ந
ல்லவேளையாக லியனார்டோ பள்ளிக்கூடம் சென்றதில்லை. ஒருவேளை சென்றிருந்தால், ஏதேனும் ஓர் ஆசிரியர் தெரியாத்தனமாக அவரிடம் வந்து, “வளர்ந்து பெரியவன் ஆனதும் நீ என்னவாகப் போகிறாய் லியனார்டோ?” என்று கேட்டிருப்பார். அப்படிக் கேட்டுவிட்டால் முடிந்தது கதை. ரயில் பெட்டியைப்போல் பதில் உருண்டோடி வரும். என்ன செய்தாலும் நிறுத்தவே முடியாது.
“எனக்கு ஆசைகள் அதிகம் இல்லை. முடிந்தால் ஒரு சிற்பியாக வேண்டும். பிறகு ஓர் ஓவியராக வேண்டும். பிறகு கணிதவியல் நிபுணர். அப்படியே பொறியியல் நிபுணராக வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் அறிவியல் அறிஞர் ஆகலாம். கையோடு வரலாற்றுத் துறையிலும் சில ஆய்வுகள் செய்ய வேண்டும். அப்புறம் என்ன, தாவரவியலும் விலங்கியலும் கற்க முடிந்தால் மகிழ்ச்சி. நேரம் இருந்தால் கட்டிடக் கலையில் தேர்ச்சிபெற வேண்டும். மருத்துவம், மருத்துவம் என்கிறார்களே அதையும் கொஞ்சம் தெரிந்துகொள்ள முடிந்தால் நல்லது. நிலம், காற்று, மேகம், நிலா ஆகியவற்றைப் பற்றியும் ஓரளவாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசை. அடடா, இசையை மறந்துவிட்டேனே! அதுவும் கொஞ்சம். பிறகு நேரம் கிடைத்தால் அப்படியே... ”
“சரி, சரி போதும். உட்கார்ந்து பாடத்தை எழுது” என்று சொன்னால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும். நோட்டைத் திறந்து வைத்துக்கொண்டு கடகடவென்று வலது கையால் எழுதுவார். பிறகு பென்சிலை மாற்றி இடது கையால் எழுத ஆரம்பிப்பார். அதுவும் எப்படி? இரண்டு கைகளிலும் ஒரே வேகத்துடன் எழுதுவார். முத்து முத்தாக ஒரே மாதிரியான கையெழுத்து. லியனார்டோ ஏன் இரண்டு கைககளில் எழுதுகிறாய் என்று கேட்டால், அதற்கொரு விளக்கம் அளிப்பார்.
“ஏன் நாம் வலது கையில் மட்டும் எழுதுகிறோம்? ஒரு கையில்தான் எழுத வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இடது கை என்ன தவறு செய்தது? அதுவும் கை தானே? அதை எழுதுவதற்குப் பழக்கப்படுத்தினால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். முதலில் கஷ்டமாக இருந்தது. எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள். சிலர் சிரித்தார்கள். ஆனால் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் கையெழுத்து நன்றாக வரவில்லை. வலது கையில் ஒரு பக்கம் எழுதும் நேரத்தில் இடது கையில் மூன்று வரிகள் மட்டுமே எழுத முடிந்தது. ஆனால் நான் பரிசோதனையை நிறுத்தவே இல்லை. சில மாதங்களில் வேகம் கூடிவிட்டது, கையெழுத்தும் நன்றாக மாறிவிட்டது.”
“சரி இப்போது திருப்தியா?” என்று ஆசிரியர் கேட்டால், மறுப்பார். “இல்லை, அடுத்த பரிசோதனையை ஆரம்பித்தேன். தனித்தனியே இரு கைகளிலும் நன்றாக எழுத முடிகிறது. ஆனால் அது போதுமா? ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். நினைத்துப் பார்க்கும்போதே சுவாரஸ்யமாக இருந்தது. அதையும்தான் பார்த்துவிடுவோமே என்று களத்தில் இறங்கினேன். இரண்டு நோட்டு, இரண்டு பென்சில்களை எடுத்துக்கொண்டேன். இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் எழுத ஆரம்பித்தேன். நான் நினைத்ததைப்போல் அத்தனை எளிதாக இல்லை.
இடது கை ஒழுங்காக எழுதிக்கொண்டே போகும்போது வலது கை நின்றுவிடும். வலது கையில் கவனம் செலுத்தி எழுத ஆரம்பித்தால் இடது, ஓய்வெடுக்க ஆரம்பித்துவிடும். அதை ஒரு கிள்ளு கிள்ளி எழுப்பிவிட வேண்டும். பென்சில்கள் உடைந்தன. நிறைய காகிதங்கள் வீணாகின. நேரமும் அதிகம் எடுத்துக்கொண்டது. போகட்டும், ஒரு விஷயத்தைப் புதிதாகக் கற்பது என்றால் சும்மாவா என்று தொடர்ந்து முன்னேறினேன். முன்பாவது சிரித்தார்கள். இப்போது கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நீ ஏன் இதை எல்லாம் செய்ய வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? இதனால் என்ன பலன்?
இப்படித்தான் படிக்க வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும், இப்படிதான் யோசிக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் ஏன் அப்படிப் படிக்க வேண்டும், ஏன் அப்படி எழுத வேண்டும், ஏன் வேறு மாதிரி யோசிக்கக் கூடாது என்று கேட்பேன். எனக்குப் பரிசோதனைகள் செய்யப் பிடிக்கும். ஒருவேளை நான் ஆக்டோபஸாக இருந்திருந்தால் எல்லாக் கைகளிலும் ஒரே நேரத்தில் எழுதப் பழகியிருப்பேன். ஆனால் எனக்கு இருப்பதோ இரண்டு கைகள்தான்.
இரண்டையும் முடிந்தவரை பயன்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். இருப்பது ஒரு மூளை. அதற்கு விதவிதமான சவால்களை அளித்து திணறடிக்க விரும்புகிறேன்.”
இவ்வளவு திணறடித்தது போதாதா என்றால் போதாது என்பார். “ஒன்று முடிந்தால் அடுத்தது. அது முடிந்தால் இன்னொன்று. இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் எழுத முடியும் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். இடமிருந்து வலமாக மட்டுமின்றி, வலமிருந்து இடமாகவும் என்னால் எழுத முடியும். ஆனால் அதை முகம் பார்க்கும் கண்ணாடி மூலம்தான் படிக்க முடியும். அடுத்து ஒரு கையில் கணக்கு போட்டுக்கொண்டே இன்னொரு கையில் ஓவியம் வரைய முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒரு கையில் சாப்பிட்டுக்கொண்டே இன்னொரு கையால் சிற்பம் வடிக்க முடியுமா? இரண்டு புத்தகங்களைத் திறந்து வைத்துக்கொண்டு இரண்டையும் ஒரே நேரத்தில் படிக்க முடியுமா? ஒரு கையில் புத்தகத்தைப் பிடித்துப் படித்துக்கொண்டே இன்னொரு கையில் கதை எழுத முடியுமா? பிறகு, ஒரு கையில்...”
லியனார்டோ சொல்லி முடிப்பதற்கள் அந்த ஆசிரியர் தலை சுற்றி மயக்கம் போட்டு விழுந்துவிடுவார். இதெல்லாம் கதையல்ல, உண்மை. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே லியனார்டோ டா வின்சி, வெவ்வேறு துறைகள் பற்றி கிட்டத்தட்ட 7,200 பக்கங்கள் எழுதி வைத்திருக்கிறார். மோனலிசா போன்ற புகழ்பெற்ற ஓவியங்கள் இன்னொரு பக்கம் குவிந்து கிடக்கின்றன. ஹெலிகாப்டர், பாராசூட், ராணுவ டாங்கி என்று தொடங்கி பலவற்றை அப்போதே கற்பனை செய்து பார்த்திருக்கிறார். மனித உடலுக்கு உள்ளே என்னென்ன இருக்கும் என்பதைக் கஷ்டப்பட்டுத் தெரிந்துகொண்டு (அது ஒரு பெரிய கதை!) துல்லியமாக வரைந்திருக்கிறார். கணிதம் முதல் இலக்கியம்வரை; கலை முதல் அறிவியல்வரை எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டிருக்கிறார்.
இருந்தும் லியனார்டோவுக்கு ரொம்பவும் வருத்தம். நான் செய்ய விரும்பியதில் ஒரு சதவீதத்தைக்கூட செய்ய முடியவில்லை. இரண்டு கைகளைப் பயன்படுத்தியதைப்போல் இந்தக் கால்களையும் ஏதாவது செய்யப் பழக்கப்படுத்தியிருக்க வேண்டுமோ! அவை சும்மாதானே இருக்கின்றன!
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago