இடம் பொருள் மனிதர் விலங்கு: சத்தமாகப் படிப்போம்!

By மருதன்

 

‘‘சீ

க்கிரம், இன்னும் ஒரு நிமிடத்தில் ஆரம்பமாகிவிடும்” என்று பாட்டி ஓர் அதட்டுப் போட்டதும் வீடே பரபரப்பாகிவிட்டது. ‘‘அட, எப்படி மறந்து போனேன்” என்று அப்பா அரக்கப் பரக்க ஓடிவந்தார். பக்கத்து வீட்டில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த அம்மா, ‘‘ஐயோ, மன்னிக்கவும் நாளை பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடினார். சுகமாகக் காலை நீட்டி படுத்துக்கொண்டிருந்த சித்தப்பா, விருட்டென்று எழுந்து உட்கார்ந்துகொண்டார். ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருந்த சித்தி, எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுப் பக்கத்து அறைக்குள் விரைந்தார். இல்லை, இல்லை பறந்தார்.

விரைவில் எல்லோரும் அவரவர் இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர். குட்டிக் குழந்தைகள்கூடப் பாய்ந்தோடி வந்து அம்மா மடியிலும் அப்பா மடியிலும் தாவி உட்கார்ந்துகொண்டார்கள். அறைக்கு நடுவில் தாத்தா ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்திருந்தார். சாய்வு நாற்காலியில் இருந்த பாட்டி, சுற்றிலும் ஒருமுறை பார்வையைச் சூழலவிட்டுவிட்டு, ‘ம்… ஆரம்பிக்கலாம்’ என்பதுபோல் தாத்தாவை நிமிர்ந்து பார்த்தார்.

தாத்தா தொண்டையைக் கனைத்துக்கொண்டார். அவருக்கு முன்னால் சிறிய மேஜை இருந்தது. அதில் ஒரு மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. அது மட்டும்தான் அங்கிருந்த ஒரே வெளிச்சம். பக்கத்தில் ஒரு புத்தகம். தாத்தா அதைக் கவனமாகக் கையில் எடுத்தார். அட்டையை ஒருமுறை ஆசையாகத் தடவிக் கொடுத்துவிட்டு, எங்கே வலிக்கப் போகிறதோ என்பதுபோல் நிதானமாகப் பிரித்தார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி, நேற்று படித்துமுடித்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். பிறகு நிறுத்தி நிதானமாகப் படிக்க ஆரம்பித்தார்.

அப்போது அந்த மாயம் நிகழ்ந்தது. தாத்தாவிடம் இருந்து உருண்டு வந்த சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீடு முழுக்கப் பரவ ஆரம்பித்தன. குளிரும் இருளும் சட்டென்று மறைந்துவிட்டன. அவை மட்டுமா? அப்பாவும் அம்மாவும் சித்தப்பாவும் சித்தியும் குழந்தைகளும்கூட மெல்ல மெல்ல அங்கிருந்து காணாமல் போய்விட்டார்கள். சொற்கள் எல்லோரையும் ஒரு மாயக் கயிற்றால் கட்டி அப்படியே குண்டுகட்டாகத் தூக்கிக்கொண்டு வேறோர் உலகுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டன.

ஒவ்வொரு முறை தாத்தா படிக்க ஆரம்பிக்கும்போதும் இந்த மாயம் நிகழ்வது வழக்கம். தாத்தா காடு பற்றிப் படித்தால் ஒட்டுமொத்த வீடும் காட்டுக்குள் போய்விடும். அருவியைப் பற்றிப் படித்தால் அனைவரும் நனைந்தபடி நடுங்கிக்கொண்டிருப்பார்கள். தேவதைக் கதைகளை அவர் படிக்க ஆரம்பித்தால் அனைவருக்கும் இறக்கைகள் முளைத்துவிடும்.

தாத்தா பொல்லாதவர். சில நேரம் பேய்க் கதைகளையும் படிப்பார். அதுவும் கும்மிருட்டில். குழந்தைகள் அம்மாவை இறுக அணைத்துக்கொள்வார்கள். அப்பா மட்டும் என்னவாம், ஓடிப் போய் பாட்டியின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார். எல்லோரும் பயப்படுவதைப் பார்க்கும்போது தாத்தாவுக்கு உற்சாகம் அதிகரித்துவிடும். திடீரென்று குரலை உயர்த்துவார். சட்டென்று கிசுகிசுப்பார். அந்த மெகுவர்த்தி ஒளியில் பார்க்கும்போது சில நேரம் தாத்தாவின் முகமே பயங்கரமாக இருக்கும்!

18-ம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் புத்தகம் இப்படிதான் வாசிக்கப்பட்டது. யாராவது ஒருவர் வீட்டுக்கு நடுவில் அமர்ந்து வாய்விட்டுப் படிக்க வேண்டும். சுற்றிலும் மற்றவர்கள் அமர்ந்து கேட்டு ரசிக்க வேண்டும். ‘அந்தப் பையன் ஒரே ஒரு கையில் கிளையைப் பிடித்தபடி தொங்கிக்கொண்டிருந்தான். கீழே ஒரு முதலை வாயைப் பிளந்துகொண்டு காத்துக்கொண்டிருந்தது...’ என்று சொல்லிவிட்டு, தாத்தா புத்தகத்தை மூடிவிடுவார். மிச்சம் நாளைக்குதானாம். நாளை இரவுவரை அந்தப் பையன் அங்கேயே தொங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! அந்த மரக்கிளை வலுவாக இருக்க வேண்டுமே என்று நினைத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இப்போதுள்ளதைப்போல எல்லோருக்கும் அப்போது புத்தகம் சர்வசாதாரணமாகக் கிடைக்கவில்லை. விலையும் அதிகம். எனவே புத்தகத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். இது போக, இன்னொரு சிக்கலும் இருந்தது. தாத்தா மட்டும் படித்தால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்குப் பொழுது போக வேண்டுமல்லவா? எனவே எல்லோரும் மகிழும்படி புத்தகத்தை வாய்விட்டுப் படித்தார்கள். இன்று தாத்தா. நாளை அப்பா படிப்பார். இன்னொரு நாள் சித்தி. குடு, நானும் படிப்பேனாக்கும் என்று பாட்டி கூடப் பெரிய கண்ணாடிக்குள் கண்களை உருட்டி உருட்டி நடுங்கும் குரலில் படித்துக் காட்டுவார். ஐயோ, மீண்டும் பேய்க் கதை!

18chsuj_Idam1.jpg

பிறகு நவீன அச்சகங்கள் உலகம் முழுக்க முளைக்க ஆரம்பித்தன. செய்தித்தாள்களும் புத்தகங்களும் ஆயிரக்கணக்கில் வெளிவர ஆரம்பித்தன. ஒவ்வொருவரும் தனக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தனியே வாங்கிக்கொள்ள முடிந்தது. புத்தகத்தைத் துணி போட்டு மூடிப் பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் தொலைந்தது. அதேபோல் புத்தகத்தை வாய் விட்டு வாசித்துக் காட்டும் பழக்கமும் மறைந்து போனது. தாத்தா தன்னுடைய செய்தித்தாளைப் பிரித்து வைத்துக்கொண்டு அமைதியாக ஓரிடத்தில் படிப்பார். அப்பா இன்னோர் அறையில் தன் புத்தகத்தைப் படிப்பார். சித்தப்பாவுக்கும் சித்திக்கும் தனித்தனி புத்தகங்கள். அவரவருக்குப் பிடித்தமானதை அவரவர் படிக்கவேண்டும். அதுவும் அமைதியாக.

விசித்திரத்தைப் பாருங்கள். நூற்றாண்டுகளுக்கு முன்பு, வசதி வாய்ப்புகள் இல்லாதபோது, வீட்டிலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புத்தகத்தைப் படித்தும் கேட்டும் மகிழ்ந்தார்கள். தொழில்நுட்பம் வளர்ந்து, புத்தகங்கள் பெருகிய பிறகு யாரும் இப்படி ஒன்று சேர்வதும் இல்லை, வாய்விட்டுப் படிப்பதும் இல்லை. தீவுபோல் தனித்தனியே புத்தகத்தை வைத்துக்கொண்டு உம்மென்று உட்கார்ந்திருக்கிறார்கள்.

இந்த வழக்கத்தை மாற்றுவோம். வாய்விட்டு ஒரு கதையைப் படித்தால் என்ன மாயம் நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம். நண்பர்களையும் வீட்டிலுள்ளவர்களையும் திரட்டி, வீடு, பூங்கா, கடற்கரை, வகுப்பறை என்று எல்லா இடங்களிலும் சத்தம் போட்டுப் படிப்போம். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் அந்தக் குட்டி பையனுக்காக. அவனுக்கு என்னதான் ஆனது என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? பாவம், எவ்வளவு காலம்தான் அந்தக் கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருப்பான்?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்