பார்த்த சிங்கராஜா, "நான் சொன்ன வேலையை விட்டுவிட்டு எதையோ செய்துகொண்டு வந்திருக்கிறாய். இவை என்ன?" என்று கோபத்தோடு கேட்டது.
"அரசே, இவைதான் செருப்புகள். முட்கள் அடர்ந்து இருக்கும் பாதையில் இந்தச் செருப்புகளை அணிந்து செல்லுங்கள். உங்கள் கால்களில் முட்கள் குத்தாது. செடிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயற்கை அவற்றுக்குக் கொடுத்திருக்கும் ஆயுதம்தான் முட்கள். காடு முழுதுவதும் உள்ள முட்களை மட்டும் அகற்றிக் கொண்டிருந்தால், இந்த விலங்குகள் சொந்த வேலைகளைச் செய்ய முடியாதல்லவா? தேவையான இடங்களில் மட்டும் நாம் முட்களை அகற்றினால் போதுமே?" என்று சொன்னது நரி.
நரியின் பேச்சிலிருந்த உண்மையைப் புரிந்து கொண்ட சிங்கராஜா, "நரியே, நல்ல யோசனைதான் சொல்லியிருக்கிறாய். இனி முட்கள் இருக்கும் இடங்களில் இந்தச் செருப்புகளை அணிந்து கொள்கிறேன். விலங்குகள் எல்லாம் தங்கள் வேலைகளைக் கவனிக்கப் போகலாம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது.
"நண்பனே, உன்னைத் தவறாக நினைத்துவிட்டோம். உன் புத்திசாலித்தனத்தால் இப்போதும் எங்களைக் காப்பாற்றிவிட்டாய். நன்றி" என்று சொல்லிவிட்டு, விலங்குகள் தங்கள் வேலைகளைக் கவனிக்கச் சென்றன.ஓவியங்கள்: கிரிஜாகதை
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago