இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு டைரியின் கடிதம்

By மருதன்

அன்புள்ள ஆன் ஃபிராங்,

நான் உன்னுடைய டைரி. வழக்கமாக நீ எழுதுவாய், நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். இப்போது என் முறை. நான் உன்னிடம் ஒரு விஷயத்தை மனம் விட்டுப் பேசவேண்டும். நான் சொல்லப் போவதைக் கேட்டு நீ என்னிடம் கோபித்துக்கொள்ள மாட்டாய் என்று எனக்குத் தெரியும். நான் உன் தோழி அல்லவா? மேலும், உனக்குதான் கோபித்துக்கொள்ளத் தெரியாதே!

நீ என்னிடம் முதன் முதலாகப் பேசிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ‘நான் உன்னிடம் என்னைப் பற்றிய எல்லா ரகசியங்களையும் சொல்லப் போகிறேன். வேறு யாரிடமும் சொல்லாத இந்த ரகசியங்களை உன்னிடம் மட்டும் ஏன் சொல்கிறேன் தெரியுமா? உன்னை நான் நம்புகிறேன். நான் சொல்வதை நீ பாதுகாப்பாக வைத்திருப்பாய் என்று எனக்குத் தெரியும். நீ என் நெருங்கிய தோழியாக இருப்பாய் என்றும் எனக்குத் தெரியும்.’

ஆன், என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து இவ்வளவு தூரம் நம்பியது நீ மட்டும்தான். அப்படியானால், உன்னைப் போலவே நானும் என் ரகசியத்தை உன்னிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் அல்லவா? அதுதானே நியாயம்? சரி, நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். முதல் முறை பார்த்தபோது எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. சொல்வதற்குக் கஷ்டமாக இருக்கிறது என்றாலும் அதுதான் உண்மை. உன்னைக் கண்டு நான் பயந்தேன். நீ ஒரு யூதர் என்பது எனக்குத் தெரியும். யூதர்கள் ஜெர்மனியின் எதிரிகள். அவர்களோடு யாரும் பேசக் கூடாது. யாரும் நட்புடன் பழகக் கூடாது. பக்கத்திலேயே போகக் கூடாது. இவையெல்லாம் நானே படித்துக் கற்றுக்கொண்ட விஷயங்கள்.

எங்கே படித்தேன் என்று கேட்கிறாயா? நீ ஜெர்மனியில் பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்தாய். நான் பிறந்ததே நெதர்லாந்தில்தான். ஒரு பெரிய கடையில் புத்தகங்களோடு புத்தகமாக என்னையும் அடுக்கி வைத்திருந்தார்கள். ஒரு நாள் திடீரென்று தடியான புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்து என் பக்கத்தில் சாய்த்து வைத்துவிட்டார்கள். அப்பப்பா, எனக்கு மூச்சு முட்டிவிட்டது. தோள் எல்லாம் வலி.

சரி, அப்படி அதில் என்னதான் இருக்கிறது பார்ப்போம் என்று புரட்டிப் பார்த்தேன். அதை எழுதியவர் அடால்ஃப் ஹிட்லர். முரட்டுத்தனமான மொழி. கரடுமுரடான வார்த்தைகள். இருந்தும், எனக்குப் பொழுது போகவில்லை என்பதால் அதைப் படிக்க ஆரம்பித்தேன். யூதர்களைப் பற்றித் தவறாக நினைத்துக்கொண்டேன்.

idam 2jpg

ஒரு நாள், யாரோ கடைக்கு வந்து என்னை வாங்கிக்கொண்டு போய் உன் வீட்டில் வைத்துவிட்டார்கள். பார்த்த உடனே தெரிந்துவிட்டது அது ஒரு யூதரின் வீடு என்று. என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் உன்னைப் பார்த்தேன். அன்று உன் 13-வது பிறந்த நாள்.

