கதை: யார் உயர்ந்தவர்?

By கீர்த்தி

தோ

ட்டத்தில் ரோஜா, முல்லை, கனகாம்பரம் போன்ற பூச்செடிகள் இருந்தன. தக்காளி, கத்தரி, வெண்டைச் செடிகளும் தென்னை, முருங்கை போன்ற மரங்களும் இருந்தன.

தோட்டத்தைச் சுற்றிலும் கள்ளிச் செடிகளே வேலியாக நின்றிருந்தன. ஒரு பக்கம் மட்டும் பெரிய மூங்கில் கதவு செய்து பூட்டி வைத்திருந்தார் தோட்டக்காரர்.

“நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம்! நறுமணம் மிக்கப் பூக்களைப் பூக்கவும் செய்கிறோம். ஆனால் நம்மைச் சுற்றிலும் நிற்கும் செடிகளைப் பாரேன். உடலெங்கும் முட்களாகப் பார்க்கவே சகிக்கவில்லை” என்று தன் அருகில் நின்ற முல்லைக் கொடியிடம் சொன்னது ரோஜா செடி.

“ஆமாம், நீ கள்ளிச் செடிகளைப் பற்றித்தானே சொல்கிறாய்? நீ சொல்வது சரிதான். அழகான நம்மைச் சுற்றி அசிங்கமான இந்தச் செடிகளை ஏன் விட்டுவைத்திருக்கிறார்களோ என்று தெரியவில்லை” என்று அலுத்துக்கொண்டே சொன்னது முல்லைக் கொடி.

ரோஜாவும் முல்லையும் பேசுவதைத் தென்னை மரம் கேட்டுக்கொண்டிருந்தது. இது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான்.

ரோஜாவும் முல்லையும் எப்போதும் தங்கள் அழகு குறித்து தற்பெருமை பேசுவது மட்டுமின்றி, மற்ற செடி, கொடிகள் பற்றி கேலி செய்தும் வந்தன.

பூசணிக்காயைப் பார்த்தால், “கொஞ்சம் அளவோடு சாப்பிடக் கூடாதா?” என்று ரோஜா கேலி செய்யும். மரத்தில் காய்த்துத் தொங்கும் முருங்கைக் காய்களைப் பார்த்து, ”ஏய்... ஒல்லிப் பிச்சான்களா” என்று கிண்டல் செய்யும் முல்லை.

உயிரினங்களில் உயர்வு, தாழ்வு என்று எதுவும் இல்லை என்பதைக் கற்றுக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று நினைத்தது தென்னை மரம்.

அருகருகே நின்ற இரு கள்ளிச் செடிகளைப் பார்த்து சைகையால் ஏதோ சொன்னது.

தென்னையின் சைகையைப் புரிந்துகொண்ட கள்ளிச் செடிகள் இரண்டும் எதிர் எதிர்த் திசைகளில் சாய்ந்துகொண்டன. இப்போது கள்ளிச் செடிகளின் நடுவில் ஒரு பெரிய இடைவெளி உருவானது.

அந்த வழியே சென்ற இரண்டு ஆடுகள், கள்ளிச் செடிகளின் நடுவில் இருந்த இடைவெளி வழியே தோட்டத்துக்குள் புகுந்தன. அவை முதலில் புற்களை மேய்ந்தன. ஆடுகள் புற்களைச் சாப்பிடுவதை ரோஜாவும் முல்லையும் பார்த்துக்கொண்டு இருந்தன.

சிறிது நேரத்தில் ஆடுகளில் ஒன்று ரோஜாவை நோக்கி வந்தது. மற்றோர் ஆடு முல்லையை நோக்கிச் சென்றது.

ரோஜாவுக்கும் முல்லைக்கும் பகீர் என்று இருந்தது.

“ஆடுகள் வரும் வேகத்தைப் பார்த்தால் இன்று நம் இருவரையும் ஒரு வழி பண்ணிவிடுவதுபோல் தோன்றுகிறதே... இப்போது நாம் என்ன செய்யலாம்?” என்று நடுங்கியபடி சொன்னது ரோஜா செடி.

“நம்மால் என்ன செய்ய முடியும் ரோஜா? பேசாமல் ஆடுகளுக்கு இரையாக வேண்டியதுதான். நம்மை வளர்க்கும் தோட்டக்காரர் இப்போது இங்கு இருந்திருந்தால் ஆடுகளை விரட்டி விட்டிருப்பார். ஆனால் அவர் வெளியில் சென்றுவிட்டாரே...” என்று தன் வருத்தத்தைச் சொன்னது முல்லை.

இரு ஆடுகளும் அங்கும் இங்கும் இருந்த செடிகளை முகர்ந்து பார்த்துக்கொண்டே வந்தன. ரோஜா செடியின் அருகில் வந்த ஓர் ஆடு, அதன் இலையைக் கடிக்கத் தொடங்கியது. இன்னோர் ஆடு முல்லை இலையைக் கடிக்க ஆரம்பித்தது.

“ஐயோ, எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா? இந்த ஆடுகளின் வாயில் நாங்கள் இரையாகப் போகிறோமே” என்று அலறியது ரோஜா. முல்லையும் கதறியது.

திடீரென்று ஏதோ விழுந்ததுபோல் சத்தம் கேட்டது. மிரண்டு போன ஆடுகள், கள்ளிச் செடிகளின் இடைவெளி வழியே பாய்ந்து வெளியே ஓடிவிட்டன.

ரோஜாவும் முல்லையும் நிம்மதியடைந்தன. நன்றியோடு தென்னை மரத்தைப் பார்த்தன.

“எங்களுக்கு ஆபத்து என்றவுடன் தேங்காய்களை விழச் செய்து, ஆடுகளை விரட்டி விட்டாய். உன்னைப்போல் ஒரு நண்பன் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டோம்” என்று இரண்டும் ஒரே குரலில் கூறின.

“நான் ஒன்றும் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. தினம் தினம் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டிருப்பது கள்ளிச் செடிகள்தான். முட்கள் கொண்ட கள்ளிச் செடிகள் வேலியாக இருப்பதால்தான் ஆடுகளும் மாடுகளும் உள்ளே நுழையாமல் இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் ஆடுகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. கள்ளிச் செடியின் முட்களுக்குப் பயந்துதான் ஆடுகள் இந்தப் பக்கம் வருவதில்லை. இன்று அவை சற்று விலகியதால்தான் ஆடுகள் புகுந்தன. உங்களுக்குப் பெரிய ஆபத்து காத்திருந்தது” என்று சொன்னது தென்னை.

ரோஜாவும் முல்லையும் கள்ளிச் செடிகளைப் பார்த்து, “எங்களை மன்னித்து விடுங்கள். இந்த உலகில் எந்த உயிரும் தாழ்ந்ததில்லை என்பதைப் புரிந்துகொண்டோம். இனி யாரையும் இழிவாக நினைக்க மாட்டோம்” என்று ஒன்றாகக் கூறின.

கள்ளிச் செடிகள் மகிழ்ச்சியோடு தலையாட்டின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்