தேதி நன்றாக நினைவில் இருக்கிறது. (டைரி அல்லவா?) 12 ஜூன் 1942. காலை 6 மணிக்கே நீ எழுந்துவிட்டாய். உனக்காகப் பலவிதமான பரிசுப் பொருட்கள் வரவேற்பறையில் காத்திருந்தன. புதிய ஆடை. பொம்மை. சாக்லேட். புத்தகங்கள். பிறகு நான்.

நீ மாடியிலிருந்து ஆசையுடன் இறங்கி வந்தாய். உனக்காகக் காத்துக்கொண்டிருந்த பரிசுப் பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்த்தாய். நீ என்னை எடுத்துவிடக் கூடாது என்று நான் நினைத்தபோது, சரியாக நீ என்னைதான் முதலில் எடுத்துக்கொண்டாய். ஆசையோடு எனக்கு ஒரு முத்தத்தையும் கொடுத்தாய்.

அதற்குப் பிறகு நீ என்னைவிட்டு ஒரு நொடிகூடப் பிரியவில்லை ஆன். தினமும் என்னை எடுத்து உன் மடியில் வைத்துக்கொள்வாய். உன் உணர்வுகளை என்னிடம் பகிர்ந்துகொள்வாய். உன் குழந்தைத்தனமான புன்னகை எனக்கு உடனடியாகப் பிடித்துப்போனது. உன் கண்களில் அன்பும் நேசமும் இருந்ததைக் கண்டேன். என்னை மட்டுமல்ல; அனைவரையும் நீ கனிவுடன் நடத்துவதைப் பார்த்தேன். யூதர்கள், ஜெர்மானியர்கள், நெதர்லாந்து மக்கள் என்றெல்லாம் நீ பிரித்துப் பார்க்கவில்லை. அப்படியானால் ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுக்கச் சொன்னார்? அவர்களுடன் சேராதே என்று ஏன் தடுத்தார்?

உன்னை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள், எல்லோரையும் நேசிக்க வேண்டும். மோசமானவர்களிடமும்கூட கொஞ்சம் அன்பு ஒட்டியிருக்கும் என்று ஒரு நாள் எழுதினாய். இன்னொரு நாள், இந்த உலகிலேயே மிகவும் வலிமையான ஆயுதம் மென்மை. அதைக் கொண்டு அனைவரையும் வென்றுவிடலாம் என்று எழுதினாய்.

ஹிட்லரிடம் வெறுப்பு மட்டுமே இருந்தது. அதை அவர் அனைவருக்கும் வழங்கினார். உன்னிடம் அன்பு மட்டுமே இருந்தது. அதை அள்ளி அள்ளி அனைவருக்கும் கொடுத்தாய். நல்லவர்களைக்கூட வெறுக்கச் சொன்னார் ஹிட்லர். எதிரிகளைக்கூட நேசி என்கிறாய் நீ. மனிதர்களைப் பிரிக்க விரும்பினார் ஹிட்லர்.

அனைவரும் இணைய வேண்டும் என்றாய் நீ. ஹிட்லருக்குப் பகையும் போரும் முக்கியம். உனக்கு அமைதியும் மகிழ்ச்சியும்தான் முக்கியம். இறுதியில் என்ன ஆனது தெரியுமா? உலகமே அஞ்சிய சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தோற்றுப் போனார். அவருடைய வெறுப்பு அழிந்து போனது. ஆனால் நீ வாழ்கிறாய், ஆன். உன் அன்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டிருக்கிறது.

மனிதர்களை மட்டும் நீ நேசிக்கவில்லை. சாதாரண ஒரு டைரியான என்னை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, கிட்டி என்று பெயரும் வைத்தாய். என் உடலில் இருந்த பக்கங்கள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. நானும் உன்னைப் போல் ஒரு சிறுமியாக மாறிவிட்டதை உணர்ந்தேன்.

நீ கொடுத்த உயிர், நான். உயிருள்ளவரை உன்னை நான் சுமந்துகொண்டிருப்பேன். உனக்குத் தெரியுமா? ஆன் ஃபிராங்கின் டைரி என்றுதான் என்னை எல்லோரும் அழைக்கிறார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?

என்றென்றும் உன் தோழி,
கிட்டி.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்